பாடசாலை நடவடிக்கைளுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை

பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைகளின் பிரகாரம் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் கடந்த திங்கட்கிழமை பாடசாலை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் தற்போது பாடசாலைகளில் மாணவர்களின் வரவு அதிகரித்துள்ளது. எனவே பாடசாலை நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுத்து செல்லுமாறு கல்வி அமைச்சு அனைத்து பாடசாலை பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

எனினும் ஒரு சில குழுவினர் பாடசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்து வருவதாக கல்வி அமைச்சுக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன. இந்த குழுவினர் பாடசாலைகளுக்கு வரக்கூடாது என அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழுத்தம் பிரயோகம் செய்து வருகின்றனர்.

ஆகவே மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்படும் குழுக்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான குழுக்கள் மற்றும் தனி நபர்கள் தொடர்பாக குற்ற விசாரணை பிரிவிற்கு தகவல்களை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவுறுத்துகின்றது.