கிழக்குமாகாண ஆளுநர்ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை கொள்வனவு செய்துள்ளார் இதன் நோக்கம் என்ன என்பது ஆராயப்பட வேண்டும்.

(நன்றி மட்டுநியுஸ்)

கிழக்கு மாகாண ஆளுனரினால் கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் தொடர்பில் பூரண விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

வெருகல் பிரதேசத்தில் இராமர்தீவு என்னும் இடத்தில் முன்னாள் கடற்புலிகளின் தளமாக இருந்த காணியும் கிழக்கு மாகாண ஆளுனரினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இங்கு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து நீதி அமைச்சு ஊடாக சமாதான நீதிபதிகளா தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று காலை அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனின் சிபார்சுக்கு அமைவாக இந்த சமாதான நீதிவான்களுக்கான நியமனங்களை நீதியமைச்சு வழங்கியுள்ளது.அதனை கையளிக்கும் நிகழ்வினை தொடர்ந்து ஊடகங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவித்தார்.
இன்று நாட்டில் இஸ்லாமிய மக்கள் அச்சத்துடனும் பீதியுடனும் வாழ்ந்துவரும் நிலையில் அது தொடர்பில் இஸ்லாமிய அரசியல்வாதிகள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சியினர் கொண்டுவரும் பல விடயங்கள் இந்த நாட்டில் மேலும் மேலும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை கொண்டுவரும் விடயமாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 21 சம்பவத்தின் பின்னர் பல்வேறு பக்க விளைவுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இராணுவப் பிரசன்னம் குவிக்கப்பட்டிருக்கின்றது. தேடுதல்கள் இடம்பெறுகின்றன, பலரும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். இவை தேவையற்ற விடயம் என்று கூறிவிட முடியாது.

இருப்பினும் யாழ்ப் பல்கலைக்கழகத்தில் சாதாரண ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஒரு பாரிய பிரச்சினைக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கம் தேவையற்ற பிரச்சினைகளை மேலும் பெருக்கிச் செல்லும் போது இந்த நாட்டின் எதிர்காலம் எவ்வாறு இருக்கப் போகின்றது என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

கடந்த காலத்திலும் பல்கலைக்கழகத்துடன் பல சீண்டல்களைக் மேற்கொண்டதன் காரணமாக தமிழர்களின் போராட்டம் வலுப்பெற்றதே தவிர பலவீனமடையவில்லை. தற்போதும் அதே வகையில் பல்கலைக் கழகத்துடன் ஒரு சீண்டலில் ஈடுபடுவதாகவே நாங்கள் கருத வேண்டி இருக்கின்றது. எனவே இவ்விடயத்தை அரசாங்கம் மிகவும் நிதானமாகக் கையாளவேண்டும். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவும் வேண்டும்.

தற்போது வடமேல் மாகாணத்தில் இனமுறுகல் ஏற்பட்ட நிலை காணப்படுகின்றது. தென்பகுதியின் அரசியல் என்பது ஒரு இனவாத ரீதியில் சென்று கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. யாராக இருந்தாலும் அப்பாவிகளின் உடமைகளைப் பாதுகாக்க வேண்டியது அரசின் தலையாயக் கடமையாகும்.

இது மாத்திரம் அல்லாமல் தற்போது எமது வடக்கு கிழக்குப் பகுதிகளில் பல அரசியல்வாதிகள் அளவுக்கதிகமாகக் காணிகளை அபகரித்து வைத்திருக்கின்றார்கள். தற்போது ஆளுநராக இருக்கும் ஹிஸ்புல்லா அவர்கள் ஒரு நிறுவனத்தின் பெயரில் மன்னார் மாவட்டத்தில் 500 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளைக் கொள்வனவு செய்திருக்கின்றார் என சக பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவித்துள்ளார். அதே போன்று வெருகல் பிரதேசத்தில் ராமர் தீவு எனும் கடற்புலிகள் தளமாக இருந்த காணி கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாகக் கூட ஒரு கருத்து நிலவுகின்றது. திருகோணமலையில் சல்லித்தீவு பிரதேசத்திலும் அதேபோன்று பதுளை வீதியில் புல்லுமலைப் பிரதேசம் ஆகிய இடங்களில் கனிசமான காணிகள் உள்ளதாகக் கருத்துக்கள் நிலவுகின்றன. இவைகளைப் பற்றி ஆராய வேண்டிய தேவை இருக்கின்றது.

சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் காணிகள் குறிப்பிட்ட அரசியல்வாதியினால் கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்றது என்றால் இதன் நோக்கம் என்ன என்பது ஆராயப்பட வேண்டும். சாதாரண கஷ்டப்படுகின்ற முஸ்லீம் மக்கள் இவ்வாறு சிறு சிறு காணிகளை கொள்வனவு செய்து அவர்களின் தேவைகளுக்குப் பயன்படுத்துவது பரவாயில்லை. ஆனால் இவ்வாறு அளவுக்கதிகமாக அரசியல்வாதி ஒருவர் கொள்வனவு செய்து வைத்திருப்பதென்பது எதிர்காலத்தில் என்ன நோக்கத்திற்காக என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.

