உளவியல் ஆலோசனை மையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் 31 ஆம் நாள் அஞ்சலி; பெருந்திரளாக மக்கள் கூடி சுடரேற்றினர்!

கேதீஸ் )

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று  பயங்கரவாதிகளால் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான தற்கொலை குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட உறவுகளின் 31 ஆம் நாள் அஞ்சலி நிகழ்வும் ,அமைதிப்பவனியும் உளவியல் ஆலோசனை மய்யத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நேற்று நடைபெற்றது.

நேற்று மாலை 4.30 மணியளவில் கல்லடி பாலத்தில் இருந்து மக்கள் அமைதிப்பவனியாக வெள்ளைக்கொடிகளை தாங்கியவாறு மட்டக்களப்பு காந்தி பூங்காவை சென்றடைந்தனர். பின்னர் காந்தி பூங்காவில் நினைவுச்சுடரேற்றி உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

இவ்வஞ்சலி நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் ஏ.தேவதாசன், மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர், சர்வமத ஒன்றியத்தினை சேர்ந்த சிவஸ்ரீ சிவபாதம் குருக்கள் உட்பட அருட்தந்தையர்கள், இந்து மதகுருமார்கள், பௌத்த மதகுருமார்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், பொலிஸ் மற்றும் இராணுவத்தினர்  உளவியல் ஆலோசனை மய்யத்தின் உறுப்பினர்கள், இந்து கிருஸ்தவ பௌத்த மதகுருக்கள், இளைஞர் அமைப்புக்கள், அனைத்து கட்சி அரசியல் பிரதிநிதிகள் ,பொது மக்கள் என பெருந்திரளானோர் பங்குபற்றி சுடரேற்றி கண்ணீர்சிந்தி அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசன் மகேசனால் முதல் சுடர் ஏற்றப்பட்டது அதனை தொடர்ந்து மதகுருமார்கள் உயிரிழந்தவர்களின் உறவினர்கள்அரச அதிகாரிகள் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர்  அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

காந்தி பூங்கா உட்பட மட்டக்களப்பு நகரில் 5000  நினைவுத்தீபங்கள் ஏற்ப்பட்டிருந்தன.