அரச அதிகாரிகள் கட்டுக்கடங்காது தவறுகள் செய்கின்றபோது மௌனிகளாக இருக்க முடியாது

அரச அதிகாரிகள்  கட்டுக்கடங்காது தவறுகள் செய்கின்றபோது மௌனிகளாக இருக்க முடியாதுதென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

முனைக்காடு கிராமத்தில் புதிதாக கம்பரெலிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீதிகளை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

தமிழரசுகட்சியின் முனைக்காடு கிராம கிளையின் தலைவர் கு.ஜெயக்குமார் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது, 40இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இருவீதிகள் திறந்து வைக்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனின், கம்பரெலிய அபிவிருத்தி திட்ட நிதியொதுக்கீட்டின் கீழ், ஒருவீதி ரூபா 20இலட்சம் பெறுமதியில், மொத்தமாக 40இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இரு வீதிகளே மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சீ.புஸ்பலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு இவ்வீதியினை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தேர்தல் என்பது ஐந்து அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும். அப்போது ஒரு மாத காலத்திற்குள் வாதப்பிரதி வாதங்கள், கருத்து ரீதியான தர்க்கங்களை முன்வைத்து போட்டியிடலாம். தேர்தல்கள் முடிவடைந்ததும் நாங்கள் எல்லோரும் அன்பர்கள், நண்பர்கள், சகோதரர்களாக மாறிவிட வேண்டும். விமர்சனங்களை விடுத்து எல்லோரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இணைந்து பணியாற்றுகின்ற போதே சிறந்த அபிவிருத்திகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

அரசியல் தீர்வும்;, அபிவிருத்தியும் வேண்டும். எந்தவொரு கிராமத்தினையும் கவனிக்காமல் விட்டுவிட்டோம் என்ற பெயர்வந்துவிடக்கூடாது. கடந்த காலம் முடிந்த காலம் அந்தக்காலத்தினை வைத்து எந்த முடிவும் எடுக்கமாட்டோம். வாக்கிற்காக மாத்திரமல்லாமல் எங்களது மக்கள் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ அங்கெல்லாம் அபிவிருத்திகளை மேற்கொள்கின்றோம். மடியில் கனமும் இல்லை, வழியில் பயமுமில்லை. வீணாக சுயநலத்திற்காக பணத்தினை செலவு செய்யவுமில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், இணைத்தலைவர்கள் என்றவகையிலோ பிரதேச செயலாளர்களை குறித்த இடங்களுக்கு வருகைதருமாறு வர்ப்புறுத்துவதில்லை, நெருங்குவாருங்களை கொடுப்பதுமில்லை. அவர்கள் நடுநிலையாக செயற்பட வேண்டும் என்றே நினைக்கின்றோம். அவர்களின் நிலையினை உணர்ந்தே செயற்படுகின்றோம். அரச உத்தியோகத்தர்களை ஆட்டிப்படைக்க முடியாது. அதேவேளை கட்டுக்கடங்காது, பிழைகள் செய்கின்றபோது நாங்கள் மௌனிகளாக பார்த்திருக்கவும் முடியாது. ஒருசில பிரதேசசெயலாளர்கள் அமைப்பாளர் ஒருவரின் தனிப்பட்ட செயலாளர்கள் போன்று செயற்படுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் வரவேற்கத்தக்கதல்ல.

அரசாங்கம் இயங்குதென்றால், எமது கட்சி கொடுத்த உதவியேயாகும். இந்த அரசாங்கத்தினை குழப்புவதாகவிருந்தால் இதைவிட நல்ல அரசாங்கம் அமைய வேண்டும். அப்படியானால் தற்போதைய அரசினை குழப்பி புதிய அரசினை கொண்டுவரலாம். தற்போதிருக்கின்ற ஆட்சியைவிட மோசமான ஆட்சி இடம்பெறுமானால் அதற்கு ஆதரவு கொடுக்க நாங்கள் தயாரில்லை. தவறுவிட்டுவிடக்கூடாதென்பதில் கவனமாகவிருக்கின்றோம். என்றார்.