’பொறுப்பைக் கொடுத்தால், 2 வருடங்களில் ISஐ துடைத்தெறிவேன்’

அரசியல் ரீதியான பொறுப்பைக் கொடுத்தால், நாட்டுக்குள் ஊடுருவியுள்ள இஸ்லாமிய அரசு எனும் ஐ.எஸ் பயங்கரவாதச் செயற்பாடுகளை, 2 வருடங்களில் முடித்துக் காட்டுவேனென, முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி தெரிவித்தார்.

நாடு எதிர்நோக்கியுள்ள சர்வதேசத் தீவிரவாதம் குறித்து, தமிழ்மிரருக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியின் போதே, மேற்கண்டவாறு கூறினார்.

செவ்வியின் முழு விவரம் வருமாறு,

கே: ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலங்கை இலக்கு வைக்கப்பட்டமைக்கான காரணம் என்ன?

இங்குள்ள பாதுகாப்பு நிலைமை சரியில்லை. பாதுகாப்புத்துறைக்கான அம்சங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அனைவராலும் சுதந்திரமாக நடமாட முடிகின்றது. இங்கு எந்தவொரு சோதனை நிலையங்களும் இல்லை. இதேபோன்ற தாக்குதல்களை, எந்தவொரு காரணத்துக்காகவும் மேற்கத்தேய அல்லது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மேற்கொள்ள அவர்கள் தீர்மானித்திருந்தால், அங்கு பாதுகாப்பு மிகவும் பலமாகவே இருப்பதால் சாத்தியப்பட்டிருக்காது. எனவே, எமது நாடே தாக்குதல்களை மேற்கொள்ள இலகுவாக இருக்கும் என்பதாலேயே, இங்கு தாக்குதலை முன்னெடுத்திருக்கலாம் என்று எண்ணுகிறேன். அதனாலேயே, எங்களது நாட்டை அவர்கள் தெரிவு செய்துள்ளனர். இந்தத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட அமைப்பின் கீழ் பயிற்சிகளைப் பெற்றிருக்கலாம். வெகு நாள்களாக அவர்களுடன் பணியாற்றியிருக்கலாம். சரியான இலக்குகளை வைத்து, பணிப்புரை வரும் வரை அவர்கள் காத்திருந்து, இதைச் செய்திருக்கலாம். இந்நிலையில், இவ்வாறான தாக்குதலொன்றை மேற்கொள்வதற்கு, இதுவே சரியான நேரம் என்று அவர்கள் கணக்கிட்டு, தாக்குதல் மேற்கொண்டிருக்கலாம்.

கே: நாட்டில் ஜனாதிபதியும் பிரதமரும், நாட்டில் இவ்வாறான தாக்குதலொன்று மேற்கொள்ளப்படுவது குறித்து புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து தகவல்களைப் பெற்றிருக்கவில்லை என்று கூறியுள்ளனர். ஒரு நாடு என்ற வகையில், இவ்வாறான காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியுமா?

நாம் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்வதாக இல்லை. புலனாய்வுத்துறையின் நிலை என்னவென்று அவர்கள் அறிந்திராவிடின், அவர்களது பணியை அவர்கள் சரியாகச் செய்யவில்லை என்றே அர்த்தம். நாட்டில் என்ன நடக்கின்றது என்பதை, அவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். நாட்டு மக்களின் பாதுகாவலர்களாகவே அவர்கள் இருக்கின்றனர். அதனால், ஜனாதிபதியோ பிரதமரோ, நாட்டுக்கு மக்களிடம் பசப்புக் காரணங்களைக்கூறி மன்னிப்புக் கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டில் என்ன நடக்கின்றது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை என்றால், அதற்கான ​பொறிமுறை சரியான முறையில் இயங்கவில்லை என்றே அர்த்தப்படுகிறது. அத்தோடு, நாட்டின் நிலைமையை அவர்கள் புறக்கணித்துள்ளனர். அவர்களது கடமையை, அவர்கள் செய்யவில்லை. அதனால், அவர்களது தயவுகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

கே: பாதுகாப்புச் சபை கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று பிரதமர் கூறியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. எவ்வாறாயினும், இவ்வாறான கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்று அவர் சென்றிருக்கலாம் தானே?

பாதுகாப்புச் சபையில் ஒரு பிரதிநிதியாக இருப்பது, பிரதமரின் கடமை. ஆனால், அதை அவர் செய்யவில்லை. அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அவ்வாறாயின், சில நடவடிக்கைகளை அவர் எடுத்திருக்கலாம். இது குறித்து அவர் அமைச்சரவையில் கூறியிருக்கலாம். அமைச்சர்களுக்குக் கூறியிருக்கலாம். நாடாளுமன்றத்திலும் கூறியிருக்கலாம். ஆனால், இது எதுவுமே நடக்கவில்லை. அதனால், குற்றச்சாட்டிலிருந்து அவரால் தப்பிக்க முடியாது.