அதே போன்று மட்டக்களப்பு பல்கலைக்கழகம் பற்றிய விடயம் கூட மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் டளஸ் அளகப்பெரும அவர்கள் அமைச்சராக இருந்த போது அவருடன் ஒப்பந்தம் செய்து தான் இந்த பல்கலைக்கழகத்துகுரிய காணிகள் பெறப்பட்டு பல்கலைக்கழகத்துக்குரிய அனுமதிகள் பெறப்பட்டதாகக் கூறப்படுகின்றது. தற்போது இந்தப் பல்கலைக்கழகம் பற்றி பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றது. இந்தப் பல்லைக்கழகம் என்ன நோக்கத்திற்காக உருவாக்கக்பட்டது இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பல்கலைக்கழகம் பயன்படுத்தப்படப் போகின்ற எனப் பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இனவாத மதவா ரீதியல் செயற்படக் கூடாது என்கின்ற விடயத்தில் நாங்கள் கவனமாக இருக்கின்றோம். ஆனால் நாங்கள் அவ்வாறு இருக்கின்ற போது எமது நாட்டுக்குள் எவருக்கும் தெரியாமல் தயாரிப்புகள் அதற்குரிய முஸ்தீபுகள் செய்துகொண்டு இவ்வாறான பாரிய தாக்குதலை மேற்கொண்டு பல மக்களைப் பலியெடுத்து நாடு மழுவதும் ஒரு அச்ச நிலைமையை ஏற்படுத்தியுள்ளார்கள்.

இந்த நேரத்தில் சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக காத்தான்குடி என்பது ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்கள் 30 வருட காலமாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் பிரதேசம். அந்தப் பிரதேசத்தின் ஒரு மதவாத அமைப்பினால்  நாசகாரச் செயல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இந்த விடயம் எந்தவொரு புலனாய்வாளர்களாலும், எந்தவொரு பாதுகாப்பு பிரிவினராலும் கண்டுபிடிக்கப்படாமல் இது வெற்றிகரமாக அரங்கேறி இருக்கின்றது. இலங்கையில் ஏழுவகையான புலனாய்வுப் பிரிவுகள் இருக்கின்றது என்று சொல்லுகின்றார்கள் அப்படியானால் அவை அனைத்துக்கும் கண்களில் மண் தூவப்பட்டிருக்கின்றனவா? பாதுகாப்புப் படையினரை எவ்வாறு ஏமாற்றியிருக்கின்றார்கள். ஒரு சிரேஸ்ட அரசியல்வாதியை இவர்கள் எவ்வாறு ஏமாற்றியிருக்கின்றார்கள் என்கின்ற பல கேள்வி எமக்குள் இருக்கின்றது.

புலனாய்வுகள் சரியாக வழங்கப்பட்டனவா? வழங்கப்பட்ட புலனாய்வு தகவல்களுக்கு எற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றனவா? அதிகாரிகள் தவறிழைத்திருக்கின்றார்களா? அரசியல்வாதிகள் தவறிழைத்திருக்கின்றார்களா? பணத்தின் மூலம் பல காரியங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றனவா என்கின்ற பல கேள்விகளும் எழுந்துள்ளன. கடந்த காலத்தில் பல குற்றங்கள் இடம்பெற்றும் கூட அவற்றைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை; மிகக் குறைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விடயத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் திருப்திகரமானதாக இல்லை.

எனவே இந்த சம்வத்தில் ஆளுநர் அவர்களுக்கு ஒரு சிறிய தகவலும் தெரியாமல் இருந்திருக்கின்றதென்பது வியப்புக்குரிய ஒன்றாகும். இது அரசியலுக்காகப் பேசுகின்ற விடயம் அல்ல மக்கள் மத்தியில் எழுகின்ற கேள்விகளே.

இனங்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வோடு நடைபெற்ற விடயங்கள் தற்போது அனைத்தும் சந்தேகம் கொண்டு பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. இது எதிர்காலத்தில் எந்தளவு தீர்க்கப்படப் போகின்ற என்ற விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உணர்;சிவசப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

அதேபோன்று அமைச்சர் றிசாட் மீதும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது. அவருக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிகின்றோம். இந்த விடயத்தில் நாம் தனித்து முடிவெடுப்பதை விட எமக்கென்றொரு கட்சி, அதன் தலைமை இந்த விடயத்தின் சாதக பாதகங்கள உண்மைத்தன்மைகள், நம்பத்தண்மைகள் பற்றி கலந்தாலோசித்து தீர்க்கமான முடிவினை எமது கட்சி சார்ந்து முடிவவெடுப்போம்.

அதே நேரத்தில் கூட்டு எதிர்க்கட்சியினர் கொண்டு வருகின்ற விடயங்கள் இந்த நாட்டில் பல்வேறுபட்ட பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதற்காகக் கொண்டுவரப்படுகின்றவா என்கின்ற கேள்வியும் எமக்கு இருக்கின்றது. கடந்த காலங்களிலும் சட்டவாக்கத்திற்கு அப்பால் ஜனநாயக விரோதமாக அவர்களின் செயற்பாடுகள் இருந்தன. எனவே அவர்கள் கொண்டு வருகின்ற பிரேரணைகள் பற்றி ஆளமாகப் பரிசீலித்து பொதுவான முடிவினை எமது கட்சி எடுக்கும் என்று தெரிவித்தார்.