அப்பெல்லாம் தளப்பத்துதான் குடை’

— படுவான் பாலகன்  —

‘இப்ப கொஞ்ச காலமாகத்தான் நவீன குடையை கண்ட நாங்கள், அப்பெல்லாம் தளப்பத்துதான், குடை’என்கிறார் 68வயது நிரம்பிய தம்பியப்பா பாலசுந்தரம்.

தளப்பத்து தொடர்பில் எத்தனைபேருக்கு தெரியும், இன்றுள்ள40வயது வயதினை நிரம்பியவர்களுக்கும் தளபத்து தொடர்பில் தெரியவதற்கும் வாய்ப்பில்லை. இதற்கு எமது முன்னோர்களிடம் நாம்பேசுவதற்கு நேரம் ஒதுக்கிக்கொள்ளாமையும் காரணமாகும். நவீனபோக்கினால், எமது மூதாதையர்களிடமிருந்து பெற்றுக்கொண்டிருக்க வேண்டிய பலவிடயங்களை இன்று நாம் இழந்துநிற்கின்றோம்.

படுவான்கரைப்பிரதேசத்தில் உள்ள விடுதிக்கல் கிராமத்தில் நீண்ட காலமாக வசித்து வருகின்ற தம்பியப்பா பாலசுந்தரத்திடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவரின் வீட்டின் முன் உள்ள மரங்கள் நிறைந்த இடத்தில் இருந்து பேசிக்கொண்டிருக்கையில், தளப்பத்து பற்றிப் பேச ஆரம்பித்தார்.

முதலெல்லாம் மழைக்கும்,வெயிலுக்கும் தளப்பத்தைதான் பயன்படுத்தினோம். பெரியபோரதீவு காளி கோயில் உற்சவத்திற்கு போனால்,கொண்டுபோகின்ற பணத்திற்கு முதலில் தளப்பத்தைதான் வாங்கி வைத்துக்கொள்ளுவோம். ஏனென்றால் வீட்ட போகும் போது,மழைபிடித்துவிடும் அதற்காக இதனை வாங்கி எடுத்துவிடுவோம் என்கிறார். இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையிலேயே பக்கத்துவிட்டு வீட்டு, எண்பது வயது நிரம்பிய காத்தமுத்துவும், தன்மன் சங்கரப்பிள்ளையும் அவ்விடம் வருகைதந்து அருகே அமர்ந்து கொண்டனர். இவர்களே ஒரு நூலகம்,இவர்களிடமிருந்து பலவிடயங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். மூவரையும் சந்தித்ததே மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.

காத்தமுத்துவைப் பார்த்து தளப்பத்தை தெரியுமா?என கேட்க, என்ன தம்பி தெரியுமா என்று கேட்கீறிங்க?, எங்கட காலத்து குடை அதுதான் என்கிறார். அவரின் சத்தமும், உற்சாகமும் அவரின் அனுபவத்தினை வெளிப்படுத்தியது. அதேவேளை இப்போதைய இளம்சமுகத்தின் மேல் அவருக்கு கோபமும் உள்ளது. தற்போதைய பிள்ளைகள் சொல்கேட்பது குறைவென்றும்,ஒழுக்கத்தில் சீர்கெட்டு செல்கின்றனர் என்றும் கூறுகின்றார். இது,இவ்வாறு இருக்க தளப்பத்து தொடர்பிலேயே கலந்துரையாடினோம்.

தளப்பத்து என்பது ஒரு வகையான இலை,ஒருபாகம் அகலத்தையும், 4முழம் நீளத்தினையும் கொண்டிருக்கும். இதைவிட குறையவும்,கூடவும் இருக்கும். ஒருதளப்பத்தினை இரு துண்டுகளாக வெட்டிப்பயன்படுத்தலாம் என்கிறார் காத்தமுத்து. இதனை இருகைகளலாலும் பிடித்தே பயன்படுத்த வேண்டும். தேவையில்லாத நேரம் இதனைமடித்து வைக்க முடியும்;. இரண்டு வருடத்திற்கு மேலும் ஒரு தளப்பத்தினை பயன்படுத்த முடியும். மழையில் நனைய நனைய தளப்பத்து இன்னமும் உறுதியாகவே இருக்கும். இப்போதைய குடைபோன்று கைபிடி இல்லை. தளப்பத்தின் இரு தொங்கல் பகுதியையும் இரு கைகளாலும் பிடித்தவாறே நடக்க வேண்டும். தனது சிறுவயது முதல் 50வயது வரை தளபத்து பயன்படுத்திய ஞாபகமுள்ளதாக காத்தமுத்து சொல்கிறார்.

படுவான்கரைப்பகுதியில் தளபத்து நிற்கவில்லையா?வெளியிடங்களில் இருந்துதான் தளபத்து கொண்டு வந்தார்களா?என்று கேட்க, எங்கட படுவான்கரைப்பகுதியிலும் நின்றதுதான்,கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தினை அண்டிய பகுதியில் தளப்பத்து இருந்தது. அங்குள்ளவர்கள் அதனை வெட்டி விற்பனை செய்வார்கள் அங்கிருந்தும் வாங்கியிருக்கின்றோம் என மூவரும் கூறினர். இப்போது நான் எங்கட பகுதியில் ஒரு இடத்திலையும் அதனை காணவில்லை என்று கவலையுடனும் கூறினர். இதுபோன்று பல மரங்கள் எமது பிரதேசங்களில் இருந்து நீங்கியும் உள்ளன.

எனக்கு தெரிந்த காலத்தில் இருந்து,ஆரம்பத்தில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்,இரண்டு ரூபாய் ஐம்பது சதம், ஐந்து ரூபாய் வரை பணம் கொடுத்து தளப்பத்தினை வாங்கியுள்ளேன் எனக்குறிப்பிட்ட காத்தமுத்து. ‘குடைகள் அப்போது முற்றாக இல்லையென்று கூற முடியாது. அப்போதிருந்த போடியார்கள் காம்புக்குடைகளை பயன்படுத்தினர். அவர்களின் தோள்களிலே துண்டும்,காம்புக்குடையும் தொங்கும். அவர்கள் மட்டும்தான் அதனைப் பயன்படுத்துவார்கள். அப்போது, சிங்கமார்க்,மான்மார்க் என்ற குடைகளே பயன்படுத்தப்பட்டன. இக்குடைகளை போடிமார்கள் மட்டும் தான் பயன்படுத்தினர். நாங்க எல்லாம் தளப்பத்தைத்தான் பயன்படுத்தினோம்’ என்று கூறினர். இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் நேரமும் மதியம் 1மணியை கடந்தது. இதனால் அவ்விடத்திலிருந்து எல்லோரும் அகன்று சென்றனர்.