மகிழடித்தீவு வைத்தியசாலையினால் ஈ.ஹெல்த் காட் வழங்கி வைப்பு

மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்டவர்களின் சுகாதார அறிக்கையை மின்பதிவு செய்து அதற்கான மின்பதிவு சுகாதார அட்டைகளை உரிய நபர்களுக்கு வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையினால், சமுகத்தில் உள்ள 35வயதிற்குமேற்பட்டவர்களின் சுகாதார அறிக்கைகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன. இதனடிப்படையில் நேற்றைய தினமும் மகிழடித்தீவு, முதலைக்குடா கிராமங்களில் இப்பதிவு நடவடிக்கைகள் இடம்பெற்றன.

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் உள்ள 24கிராமசேவையாளர் பிரிவிலும் உள்ள 35வயதிற்கு மேற்பட்டவர்களை பதிவுசெய்து, அவர்களுக்கான சுகாதார அட்டைகளை எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் வழங்கி முடிப்பதற்கு எண்ணியுள்ளதாகவும் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி இதன்போது குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக மகிழடித்தீவு வைத்தியசாலையினால் இப்பதிவு நடவடிக்கைகள் நடைபெற்று, மின்பதிவுசுகாதார அட்டை வழங்கி வைக்கப்பட்டுள்ளமையும் எடுத்துக்காட்டத்தக்கது.

இதேவேளை, 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி உலக சுகாதார அமைப்பின் 71ஆவது மாநாட்டையொட்டி, ஜனாதிபதி தலைமையில் கொழும்பு தாமரைத் தடாகத்தில் ஈ-ஹெல்த் அட்டை இலங்கையில் முதன்முதல் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.