உண்மையை மறைத்த முஸ்லிம் ஆசிரியைகள், எச்சரித்த மனோ கணேசன்.

அவிசாவளை – புவக்பிட்டியவிலுள்ள தமிழ் பாடசாலையில் பணியாற்றும் அபாயா அணிந்த ஆசிரியைகள் பாதுகாப்பு தேவைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய உடற்பரிசோதனையை செய்ய பெண் பொலிஸாருக்கு இடம் கொடுக்கவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எனவே,உடற்பரிசோதனை செய்ய அங்கு வந்த பெண் பொலிஸாருக்கு இடம் கொடுக்கப்படவில்லை” என்ற உண்மையை மறைத்து, விடயத்தை திரிபுபடுத்தி இனவாதத்தை கிளப்ப வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இன்று ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில்,

அவிசாவளை புவக்பிட்டியவில் உள்ள தமிழ் பாடசாலையில் பணியாற்றும் அபாயா அணிந்த ஆசிரியைகள், பாடசாலைக்கு உள்ளே செல்வதற்கு முன் தம்மை பாதுகாப்பு தேவைப்பாட்டின் அடிப்படையில் உடற்பரிசோதனை செய்ய அங்கு வந்த பெண் பொலிஸாருக்கு இடம் கொடுக்கவில்லை எனவும், இந்த விடயம் இது தொடர்பான பொலிஸ் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளதாகவும், பாதுகாப்பு சோதனைக்கு மறுப்பு தெரிவிக்கும் எவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தமக்கு அதிகாரம் இருக்கின்றதாகவும், ஆனால் பிரச்சினையை பெரிதுபடுத்த விரும்பாததால், ஆளுநர் ஆசாத் சாலியை சந்திக்க செல்ல அவர்களுக்கு தாம் இடம் கொடுத்ததாகவும் அவிசாவளை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி விகும் வீரசேகர என்னிடம் தெரிவித்துள்ளார்.

எனவே,உடற்பரிசோதனை செய்ய அங்கு வந்த பெண் பொலிஸாருக்கு இடம் கொடுக்கப்படவில்லை” என்ற உண்மையை மறைத்து, புனைகதைகளை பரப்பி, அவிசாவளை புவக்பிட்டிய தமிழ் பாடசாலை விடயத்தை திரிக்க வேண்டாம் எனவும், சமூக ஊடகங்களை பயன்படுத்தி இனவாதத்தை கிளப்ப வேண்டாம் எனவும் அனைவரையும் கோருகிறேன்.

இத்தகைய ஒரு தேசிய பாதுகாப்பு நெருக்கடி மிக்க சூழலில், அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இங்கே தேவையற்ற பிரச்சினைகளுக்கு இடம் கொடுக்க நான் அனுமதிக்க மாட்டேன்.

ஆகவே இது தொடர்பில் நாம் பொறுப்புடனும், நிதானமாகவும் நடந்து கொண்டு தீர்வை தேட வேண்டுமென, மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலியிடம் நான் இன்றும், நேற்றும் கூறியுள்ளேன்.

திங்கட்கிழமை நான் இப்பாடசாலைக்கு நேரடியாக சென்று, பெற்றோர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் சந்தித்து, நிலைமைகளை அவதானித்து பிரச்சினைக்கு தீர்வு காண உள்ளேன் என கூறியுள்ளார்.

நாடாளுமன்ற நுழைவாயிலில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற ஊழியர்கள் என்ற பேதங்கள் இல்லாமல் அனைவரும் ஒவ்வொரு முறை உள் நுழையும் போதும் முழுமையான உடற்பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றோம்.

எமது வாகனங்கள் அனைத்தும் ஒவ்வொரு தரம் உள்நுழையும் போதும் முழுமையாக பரிசோதிக்கப்படுகின்றன. இது பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இதை அறியாதவர்களுக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பில் விளயாட முடியாது.

இந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள அவிசாவளை – புவக்பிட்டிய சிசிடிஎம் தமிழ் பாடசாலையின் அபாயா அணிந்த ஆசிரியர்கள், கடந்த வருடம் பின் தங்கிய தோட்டப்புற தமிழ் பாடசாலைகளுக்கு என விசேடமாக வழங்கப்பட்ட நியமனங்களை பெற்று பணிக்கு வந்தவர்கள் ஆவர்.

இவர்களின் நியமனம் குறிபிட்ட பாடசாலையின் பெயர் குறிப்பிட்டு வழங்கப்பட்டவை ஆகும். ஆகவே இவர்களுக்கு இடமாற்றம் ஒருபோதும் வழங்கப்பட முடியாது. இதை இந்த ஆசிரியர்களும், பாடசாலை பெற்றோர்களும் மனதில் கொள்ள வேண்டும்.

