மண்முனை தென்மேற்கு கோட்டப்பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வு

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் சோதனையிடப்பட்ட பின்பே மாணவர்களை பாடசாலைக்குள் அனுமதிக்க வேண்டும் என அதிபர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக தடைப்பட்டிருந்த பாசாலைகளின் 2ம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 6ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்ததற்கமைய, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாடசாலைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலான ஒன்றுகூடல் இன்று(03) வெள்ளிக்கிழமை மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக கேட்போர்கூட மண்டபத்தில் செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் செ.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற போதே அறிவுறுத்தப்பட்டது.

இராணுவ உயரதிகாரிகள், காவல்துறையினர் இவ்ஒன்றுடலில் கலந்துகொண்டிருந்தமையுடன், பாடசாலைகளின் அதிபர்கள், அபிவிருத்திக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அதிபர்களுக்கு தெளிவூட்டப்பட்டமையுடன், பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோர்கள் அதிககவனம் செலுத்துமாறும் வலியுறுத்தப்பட்டது. மேலும், அனைத்துப் பாடசாலைகளும் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்பே, மாணவர்களை பாடசாலைக்குள் அனுமதிக்க வேண்டும். இதற்கு பாடசாலையின் அதிபர்கள் தமது உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இவ்வொன்றுகூடலினை சிறுவர், பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் ஒழுங்குபடுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.