9 கத்திகளுடன் ஐ.எஸ். உறுப்பினரின் சகோதரர் அட்டனில் கைது

(க.கிஷாந்தன்)

ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினரொருவரின் அட்டனில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து ஒன்பது கத்திகள் பொலிஸாரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் வீட்டில் இருந்த குறித்த நபரின் சகோதரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர் இறுதியாக கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அவர் தற்போது யேமனில் வசித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து சந்தேகநபரின் அட்டன் – மல்லியப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டை அட்டன் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.எம்.ஜெமில் தலைமையில் பொலிஸார் குழு சோதனையிட்டுள்ளனர்.

அதன்படி, வீட்டின் களஞ்சிய அறையில் இருந்து இந்த கத்திகள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சகோதரர் அட்டன் மாவட்ட நீதவான் ஜொக்சி முன்னிலையில் முற்படத்தப்பட்ட பின்னர் 20 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அட்டன் காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு சந்தேக நபருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை காரனமாக அட்டன் டிக்கோயா பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இனைந்து பாரிய சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

பொகவந்தலாவ அட்டன், அட்டன் பொகவந்தலாவ, மஸ்கெலியா சாமிமலை, சாஞ்சிமலை சலகந்த ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் முச்சக்கரவண்டி, வேன், லொறி போன்ற வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்துவதோடு, பயணிகளின் அடையாள அட்டடை பைகள் எனபவற்றை சோதனைக்கு உட்படுத்திபட்டமை குறிப்பிடதக்கது Ö