பொலித்தீன் பையில் சுற்றி புதைக்கப்பட்டிருந்த சிசு: சந்தேகத்தின் பேரில் பெண் கைது..!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  வாகனேரி பிரதேசத்தில் இன்று புதன் கிழமை(8.05.2019) காலை சிசு ஒன்றின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் கணவனால் கைவிடப்பட்ட நிலையில், 11 வயது நிரம்பிய சிறுமியுடன் வசித்து வந்த பெண்ணொருவர் இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைக்காக குறித்த சிறுமியிடமும் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது மேற்படி சந்தேக நபர்கள் வசித்து வந்த வீடு உள்ளிட்ட சுற்றுப்புற சூழல் முழுவதுமாக தடயவியல் பரிசோதனை செய்யப்பட்டதுடன் சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வீட்டுச் சுற்றுப்புறத்தில் குழியொன்றில், பொலித்தீன் பை ஒன்றில் சுற்றப்பட்டு புதைத்து வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட சிசுவின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நீதிமன்னறத்தின் உத்தரவின் பேரில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.