மனிதம் மானுடத்தை மதிக்கட்டும் – கலாநிதி எம்பி.ரவிச்சந்திரா

மதங்கள் மனிதர்களை மனிதர்களாக வாழ வைப்பதற்கே உருவெடுத்தன. எல்லா மதங்களும் மனிதனை நேசிக்கச் சொல்கின்றன. அன்பை வலியுறுத்துகின்றன மன்னிக்கும் படி கோருகின்றன. மனிதம் மானுடத்தை மதிக்கட்டும் என்று மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர், கல்வியலாளர், கலாநிதி எம்பி.ரவிச்சந்திரா தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறில் மரித்த உயிர்களுக்காக என்ற தொனிப்பொருளில் அகில இலங்கை மக்கள் செயல் கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற கிழக்கில் இன, அத, அரசியல், பிரதேச வேறுபாடுகளைத்தாண்டிய பொது இரங்கல் நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
நாம் சொல்லொண்ணாத் துயரங்களையும், இழப்புக்களையுயும் விலைமதிப்பற்ற உயிர்களையும் பலி கொடுத்துள்ள இந்த நாட்டில் மீண்டும் ஒரு துயரினைச் சநதித்துள்ளோம். இன மத பேதமற்ற நாடு என்ற அரசியல் கோட்பாடும் பன்முகச்சிந்தனையும் உள்ள இந்த நாட்டில் சட்டங்களுக்கு விரோதமான முறையில் இடம்பெறும் சமூக விரோத, அரசியல் விரோத மத விரோத, இன விரோத, பிரதேச விரோத செயற்பாடுகளின் மூலம் ஒரு சிறு குழுவினர் ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மையை சீரழிப்பதோடு, அல்லாமல் அபபாவி மக்களை கொன்றொழிப்பதன் மூலம் சாதிகக முயல்வதென்ன?
நிலையற்ற இந்த உலகில் வாழும் காலத்தைப் பரஸ்பர புரிதலுடன், மகிழ்ச்சியும், சமாதானமும், விட்டுக் கொடுப்பும் நிறைந்த நிலைப்பாடுகளை மனித நேயமும் மிக்க மனிதத்துவத்தை மதிக்கும்மானிட நேயமுள்ள மனிதர்கள் மனிதர்களாக இருக்க வேண்டிய உலகில், மனிதன் அறிவுள்ள விலங்கு எனற அடிப்படைத் தத்துவத்தில், உறங்கிக்கிடக்கும் விலங்கு உணர்வை முதன்மைப்படுத்தும் கோசங்கள், பிரச்சாரங்கள் மூலம் மானிடம் தனது மனித்ததுவத்தை இன்று உலகெங்கிலும் இழந்து நிற்கிறது.
மனிதனை மனிதனாக வாழ வைக்க உலகம் தோன்றிய காலம்முதல் மனித இனம் சிந்திக்கும் ஆற்றலின் வெளிப்பாடுகளில் முகிழ்த்த கருத்தாடல்களின் மூலம் கிளம்பிய மாற்றுக் கருத்தாடல்களும் மனிதத்துவத்தை நிலைபேறுடையதாக்க முயற்சித்துள்ளன. இந்த வகையில் இயற்கை நெறியில் சமூக விழுமியங்களை இழந்த மானிட சமூகத்தை நெறிப்படுத்த அறக்கருத்துக்கள், அறக் கோட்பாடுகள்  அன்றைய கால சிந்தனைவாதிகளால் முன்வைக்கப்பட்டன.
அந்தப் போக்குகளில் இருந்து மனிதம் விலகிய போது பக்திப்பாரம்பரிய கோட்பாடுகளும், இறை கருத்துக்களும் சமூகத்தை நெறிப்படுத்த முளைத்தன. இந்த முனைப்புக்கள் இன்று மானுடத்துவத்தில் வெறியாக, வாதமாக பரிணமித்ததன் விளைவு சமூக நன்னடத்தை பிறழ்வடைந்துள்ளது.
