நீங்களும் வெடிக்க வைக்கின்ற ஒரு பொருளாக எதிர்காலத்தில் மாற்றப்படலாம் அமீர் அலி எச்சரிக்கை.

கர்த்தினால் மல்கம் ரஞ்சித் பேராயருக்கு எதிர்வரும் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்ற வேலைத் திட்டத்தினை முன்னெடுக்கின்றேன் என விவாசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கோறளைப் மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தையல் பயிற்சி முடித்த 144 யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மண்டபத்தில் இன்று இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!

நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்ற வேலைத் திட்டத்தினை உயிரிழந்தவர்களின் பெயருக்காக அல்ல, காயமடைந்தவர்களின் உடலுக்காக அல்ல. அநியாயம் செய்யப்பட்ட முஸ்லிம் பயங்கரவாதம் என்கின்ற விடயம் எந்தவொரு நாட்டிலும் இதற்கு பிறகு முஸ்லிம் சமூகத்தின் பெயரால் இடம்பெறக் கூடாது. அதாவது தற்கொலை என்கின்ற விடயம் எந்தவொரு நாட்டிலும் இருக்கக் கூடாது.

இருநூற்றி ஐம்பதுக்கு மேல் உயிர்களை காவுகொண்டதுடன், ஐநூறுக்கு மேல் காயப்படுத்தி தினம் தினம் உயிரிழப்பு இடம்பெறுகின்ற நிலைமைக்கு இந்த குண்டுத் தாக்குதல் வெறியாட்டம் உள்ளது. அதுவும் முஸ்லிம் சமூகத்தின் பெயரை சுமந்து செய்யப்பட்டு இருப்பது இந்த நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தலைகுனிய வைத்துள்ளது என்பதிலே யாரும் இரண்டாம் கருத்து பேச முடியாது.

என்னைப் பொறுத்தவரையில் பாராளுமன்றத்திலும், வெளியிலும் முஸ்லிம் பயங்கரவாதம் இருக்கின்றது இவர்கள் குண்டு தற்கொலைகாரர்களாக வருவார்கள் என்றெல்லாம் பேசிய போதெல்லாம் அதனை நான் எந்தவொரு கணப்பொழுதிலும் ஏற்கவில்லை ஏன் என்றால் ஒரு உண்மையான முஸ்லிம் தற்கொலை செய்து கொள்ள மாட்டான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் பேசினோம்.

இஸ்லாத்தினை சரியாக புரிந்து கொண்டு ஈமானியத்தோடு வாழ்க்கை நடாத்த வேண்டும் என்று என்னுகின்ற எந்தவொரு முஸ்லிமும் தற்கொலை என்கின்ற விடயத்திற்கு போக முடியாது. ஏனெனில் தற்கொலையில் அவன் சுவர்க்கம் அடைய முடியாது. தற்கொலையில் தான்; சுவர்க்கம் அடைய முடியும் என்று இருந்திருந்தால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பிறக்கின்ற பொழுது தற்கொலைக்கு தாய் அல்லது தந்தைமார் செய்து விட்டு எங்களது பிள்ளையை சுவர்க்கத்திற்கு அனுப்புகின்ற தீர்மானத்திற்கு வந்திருக்க முடியும்.

ஐ.எஸ்.ஐ.எஸ். என்கின்ற பயங்கரவாதத்தின் பெயரால் வெளிநாட்டில் இருக்கின்ற ஏகாதிபத்திய வாதிகள் செய்து கொண்ட ஒரு அமைப்பை குறானை சுமந்து அல்லாவை, நபியை நம்பிய நாங்கள் அவர்களின் பெயரால் அநியாயம் செய்யப்பட்டு இருக்கின்றது என்று சொன்னால் அதனை எந்த சமூகமும் மன்னிக்க முடியாது.

சகோதரிகளே உங்களுடைய கணவர் என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்று நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். சகோதரர்களே உங்களுடைய மனைவி எங்கிருக்கின்றாள் என்ற செய்தி உங்களுக்கு தெரிய வேண்டும். உங்களுடைய பிள்ளை என்ன செய்கின்றது என்று உங்களுக்கு தெரிய வேண்டும். இல்லையென்றால் ஒரு முட்டாளுடைய செயலுக்காக நீங்களும் வெடிக்க வைக்கின்ற ஒரு பொருளாக எதிர்காலத்தில் மாற்றப்படலாம் என்றார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்குடா இளைஞர் அமைப்பாளர் எம்.எப்.ஜௌபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோறளைப் மத்தி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், பிரதேச சபை உறுப்பினர் திருமதி.எஸ்.நபீரா, ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வட்டார குழு தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

144 யுவதிகளின் தையல் பயிற்சி நெறிக்காக 5.4 மில்லியன் ரூபாய் நிதி விவாசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரால் ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.