அமைச்சர் றிசாட் பதியூதீனை கைது செய் என்று சொன்னால் எப்படி செய்ய முடியும் என்று கேட்கின்றேன்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியூதீனை இல்லாமல் செய்து அழித்து ஒழித்து விட வேண்டும் என சிங்கள பேரினவாதிகள் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றார்கள் என விவாசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் அமைக்கப்பட்டுள்ள தேசிய வீடமைப்பு அதிகார சபையின் 50 வீட்டுத் திட்டத்திற்கான குடிநீர் வழங்கும் நிகழ்வும், 60 பயனாளிகளுக்கு மின்சார இணைப்பிற்கான விண்ணப்பம் வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்

சிங்கள பேரினவாதிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும், அவருடைய குரலை இந்த நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற பாரிய அணியினர் சிங்கள பெரும்பான்மை சமூகத்திற்குள் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.

அமைச்சர் றிசாட் பதியூதீனை இல்லாமல் செய்து அழித்து ஒழித்து விட வேண்டும் என்றும், இவர் இருப்பதால் முஸ்லிம்களின் குரலாக அதிகம் பேசுகின்றார், சண்டை பிடிக்கின்றார் என்று சிங்கள பேரினவாதிகள் அச்சப்படுகின்றனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியூதீனை இல்லாமல் செய்ய வேண்டும் அல்லது அவரை கைது செய்ய வேண்டும் என்று சத்தம் போடுகின்றார்கள். சும்மா ஒருவரை கைது செய்ய முடியுமா? ஏதாவதொரு பிழை செய்தால் மாத்திரம் கைது செய்ய முடியும்.

எந்த பிழையும் செய்யாமல் இருக்கும் அமைச்சர் றிசாட் பதியூதீனை கைது செய்ய வேண்டும் என்று சில ஊடகவியலாளர், சில அரசியல்வாதிகள் அழுதுபுலம்பிக் கொண்டிருக்கின்றார்கள். றிசாட் பதியூதீனை கைது செய் என்றால் சட்டம் சும்மா கைது செய்ய முடியுமா முடியவே முடியாது.

இலங்கையில் என்ன நடந்தாலும் அதில் அமைச்சர் றிசாட் பதியூதீனை மாட்டிக் கொடுக்கும் நடவடிக்கை இடம்பெறுகின்றது. வில்பத்து பிரச்சனை, மின்சார பிரச்சனை, காணிப் பிரச்சனை, குண்டு வெடிச்சாலும் சரிதான் என்ன நடந்தாலும் அதனுள் புகுத்தி அமைச்சர் றிசாட் பதியூதீனை கைது செய் என்று சொன்னால் எப்படி செய்ய முடியும் என்று கேட்கின்றேன்.

நாம் எவரும் எதிர்பார்த்து இருக்கவில்லை. முஸ்லிம் சமூகத்திற்குள் இருந்து தற்கொலை குண்டுதாரி வருவார். அதுவும் ஏழு பேர் தற்கொலை குண்டுதாரியாக வருவார்கள் என்று நாங்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை.

ஒரு அநியாயமாக சமூகத்தினை அடையாளப்படுத்தி இந்த நாட்டில் வேலைத் திட்டங்கள் நடைபெற்று இருக்கின்றது. இந்த நாட்டில் இவ்வாறு செய்தார்கள் என்பதற்காகதான் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசினை வழங்க நடவடிக்கை எடுக்கின்றேன்.

இந்த நாட்டிலே பாதுகாப்புக்கு முஸ்லிம்களாகிய நாம் விசுவாசிகளாக இருக்கின்றோம். நாங்கள் சவூதியில் வாழ்க்கின்றோம் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். தேசியத்திலே சில ஊகடங்களை பார்த்தால் எங்களிடத்தில் உள்ள சவால், பாராளுமன்றம் சென்றோம் என்றால் எங்களிடத்தில் உள்ள அலட்டல்கள் உங்களுக்கு விளங்குவதில்லை.

உங்களுடைய முஸ்லிம் மக்கள் சட்டத்தினை மதிக்கின்ற மக்களாக இல்லை என்று சொல்கின்றார்கள். வீதிப் போக்குரவத்து சட்டத்தினை மதிப்பவர்கள் இல்லை. தலைக்கவசத்தினை போடுவதற்கு யோசிப்பதாக சொல்கின்றார்கள். உண்மையா என்று கேட்டால் நாங்கள் என்ன சொல்ல வேண்டி உள்ளது. சற்று யோசித்துப் பாருங்கள்.

நாங்கள் உங்களுக்கு ஏசித்தான் பேசுவோம். நீங்கள் வாயை மூடித்தான் இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். இதனை பேச வைத்தது யார், முஸ்லிம்களிடத்தில் சிலர் வெளிநாட்டு பணத்திற்காக ஆசைப்பட்டு, மூளைச் செலவு செய்யப்பட்டு அவர்கள் மூலமாக இந்த நாட்டுக்கு அநியாயமான துரோகத்தினை செய்து விடடனர்.

அதனை சரி செய்வது என்றால் பல வருடங்கள் செல்லும். ஏன் பாண் வெட்டும் கத்தியில் கூட பிழையாக காட்டும் நிலைமைக்கு வந்துள்ளது. எங்களது கெட்ட நேரம் சில பள்ளிவாயல்களில் இருந்து கத்திகள் பிடிபட்டுள்ளது. இதையும் பெரிய பூதாகரமான விடயம். அவர்கள் சொல்லுவார்கள்; அவர்கள் சொல்லுவதில் நாயம் உள்ளது.

எனவே நாங்கள் நாங்களாக இல்லை. முஸ்லிம்கள் முஸ்லிம்களாக இல்லை. இதனால்தான் இறைவனுடைய சோதனை. கோடீஸ்வரன் வீட்டு பிள்ளைகள் பணத்தினை காணாதது போல பணத்திற்காக தற்கொலை குண்டுதாரர்களாக மாறியுள்ளனர். இந்த பணத்தினை என்ன செய்ய போகின்றார்கள். அந்த பணமும் தற்போது அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.

கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் ஏ.எல்.சமீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்களான எம்.பி.எம்.ஜௌபர், ஏ.ஜி.அமீர், ஓட்டமாவடி உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.றுவைத், முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின், வீடமைப்பு அதிகார சபை உத்தியோகத்தர் எஸ்.எல்.நளீர், கிராம சேவையாளர் ஏ.எல்.எம்.அஸ்வர், வட்டாரக்குழு உறுப்பினர்கள், பள்ளிவாயல் நிருவாகிகள், பொது மக்கள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய கைத்தொழில் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் முயற்சியில் சமூக நீர் வழங்கல் திட்டத்தினூடாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் 30 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்டுள்ள தேசிய வீடமைப்பு அதிகர சபையின் 50 வீட்டுத்திட்டதிற்கான குடிநீர் மற்றும் 60 பயனாளிகளுக்கு மின்சார இணைப்பிற்கான விண்ணப்பமும் வழங்கி வைக்கப்பட்டது.