திட்டமிட்டபடி 6 ஆம் திகதி ஆரம்பம்; 5 ஆம் திகதி தீவிர சோதனை

நாட்டின் அனைத்துப் பாடசாலைகளின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அனைத்து தரப்பினரும் உத்தரவாதம் அளித்ததன் பின்னரே எதிர்வரும் 6ஆம் திகதி முதல் மீண்டும் பாடசாலைகளை இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நேற்று தெரிவித்தார்.

ஜனாதிபதி, அமைச்சரவை, உளவுப் பிரிவு, பாதுகாப்பு சபை, முப்படையினர் மற்றும் பொலிஸார் இந்த உத்தரவாத்தை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள சில பாடசாலைகளின் பாதுகாப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆய்வுசெய்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சரவையும், பாதுகாப்புத்துறையினரும் நாட்டினதும், பாடசாலைகளினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உத்தரவாதம் அளித்ததன் பின்னரே பாடசாலைகள் மீண்டும் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாடு முழுவதுமுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் பாதுகாப்புத்துறையினருக்கு நன்றித் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.