அடுத்தது, ஜனாதிபதியும்,  பிரதமரை அழைத்திருக்கவில்லை. அத்தோடு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரையும்  அவர் அழைத்திருக்கவில்லை. பாதுகாப்புச் சபை ஒன்றை நடத்துவதற்கான பல விதிமுறைகளும் முறைமைகளும் உள்ளன. கூட்டங்களின் போது, பிரதமரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினதும் வருகை மிக முக்கியமானதாகும். அவர்கள் வராவிடினும், இது குறித்து கவனஞ்செலுத்தி, அவர்களை வரவழைப்பது ஜனாதிபதியின் பொறுப்பாகும். இவர்கள் யாருமே இன்றி, பாதுகாப்புச் சபைக் கூட்டத்தை ஒரு ஜனாதிபதி நடத்தினார் என்றால், அங்கு ஒரு பாதுகாப்புச் சபையே இல்லை என்றே அர்த்தம்.

கடந்த காலங்களில் இந்த நாடு, பாதுகாப்புச் சபை இல்லாமலேயே செயற்பட்டு வந்துள்ளது. பல தனிப்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டிருந்தாலும், கடந்த 6 மாதங்களாக, பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடைபெற்றிருக்கவில்லை. எனவே, ஜனாதிபதியே இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும்.

 

கே: இந்தத் தாக்குதல்களை நடத்துவதற்கு முன்னர், தௌஹீத் ஜமாத் அமைப்பு குறித்து, அரசாங்கம் அறிந்து வைத்திருந்ததா?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொள்கை வேறுபட்டது. ஈழம் வேண்டும் என்றும் தனி நாடு வேண்டும் என்றே அவர்கள் போராடினார்கள். ஆனால், முஸ்லிம்கள், வேறொரு நாட்டைக் கோரவில்லை. மற்றைய சமூகத்தினருடன் ஒன்றிணைந்தே வாழ்ந்து வருகின்றனர். எனவே, இந்தத் திட்டம், நிச்சயமாக இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் சிலரது அல்லது வெளிநாட்டிலுள்ள குறிப்பிட்ட சில அமைப்புகளின் திட்டமாகும்.

அவர்களே, ஒரு குறிப்பிட்ட நாட்டில் மாத்திரமல்லாது, உலகளாவிய ரீதியிலுள்ள அனைத்து நாடுகளிலும் தங்களது திட்டங்களை வகுத்து வருகின்றனர். இஸ்லாம் அரசுக்கு தேவைப்படுவதெல்லாம், இந்த உலகத்தையே அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதாகும். எனவே, எல்.டி.டி.ஈயினருக்கும் இந்த ஐ.எஸ் அமைப்புக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது.

கே: சிறுபான்மையினரை இலக்காக வைத்து, ஆரம்பத்திருந்தே இவ்வாறான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளனவா?

இல்லை என்றே நான் கருதுகிறேன். இலங்கையிலுள்ள முஸ்லிம் இனத்தவர்கள், ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் மாத்திரம் வாழவில்லை. கிழக்கில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய சமுதாயம் உள்ளது. ஆனால், அதுவும் கிழக்கில் சிறுபான்மையினராக​வே உள்ளனர். வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்ச் சமுதாயத்தைப் போன்றல்லாது, முஸ்லிம் சமுதாயம் சிறுபான்மையாகவே இருக்கின்றது.

முக்கியமாக, குறிப்பிட்டதொரு பகுதி, தங்களுக்கு வேண்டும் என்று ஒருபோதும் அவர்கள் கோரியதில்லை. அவர்களுக்கு வழங்கவேண்டிய உரிமைகளில் எந்தக் குறைபாடும் இல்லை. அரசாங்கத்தை எடுத்துக்கொண்டால், முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் உள்ளனர். முக்கியமான இரண்டு அரசியல் கட்சிகளும் உள்ளன. அவர்கள் அனைவருமே, அரசாங்கத்தின் மிகவும் பலமான உறுப்பினர்களாகவே உள்ளனர்.
கடந்த சில காலங்களில், கண்டியில் ஏற்பட்ட சிறியதாரு கலவரத்தைத் தவிர, நாடளாவிய ரீதியில், சிங்களவர்களும் முஸ்லிம்களும் ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர். வர்த்தகமானாலும் சமூதாயமென்றாலும், ஒன்றாகவே இருந்து வருகின்றனர். நாட்டில் முஸ்லிம்கள் எப்போதும் புறக்கணிக்கப்பட்டது கிடையாது.