மதங்கள் மனிதர்களை மனிதர்களாக வாழ வைப்பதற்கே உருவெடுத்தன. எல்லா மதங்களும் மனிதனை நேசிக்கச் சொல்கின்றன. அன்பை வலியுறுத்துகின்றன மன்னிக்கும் படி கோருகின்றன. உண்மை, அன்பு, மன்னிப்பு, தூய்மையான சகோதரத்துவ வாழ்வை உயிர்களிடத்தில் அன்பு காட்டும் வாழ்வை ஜீவ சிந்தனையாகக் கொண்டு வாழவின் ஆதார சுருதியாக முன்னெடுக்கும்படி வலியுறுத்துகின்றன.
நிறைந்த சிந்தனைகள், நிறைந்த இந்த உலகில் நல்ல தூய சிந்தனைகளை முன்நிறுத்துவோம். அதன் வழி பயணிப்போம். அன்பையும் அறத்தையும் பாதுகாப்போம். கொல்லாமையை வலியுறுத்தும் மதங்களைக் கொண்ட இந் நாட்டில் கொல்லாமையை நிறுத்த இந்தச் சந்தர்ப்பத்தில் உறுதிபூணுவோம்.
இழந்தவை இழந்தவைதான் அதற்கான நியாயங்கள் கிடைக்கப்பெற வேண்டும். ப்போதும் மறக்காமல் இருப்பது அன்பு அலல. என்ன நடந்தாலும் ;வெறுக்காமல் இருப்பதே உண்மையான அன்பு. அன்பு எங்கே அதிகம் இருக்கிறதோ அங்கே சமாதானம் அதிகமாக இருக்கும். இதைத் தெரிந்து கொண்டால் வாழ்வில் பிரிவு இருக்காது. எனவே அன்பின் வழிநின்று செயற்படுவோம்.
இந்த வகையில் கிழக்கின், இன , மத, அரசியல், பிரதேச, வேறுபாடுகளைத் தாண்டிய வகையில் மனிதம் என்ற மானிடத்துவத்தை நமக்கும் வளர்ப்போம். நாம் மனிதர்கள் புத்தியுள்ள மனிதர்கள், பக்தியுள்ள மனிதர்கள், பண்புள்ள மனிதர்களாக வாழ்வோம்.
இத்தகைய கொடூரங்கள், அழிவுகள், இனியுமு; நிகழாதபடி மனித உரிமைகளை பாதுகாக்க இலங்கை அரசும், சர்வதேசமும் எமக்குத் துணைபுரிய வேண்டும். எமது சிந்தனைகளும், எமது எண்ணங்களும், எமது கோரிக்கைகளும் இவையே.
மனிதர்கள் நாம் சுதந்திரத்தையும், எமது இறைமையையும் நாமே பாதுகாப்போம். எமது எதிர்பாராப் பிரிவுகளின் ஈடு இணையற்ற இழப்புகளை உணர்வோடு பகிர்ந்து இதய பூர்வ அஞ்சலியாய் அவர்களுக்கு செலுத்தும் காணிக்கையாக இறையாசியில் தூய்மையானதொரு சமாதானத்தை அஞ்சலியாய் வேண்டி நிற்போம்.
அகில இலங்கை மக்கள் செயல் கழகத்தின் ஒழுங்கமைப்பில் கடந்த உயிர்த்த ஞாயிறில் மரித்த உயிர்களுக்கான இரங்கல் நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில்  இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மத பெரியார்கள் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன்,  மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர், மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மட்டக்களப்பு மாநகர முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், மாநகர தீயணைப்பு படையினர், மாவட்ட மகளிர் அமைப்புகள் என பலர் பங்குபற்றினர்.
மக்கள் செயல் கழகத்தின் வரவேற்புரையை  கணேசானந்த ரெட்ணம் சுதர்சன் நிகழ்த இரங்கல் உரையை கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா வழங்கினார்.
தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மாநகர முதல்வரும் சமூக ஆர்வலர்களும் மத குருமார்களும் உரை நிகழ்த்த இறுதியில் மெழுகுவர்த்தி தீபங்கள் ஏற்றி மலரஞ்சலி அனைவராலும் செலுத்தப்பட்டது.
சம்பவம் தொடர்பில் விரைந்து செயற்பட்ட அனைவருக்கும் கழகத்தின் உறுப்பினர் விஜயதர்சன் நன்றிகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இன மத பிரதேச அரசியல் வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டமை விசேட அம்சம் ஆகும்.