வேல்சாமி தலைமையிலான கதிர்காம பாதயாத்திரை திருக்கோவில் முருகனாலயத்திலிருந்து ஜூன்17இல் ஆரம்பம்!

கதிர்காமநிலமேயின் வேண்டுகோளையேற்று வேல்சாமி தீர்மானம்.
(காரைதீவு  சகா)

வேல்சாமி தலைமையிலான கதிர்காம பாதயாத்திரைக்குழு இம்முறை எதிர்வரும் ஜூன்
மாதம் 17ஆம் திகதி திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி
ஆலயத்திலிருந்து பாதயாத்திரையை ஆரம்பிக்கவுள்ளது.
கதிர்காம ஆடிவேல்விழா உற்சவம் இம்முறை எதிர்வரும் ஜூலைமாதம் 3ஆம் திகதி
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 18ஆம் திகதி தீர்த்தோற்சவத்துன்
நிறைவடையவுள்ளது.

வழமையாக யாழ் . செல்வச்சந்நதி முருகன் ஆலயத்திலிருந்து புறப்படும்
வேல்சாமி தலைமையிலான இலங்கையின்மிகநீண்ட பாதயாத்திரை நாட்டில்நிலவும்
அசாதாரண சூழ்நிலைகருதி இம்முறை ரத்துச்செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.
எனினும் கதிர்காம தேவஸ்தான நிலமே நேரடியாகத் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு
தங்களது வழமையான பாதயாத்திரையை முற்றாக கைவிடாமல் இடையில் இருந்தாவது
ஆரம்பித்து கதிர்காமத்திற்கு வாருங்கள். பாதுகாப்பு ஏற்பாடு தொடக்கம் சகல
வசதிகளையும் செய்து தருகிறோம் என்று வேல்சாமியிடம் வேண்டுகோள்
விடுத்தார்.
மேலும் இந்துசமய ஆர்வலர்கள் நலன்விரும்பிகள் பாதயாத்திரீகர்கள் மற்றும்
ஆலோசகர்களினது வேண்டுகோளுக்கமையவும் இப் பாதயாத்திரையை மட்டுப்படுத்தி
திருக்கோவிலிலிருந்து ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஸ்ரீநந்தவன பிள்ளையார் கதிர்காமபாதயாத்திரை சங்கத்தின்
உயர்மட்டக்கூட்டம் நேற்று தலைவர் வேல்சாமி மகேஸ்வரன் தலைமையில் காரைதீவு
விபுலாநந்த பணியகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா
செயலாளர் இ.பாக்கியநாதன் பொருளாளர் ச.தேவதாஸ்  இந்துகலாசார மாவட்ட
உத்தியோகத்தர் கு.ஜெயராஜி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

அங்கு ஒரு மணிநேரம் கலந்துரையாடப்பட்டு இறுதியில் திருக்கோவில் ஸ்ரீ
சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
இதற்கென திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர்
சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையிலான ஆலயபரிபாலனசபையினர்
வழியனுப்புவைபவத்திற்கான விசேடபூஜையுடனான ஏற்பாடுகளைச்செய்துவருகின்றனர்.

17ஆம் திகதி திருக்கோவிலில் ஆரம்பித்து அன்று வினாயகபுரம்
மாணிக்கப்பிள்ளையாhர் ஆலயத்தில் மதியம் தங்கி தாமரைக்குளம் சீரடிசாயி
நிலையத்தில் தங்கி மறுநாள் 18ஆம் திகதி கோமாரியில் தங்குவர். 19ஆம் திகதி
குண்டுமடு 20ஆம் திகதி பொத்துவில் 21ஆம் திகதி பாணமையை அடைந்து  22 ஆம்
திகதி உகந்தைமலையை அடைவர்.
அங்கு தங்கியிருந்து காட்டுப்பாதை திறந்ததும் முதல் நாள் கானகத்தினுள்
காலடிஎடுத்துவைத்து யூலை2ஆம் திகதி கதிர்காமத்தைச் சென்றடைய
திட்டமிட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த 10ஆம் திகதி புறப்பட்ட
வேல்சாமிக்குழுவின் யாழ்.பாதயாத்திரீகர்கள் 35பேர் தற்சமயம் வற்றாப்பளை
கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து கிழக்கு நோக்கி பயணத்தைத்
தொடர்ந்துள்ளனர்.

அவர்களும் எதிர்வரும் ஜூன்16ஆம் திகதி திருக்கோவிலைச்சென்றடைந்து
வேல்சாமியுடன் இணைந்து அனைவரும் ஒன்றாக கதிர்காமம் நோக்கி
பயணிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்கது.