மூன்று மொழிகளே அரச கரும மொழி: அரபு மொழிக்கும் இந்த நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? ஜி.ரி.லிங்கநாதன் கேள்வி .

இலங்கையில் மூன்று மொழிகள் தான் அரச கரும மொழிகளாக காணப்படுகின்றன. அரபு மொழிக்கும் இந்த நாட்டிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்பதை விசாரிக்க வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் கொல்லபட்டவர்களிற்கான அஞ்சலி நிகழ்வு விடுதலை அமைப்புகளின் ஏற்பாட்டில் வவுனியாவில் நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,ஏப்ரல் 21 தாக்குதலானது தமிழ் மக்களை பொறுத்தவரை பலவிடயங்களை கற்றுக் கொள்ளகூடிய சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. 1915 ஆம் ஆண்டில் சிங்களமக்களால் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. அன்றிலிருந்து போர்முடிவுற்ற 2009 ஆம் ஆண்டு வரையான 94 வருடகாலப்பகுதியில் சிறுபான்மை மக்கள் இந்தநாட்டிலே வாழமுடியுமா என்ற கேள்விக்குறி இருந்து வந்தது.

கடந்த 1915 ம் ஆண்டு சிங்கள மக்களால் முஸ்லிம் மக்கள் தாக்கப்படும்போது அவர்களிற்கு ஆதரவாக தமிழ்தரப்பு செயற்படவில்லை. அது நாம் வெட்கபட வேண்டிய விடயம். அன்றைய தமிழ் தலைவர்களான சேர் பொன்.இராமநாதன், அருணாச்சலம் ஆகியோர் லண்டனிற்கு சென்று சிங்கள தலைவர்ளை காப்பாற்றும் பணியினை மேற்கொண்டார்கள். அதற்காக சிங்கள மக்கள் அவர்களை கொண்டாடி நன்றி செலுத்தியிருந்த சம்பவங்களும் நடைபெற்றிருந்தது.ஆனால் எங்களிற்கு ஒரு நிலமை இப்படிவரும் என்பதை அன்று இருந்த தலைமைகள் சரியாக கணக்கிட்டிருந்தால் இன்றைய துர்ப்பாக்கியநிலை எமக்கு வந்திருக்காது. தமிழரசுகட்சி, தமிழர் கூட்டணியின் காலப்பகுதிகளிலே முஸ்லிம் சகோதர்கள் அரசியல் ரீதியாக எங்களோடு ஒன்றாக செயற்பட்டிருந்தார்கள். விடுதலை அமைப்புகளிலே ஒன்றாக இணைந்திருந்த சந்தர்ப்பங்களும் கூட உண்டு. இன்று இந்த அரசானது ஒரு சில தலைமைகளின் சுயநலன்களிற்காக நாட்டையே குட்டிசுவராக்கி கொண்டிருக்கும் செயற்பாட்டை மேற்கொள்கிறது.எனவே இந்த அரசு, முப்படையினர், பொலிசாரிடம் நான் கேட்க வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது. போரிற்கு பிறகு இந்த நாட்டிலே திடீர் பணக்காரராக மாறியவர்களை பற்றி விசாரியுங்கள். அவர்களிற்கு இந்த பணம் எப்படி வந்தது என்று விசாரியுங்கள். அதேபோல் இலங்கையில் மூன்றுமொழிகள் தான் அரசகரும மொழிகளாக காணப்படுகின்றது. ஆனால் அண்மையில் அரபு மொழியிலே பலகட்டடங்களின் பெயர்பலகைகள் திறக்கப்பட்டிருக்கிறது. அரபு மொழிக்கும் இந்தநாட்டிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது. எனவே அந்தவிடயங்கள் விசாரிக்கபட வேண்டும்.கொல்லபட்டவர்களை கத்தோலிக்கர்களாக பார்க்க வேண்டாம். அவர்கள் முழுக்க முழுக்க தமிழர்கள். மிகதெளிவாக தாக்குதலிற்கான இடங்கள் தெரிவுசெய்யபட்டிருக்கிறது. ஒரு பௌத்த கோவிலும் இலக்கு வைக்கபடவில்லை.

ஒரு சிங்கள பௌத்தனும் சாகவில்லை. வெளிநாட்டின் நிகழ்சி நிரலாக இருந்தாலும் எம்மை கருவறுக்கும் செயற்பாடாகவே இந்த தாக்குதலை பார்க்க முடியும். தற்போதை நிலையில் ஒவ்வொரு இயங்கங்களும் தம்மை சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும்.போராட்ட காலங்களிலே விரும்பியோ, விரும்பாமலோ பல தவறுகளை நாம் செய்திருக்கின்றோம். இனிவரும் காலங்களிலாவது நாம் ஒற்றுமையாக செயற்படுவதனூடாகத்தான் எமது மக்களை காப்பாற்ற முடியும். எனவே அனைத்து இயக்கங்களும் மனம் திறந்து பேச வேண்டும் என்றார்.