வான் விவகாரம் மட்டக்களப்பு இளைஞர்கள் பிணையில் விடுதலை..

சாய்ந்தமருதில் தற்கொலை குண்டுதாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளை ஆடைகளை கொள்வனவு செய்வதற்கு ஆடை நிலையத்துக்கு செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் மற்றும் அவரின் நண்பர் ஆகியோரை கல்முனை நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.

சஹ்ரான் மௌலவியின் குழுவை சேர்ந்தவருக்கு வானை வாடகைக்கு கொடுத்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட மட்டக்களப்பை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் இருவரையும் அம்பாறை பொலிஸ் நிலைய பொலிஸார் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கினர்.

இச்சந்தேக நபர்களை ஆதரித்து சட்டத்தரணி என். சிவரஞ்சித் ஆஜரானதுடன் இவர்களை பிணையில் விடுவிக்க வேண்டும் என்று கோரினார்.

நீதிவான் ஐ. என். ரிஸ்பான் சந்தேக நபர்கள் இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இருவரின் சரீர பிணையில் விடுவித்தார். அத்துடன் இருவரும் மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்