இலங்கை அரசாங்கம் மீது மனித உரிமை கண்காணிப்பகம் கடும் குற்றச்சாட்டு

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களாகிவிட்ட போதிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு இலங்கை அரசாங்கம் நீதி வழங்க தவறிவிட்டது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் 2015 ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை அரசாங்கம் யுத்தகால மீறல்களிற்கு நீதி வழங்குவதாகவும் மனித உரிமையை ஊக்குவிப்பதாகவும் உறுதியளித்தது  என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இந்த கடப்பாடுகள் தொடர்பில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் நீதி வழங்குவதற்கும் பொறுப்புக்கூறுவதற்கும் எந்த முயற்சிகளும் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

2009 இல் இலங்கையில் யுத்தம் முடிவிற்கு வந்தமை அழிக்கப்பட்ட வாழ்வைமீண்டும் கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை மாத்திரமல்லாமல் உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றிற்கான மதிப்பை மீண்டும் உருவாக்குவதற்கான வாய்ப்பையும் வழங்கியிருந்தது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி  தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கையின் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் இந்த வாய்ப்பை தவறவிட்டுள்ளனர்எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இருதரப்பினதும் அநீதிகளை விசாரணை செய்யவும் அவை தவறிவிட்டன,யுத்த குற்றங்களிற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறச்செய்ய தவறிவிட்டன,பாதிக்கப்பட்டவர்களிற்கு உண்மை மற்றும்  இழப்பீட்டை வழங்க தவறிவிட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பத்தாண்டுகளாகின்ற நிலையிலும் உயிர்த்தஞாயிறு  குண்டுவெடிப்புகளிற்கு பின்னரும் அனைத்து இலங்கையர்களினதும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்குஇலங்கை அரசாங்கம்; மீண்டும் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளவேண்டும்  எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இது நடைபெறவேண்டும் என்றால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்குவது இழப்பீடு வழங்குவது உட்பட தனது கடப்பாடுகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் எனவும் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.