காரைதீவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேடகூட்டம்! விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் தவிசாளர் ஜெயசிறில்.

(காரைதீவு    நிருபர் சகா)
 
நாட்டிலேற்பட்டுள்ள அசாதாரணசூழ்நிலை மற்றும் சாய்ந்தமருது குண்டுவெடிப்புச்சம்பவத்தையடுத்து காரைதீவுப்பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விசேட கூட்டம் நேற்று(30) மாலை நடைபெற்றது.

 
காரைதீவு பிரதேசசபை ஏற்பாடுசெய்த இவ்விசேடகூட்டம் பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் பொதுநூலககேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஆலயத்தலைவர்கள் அதிபர்கள் பொதுஅமைப்புகளின் பிரமுகர்கள் சமுகஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் கலந்துகொண்டனர்.
பிரதேசசபை உறுப்பினர்களான த.மோகனதாஸ் மு.காண்டீபன் ஆ.பூபாலரெத்தினம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
 
குண்டுவெடிப்பு அனர்த்தம் இடம்பெற்ற சாய்ந்தமருது தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்மாந்துறை
நிந்தவூர் ஆகிய பிரதேசங்களுக்கு மத்தியில் காரைதீவுக்கிராமம் அமைந்துள்ளது.
 
பிரதேசத்தின் அமைவிடத்தை கருத்திற்கொண்டு உரிய பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொள்ள  விரைவாக பொலிசார் பாதுகாப்புப்படையுடன் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென கலந்துகொண்ட பிரதிநிதிகள் வேண்டுகோள்விடுத்தனர்.
 
இளைஞர் மத்தியில் விழிப்புக்குழுவை அமைத்து படையினரின் அங்கீகாரத்துடன் ரோந்துச்செயற்பாட்டில் ஈடுபடுத்தல். சிரேஸ்ட பிரஜகள் அடங்கலான குழுவினரின் ஆலோசனை வழிகாட்டல் அவ்வப்போது இடம்பெறவேண்டும்.
 
இனந்தெரியாத நபர்கள் வாகனங்கள் தென்படின் உடனடியாக தவிசாளருக்கு உறுப்பினர்களுக்கு அறிவிக்கலாம் அல்லது பொலிசாருக்கும் அறிவிக்கலாம்.
 
காரைதீவு பிரதானவீதியில் குறிப்பாக தேவாலயம் முன்பக்கம் கல் மண் ரிப்பர்கள் நிறுத்தப்படுவது தற்காலிகமாக தடைசெய்யப்படவேண்டும். அதனால் ஆபத்து ஏற்படவாய்ப்புண்டு.
குறிப்பாக தென்புற எல்லை வடபுலஎல்லையில் பாதுகாப்பு சோதனைச்சாவடிகள் நிறுவப்பட்டு ஊருக்குள் நுழையும் இனந்தெரியாதநபர்கள் தடுக்கப்படவேண்டும். மாட்டெலும்புகள் போடப்பட்டுவரும் காளிகோவில் சூழலில் இன்றும் அது தொடர்கிறது. அதுபோல வெடிபொருட்களை வீசவும் வாய்ப்புள்ளது. எனவே அவ்வீதியால் செல்வோர் சோதனைக்குட்படுத்தப்படவேண்டும்.
 
வெகுவிரைவில் இடம்பெறவிருக்கும் கண்ணகை அம்மனாலய திருக்குளிர்த்திச் சடங்கின்போது கடைகள் வழங்குதல் தொடக்கம் பக்தர்கள் கூடுகின்ற பலவிடயங்களில் இறுக்கமானபோக்கு கடைப்பிடிக்கப்படவேண்டும்.
 
சுற்றவரவுள்ள 3கிராமங்களினதும் இஸ்லாமியசமுகதலைவர்களுடன் புரிந்துணர்வான நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள மாதாந்த அமர்வுகளை ஏற்படுத்திக்கொள்ளல்.பரஸ்பரம் பாதுகாப்பு செயற்பாடு தொடர்பில் கலந்துரையாடுதல்.
 
பாடசாலைப்பாதுகாப்பில்  பாடசாலை அதிபர்களுடன் கல்விச்சமுகம் ஒத்துழைத்து பாதுகாப் உறுதிசெய்தல்வேண்டும்.
காரைதீவின் வடபுலஎல்லையிலுள்ள தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனை பாதுகாப்புவழங்க சம்மாந்துறைபொலிசாரிடம் விண்ணப்பித்தற்கு இதுவரை எவ்விதபதிலும்கிடைக்கவில்லையெனக்கூறிய அதன் பொறுப்பாளர் அதனைச்செய்துதருமாறும் கேட்டுக்கொண்டார்.
 
இறுதியில் தவிசாளர் கி.ஜெயசிறில் கூறுகையில்:
 
ஜஎஸ் பயங்கரவாதிகளின் தளம் கிழக்கிலே குறிப்பாக மட்டு.அம்பாறை மாவட்டங்களில் இருந்திருப்பதனையிட்டு அச்சப்படவேண்டியிருக்கிறது. நமக்கருகில் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. எனவே எமது பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டிய கட்டாயதேவை எமக்குள்ளது.
நீங்கள் கூறிய பாதுகாப்பு விடயங்களை முன்னெடுக்கவேண்டிய தார்மீக்கடமை எமக்குள்ளது. மக்களின் வாக்குகளைப்பெற்றநாம் மக்களைப் பாதுகாப்பது எமது கடமையுமாகும். இங்கு இன்னும் 3உறுப்பினர்கள் அழைப்புக்கடிதங்கள் வழங்கப்பட்ட சில பிரமுகர்களும் வரவில்லை.நாம் சட்டத்தை கையிலெடுக்கமுடியாது. நீங்கள் எல்லையில் பாதுகாப்புச்சாவடி போடுமாறு இன்றுதான் கேட்கிறீர்கள்.நான் அதற்காக சம்மாந்துறைப்பொலிசிற்கு பலதடவைகள் ஏறிஇறங்கியுள்ளேன்.
 
வைத்தியசாலை உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு போடப்படவேண்டுமென இராணுவத்திடமும் கேட்டுள்ளேன். மேலிடத்து உத்திரவிற்கமையவே அதனைச் செய்வதாகச் வதாகச்சொன்னார்கள்.
தேவாலய ஞாயிறுப்பாதுகாப்பிற்கு பொலிஸ் பாதுகாப்பை வழங்க இன்னும் அனுமதிகிடைக்கவில்வை எனும்போது கவலையடைகிறேன்.உரியதரப்பிற்கு எத்திவைக்கிறேன்.
இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டல் செய்வதனூடாக பாதுகாப்பை மேற்கொள்ளமுடியும்.அதற்காக அவர்களை பலிக்கடாக்களாக்கமுடியாது. அதனையும் சட்டப்படி செய்வோம்.
மண்கல் ரிப்பர்கள் அவ்விடத்தில் நிறுத்த அனுமதியில்லை.உடனடியாக நடவடிக்கை எடுப்போம். உங்கள் ஆலேசனைகளுக்கமைவாக உரியதரப்பினரிடம் எத்திவைத்து பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுப்போம் .அதற்கு சகஉறுப்பினர்கள் தொடக்கம் மக்களின் பூரண ஒத்துழைப்பு மிகமிக அவசியம் என்றார்