ஆசிரிய வேலை செய்து இவர்கள் அரசாங்க சம்பளம் பெறுகிறார்கள். ஆனால், வேதனம் பெருகின்ற ஆசிரியர்களின் தொழிலை விட பிள்ளைகளின் கல்வியே முக்கியமானது.

அதற்காகவே பாடசாலைகள் இருக்கின்றன. இந்த விதி இந்நாட்டின் எல்லா இடங்களுக்கும் பொதுவானதாகும். ஆகவே எக்காரணம் கொண்டும் ஏற்கனவே பின்தங்கி உள்ள தோட்டப்புற தமிழ் பாடசாலைகளின் கல்வி தரம் மேலும் மோசமடைய முடியாது. இதற்கு நான் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டேன்.

இவர்களால் இனி இங்கே பணியாற்ற முடியாவிட்டால், அவர்களுக்கு பதில் வேறு ஆசியர்கள் எமக்கு தேவை. இதுபற்றி எனக்கு விபர அறிக்கை சமர்பிக்கும்படி மாகாண உதவி கல்வி பணிப்பாளர் உதயகுமாருக்கும், பாதுகாப்பு நியதிகளை இந்த பாடசாலை ஆசிரியர்கள் அனைவரும் கைபிடிக்கும் முகமாக இப்பாடசாலை கல்வி நடவடிகைகளை முன்னெடுக்கும்படி, இப்பாடசாலை உள்வரும் வலய கல்வி பணிப்பாளருக்கும் நான் அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்.

முகத்தை மூடக்கூடாது என்பது மட்டுமே சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே உடை தொடர்பாக சட்டப்படி எவரையும் கட்டாயப்படுத்த முடியாது என்பதையும் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். ஆசிரியைகளின் உடை தொடர்பாக பாடசாலைகளில் பாரம்பரியம் மாத்திரமே இருக்கின்றது.

இத்தகைய உடை தொடர்பான பிரச்சினைகளுக்கு ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னரே இந்நாட்டில் ஆங்காங்கு பாடசாலை ஆசிரியர்களும், மாணவர்களும் முகம் கொடுத்துள்ளனர். பாடசாலை பாரம்பரிய உடைகளுக்கு சட்ட அடிப்படை கிடையாது. எனினும் எந்த ஒரு சமூகத்திலும் சட்டம், சம்பிரதாயம் ஆகிய இரண்டுமே செல்வாக்கு செலுத்துகின்றன.

உண்மையை சொல்லப்போனால், கொழும்பு நகரின் பல பிரபல தேசிய பாடசாலைகளில், பெண் ஆசிரியர்கள் சேலை அணிந்து மட்டுமே பாடசாலைகளுக்குள் நுழைய முடியும். இது அந்த பாடசாலைகளின் சம்பிரதாயம் ஆகும்.

பாடசாலை ஆசிரியர்களுக்கான பொதுவான உடை பற்றி இப்போது அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதுபற்றி செவ்வாய்கிழமை அமைச்சரவையில் உரையாட உள்ளேன். இந்நிலையில் அபாயா அணிந்து வரவேண்டாம் என கூற சட்டத்தில் இடமில்லை.

எனினும் அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்களும், தமது பாடசாலை வளாகத்துக்குள் நுழைவதற்கு முன் தம்மை உடற்பரிசோதனை செய்ய உரிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளோருக்கு இடமளிக்க வேண்டும்.

இது இந்நாட்டில் இன்றைய பாதுகாப்பு நிலைமை சீராகும் வரை கட்டாயமாகும். இதில் எவருக்கும் எந்த ஒரு காரணம் கொண்டும் விலக்களிக்க முடியாது.

நடந்து முடிந்த கோர படுகொலைகளின் பின்னர், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த அக்கறை கொண்டு இருப்பது மிகவும் நியாயமானது.

இன்று தமது பிள்ளைகளின் கல்வியை விட, தமது பிள்ளைகளின் பாதுகாப்பிற்கே பெற்றோர் முதலிடம் வழங்குகின்றனர்.

இது சரியானது. மேலும் ஒரு பாடசாலை தொடர்பில் அங்கே கல்வி பயிலும் அந்த பிரதேச மக்களுக்கே அதிக உரிமை இருக்கின்றது. கடமை நிமித்தம் குறிப்பிட்ட காலத்துக்கு பணியாற்ற வரும் ஆசிரியர்கள், இதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.