வெருகலம்பதி முருகன் ஆலயம் மணல் அரிப்புக்குள் உள்ளாகி எதிர் காலத்தில் காப்பாற்றமுடியாமல் போய்விடும்

மட்டக்களப்பு வாகரையிலுள்ள வெருகல் பிரதேசத்தில் நடைபெறும் மணல் அகழ்வு பணியினை இடை நிறுத்தி தருமாறு கோரி வாகரை பிரதேச சபை தவிசாளர் பிரதேச செயலாளரிடம் மகஜரை சமர்ப்பித்தார்.

வாகரை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வெருகல் ஆற்றுப் பிரதேசத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மணல் அகழ்வில் ஈடுபடுவதினால் குறித்த பிரதேசத்தில் எதிர்காலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதுடன் அண்டிய பகுதியில் வாழும் மக்கள் பாதிக்கப்படுவதுடன் அப்பகுதியிலுள்ள வரலாற்று சிறப்பு மிக்க வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயமும் மண்ணரிப்புக்கு உள்ளாகி சேதமடையும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்து

குறித்த விடயம் தொடர்பாக இன்று தவிசாளர் தலைமையில் விசேட சபை அமர்வு கூடி தீர்மானம் நிiவேற்றியதுடன் இந் நிலமையினை தடுப்பதற்கு குறித்த ஆற்றுப் பகுதியில் வழங்கப்பட்டுள்ள மணல் அகழ்வு அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு கோரி வாகரை பிரதேச சபை தவிசாளர் எஸ்.கோணலிங்கம் மற்றும் சபை உறுப்பினர்கள் ஒன்றினைந்து வாகரை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கரனிடம் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை இன்று புதன் கிழமை கையளித்தனர்.

இதன்போது மகஜரை பெற்றுக்கொண்ட பிரதேச செயலாளர் எஸ்.கரன் பின்வருமாறு கருத்துதெரிவித்தார்.

குறித்த பகுதியில் புவிச் சுரங்கப் பிரிவினரினால் 24 பேருக்கு அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 6 அனுமதிபத்திரங்கள் காலாவதியை அடைந்துள்ளது. புதிப்பித்தல் நடவடிக்கையில் ஏனையவை உள்ளது.குறித்த விடயம் தொடர்பாக

மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எதிர்காலத்தில் எடுக்கப்படும்.

தற்போது மண் சூரையாடல் முற்றுமுழுதாக தவிர்க்கப்பட்டுள்ளது. புதிதான அனுமதிப்பத்திரம் எவையும் வழங்கப்படவில்லை. சட்ட விரோதமான மண் அகழ்வுகள் இடம்பெறுகின்றது. வெளி மாவட்டத்திலுள்ளவர்களுக்கு என்னுடைய காலத்தில் எவ்விதமான அனுமதி பத்திரமும் வழங்கவில்லை. முன்னைய காலத்தில் 5 வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பத்திரம் தொடர்பான அரசியல் அழுத்தங்கள் என்னிடம் நாடிவரவில்லை, ஆனால் பிரதேச அபிவிருத்திக்குழு தீர்;மானதின்படி மண் அனுமதிப்பத்திரம் வழங்ககூடாது என தெரிவிக்கப்பட்டது எனவும் மேலும் தெரிவித்தார்.

வாகரை வடக்கு தவிசாளர் எஸ்.கோணலிங்கம் கருத்து தெரிவிக்கையில்:

குறித்த விடயம் தொடர்பாக பிரதேச செயலாளருக்கு மகஜர் வழங்கப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தையும் இடம்பெற்றது, ஆனால் அவை தீர்வைப் பெற்றுத்தரப்போதில்லை, நாங்கள் குறித்த பகுதியில் மணல் அகழ்வு தொடர்பில் மேல் மட்ட கலந்துரையாடல் மற்றும் ஏனைய சட்ட நடவடிக்கைக்கு செல்ல இருக்கின்றோம்.

பலரின் அரசியல் அழுத்தம் காரணமாக பல மணல் அகழ்வு அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகின்றது, குறிப்பாக வெருகலம்பதி முருகன் ஆலயம் மணல் அரிப்புக்குள் உள்ளாகி எதிர் காலத்தில் காப்பாற்றமுடியாமல் போய்விடும் என்பன போன்ற பல பிரச்சினைகள் காணப்படுகின்றது எனவும தெரிவித்தார்