காத்தான்குடி பள்ளிவாசல் மயானத்திலிருந்து கைத்துப்பாக்கிகள்

 மட்டக்களப்பு – காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல் மயானத்திலிருந்து கைத்துப்பாக்கிகளுடன் தொடர்பாடல் உபகரணங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த மயானத்திலிருந்து கைத்துப்பாக்கியொன்றும், மைக்ரோ ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தக்கூடிய 6 ரவைகளும் இரண்டு கைக்குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், மடிக்கணினி ஒன்றும், சேதமாக்கப்பட்ட இறுவெட்டுகள் சிலவும், வன்தட்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

குறித்த இடத்திலிருந்து இரண்டு வாள்களும், வோக்கிடாக்கிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, நிக்கவெரட்டிய – மஹவ பகுதியில் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து டெட்டனேட்டர், அமோனியம் நைட்ரேட் எனும் வெடிபொருள் ஒரு கிலோகிராம், கட்டுத்துப்பாக்கி, வாள், 100 ஈயத்திலான உலோகக்குண்டுகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.