மாணவர்கள் வீதியால்வரும்போது இனந்தெரியாதபொருட்களை தொடவேண்டாம்!

இன்று காரைதீவில் வெலிகந்த இராணுவஅதிகாரி  கேர்ணல் திலக் ரணசிங்க அறிவுரை!
காரைதீவு  நிருபர் சகா
 
பாடசாலையில் பெரும்பாலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மாணவர்கள் வீதியால் பாடசாலைக்கு வரும்போதும் செல்லும்போதும் தெருவில் காணப்படும் இனந்தெரியாத பொருட்களைத் தொடவேண்டாம்.

 
இவ்வாறு வெலிகந்த இராணுவமுகாம் பொறுப்பதிகாரி கேர்ணல் திலக் ரணசிங்க காரைதீவிலுள்ள பாடசாலைகளின் பாதுகாப்புக்குழுக்கள் மத்தியில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
 
காரைதீவிலுள்ள ஏழு பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட பாதுகாப்புக்குழுக்களுக்கான அவசரக்கூட்டம் இன்று (17) வெள்ளிக்கிழமை காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
 
அக்கரைப்பற்று இராணுவமுகாம் அதிகாரி மேஜர் ஜெயசேனவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கேர்ணல் திலக்ரணசிங்க மேலும் பேசியதாவது:
 
பாடசாலை மாணவர்களால் விரும்பப்படும் பொம்மை ரோர்ச்லைற் போத்தல் விளையாட்டுப்பொருட்கள் போன்று இருக்கும் பொருட்கள் வீதிகளில் கிடக்கலாம். ஆனால் அவற்றுக்குள் குண்டு மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம். எனவே அவற்றை எந்தக்காரணம்கொண்டும் தொட்டும் பார்க்கவேண்டாம்.
 
ஜ.எஸ்.பயங்கரவாதிகளில் இலங்கையில் 99வீதம்அழிக்கப்பட்டுவிட்டார்கள். அதற்கான முஸ்லிம்கள் எல்லாம்பயங்கரவாதிகள் அல்ல. ஒருவீதத்தினர் உதவலாம். 
 
நாம் புலிகளின் 30வருட யுத்தத்ததைக் கண்டவர்கள். அதுபோன்று இதுஇல்லை. எனினும்  எமது 10வருட நிம்மதியான வாழ்க்கையைக்கெடுத்துள்ளார்கள். இதற்கு பொதுமக்களாகிய நீங்கள் எங்களுடன் தொடர்புவைத்துக்கொண்டால் முறியடிக்கலாம்.
 
சிலர் இந்தப்பிரச்சினையை சாதகமாகவைத்துக்கொண்டு வேறுசிலதீய நடவடிக்கையிலும் ஈடுபடலாம். அதற்கும் இடமளிக்கவேண்டாம். பயம்காட்டி விரட்ட முனையலாம்.
ஏதாவது இனந்தெரியாத நபர்கள் வாகனங்கள் இருந்தால் உடனடியாக எம்முனட தொடர்புகொள்ளுங்கள். பிரிகேட் கொமாண்டர் 0766507157 அல்லது காரைதீவு பொறுப்பதிகாரி 0773970622 என்ற இலக்கத்தோடு தொடர்புகொள்ளலாம். 
 
மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புங்கள் பயப்படவேண்டாம்.அனைவரும் நிம்மதியாக வாழவேண்டும்.அதற்காக பாதுகாப்புத்தரப்புடன்  ஒத்துழைக்கவேண்டுகிறோம். என்றார்.
பாதுகாப்புக்குழுக்கள் சார்பில் சிலகருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
 
கடற்கரைவீதியில் சோதனைச்சாவடி வேண்டும். பாடசாலைகளுக்கு ஆயுதமில்லாத ஊர்காவல்படையை விட ஆயுதத்துடனுள்ள இராணுவம் வேண்டும். முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றப்படுவதால் ஆசிரியரின்மை ஏற்படுகின்றது.அதனால் பிள்ளைகள் பாடசாலைக்கு வருவதில்லை. என்றனர்.