கே: இந்தத் தாக்குதலுக்குப் பின்னர், புலம்பெயர் பாகிஸ்தானியர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறானதொரு நிலையில், இந்தத் தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர், நாட்டிலுள்ள முஸ்லிம் சமுதாயத்தின் நிலைமை என்ன?

பாகிஸ்தானியர்கள் குடியேறியுள்ள பகுதியில் நிரந்தரமாக வசிப்போர், இந்தத் தாக்குதல் இடம்பெற்றதையடுத்து அச்சமடைந்தனர். பாகிஸ்தான் பிரஜைகளால் ஏதேனும் பிரச்சினைகள் வந்துவிடுமோ என்று எண்ணினர். பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்தனர். அதனால், பாகிஸ்தான் பிரஜைகள் வேறொரு பகுதிக்கு இடமாற்றப்படல் வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்கள் தாக்குதலுக்கு உட்படுத்தப்படவில்லை.

வர்த்தகத்​ தேவைக்காக நாட்டுக்கு இவ்வாறு வருவோர் குறித்தும் நாம் தற்போது அவதானம் செலுத்த ஆரம்பித்துள்ளோம். அந்த வகையில், சிங்கள மற்றும் கத்தோலிக்கச் சமூகத்திலிருந்து, முஸ்லிம்கள் மீது எந்தவொரு ​தாக்குதலும் நடத்தப்படவில்லை. எந்தவொரு வன்முறையும் பதிவாகவில்லை. சிங்கள சமூதாயத்திலுள்ளவர்கள், தற்போதுள்ள நிலைமையை முறையாகக் கையாண்டுள்ளனர். 1980களில் அவர்கள் செய்த தவறை மீண்டும் செய்ய அவர்கள் விரும்பவில்லை.

அத்தோடு, நாட்டிலுள்ள முஸ்லிம் சமுதாயத்தினரைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதோடு. அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியுள்ளது. சிலரால் முன்னெடுக்கப்படும் இந்தப் பிரச்சினையைக் காரணங்காட்டி, நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் தவறான ஓர் எண்ணத்தோடு நாம் பார்க்கவில்லை.

கே: இந்தத் தற்கொலை குண்டுதாரிகள், கோடீஸ்வரர்களின் புதல்வர்கள் என்று கூறப்படுகிறது. நல்ல பொருளாதாரம், நல்ல கல்விநிலையைக் கொண்டுள்ள இவர்கள், இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்ளக் காரணம் என்ன?

இங்கு மூளைச் சலவையே இடம்பெறுகின்றது. முஸ்லிம் என்பதைக் காரணமாகக் காட்டி, மூளைச் சலவை செய்து, இவ்வாறான பாரிய அமைப்புகளில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். அத்தோடு, இவ்வாறான அமைப்புகளிடம் காணப்படும் பணத்தைக் காட்டியும் இவ்வாறு மாற்றங்களைக் கொண்டு வருகின்றனர். தற்காலத்து ​இளைஞர்கள், இவ்வாறு தாக்குதல் நடத்துவதை ஒரு நாகரிகமாக நினைத்துக் கொண்டிருக்கலாம். யாரை மூளைச் சலவை செய்யலாம் என்பது குறித்து, பயங்கரவாதிகள் அறிந்து வைத்துள்ளார்கள்.

கே: இவ்வாறு இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு, தவறான பாதையில் செல்வதைத் தடுப்பதற்கான இலங்கையின் பொறுப்பு என்ன?

அனைத்து மக்களின் பாதுகாப்பையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும். மக்களின் ஆதரவின்றி, இவற்றை இராணுவத்தாலும் பொலிஸாராலும் இல்லாமல் செய்ய முடியாது. பாதுகாப்பு தொடர்பான பிரசாரங்கள் தற்போது நடைபெற்று வந்தாலும், இதை நீண்ட நாள்களுக்குக் கொண்டுசெல்வதே நல்லது.

கே: நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதையடுத்து, இதற்கான பொறுப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு, அவர் பதவி விலகவேண்டும் என்று கூறப்படுகிறதே?

அபிவிருத்தி அடைந்த நாடுகளில், ஜனநாயகம் நன்றாக உள்ளது. ஆனால், எமது நாட்டில் அது ஒழுங்காக இல்லை. இந்நிலையில், நாட்டின் இந்த நிலையைப் புறக்கணித்த ஜனாதிபதி, தொடர்ந்து அந்தப் பதவியில் இருக்கவேண்டும் என்பது சரியானதல்ல. அதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். மக்களும் அவரை இனி ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவருடைய பொறுப்புகளை அவர் எவ்வாறு புறக்கணித்துள்ளார் என்பது பற்றி மக்கள் அறிந்து வைத்துள்ளார்கள்.

நாட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டபோதும், பல விமானங்கள் இலங்கைக்கு வந்தபோதும், சிங்கப்பூரிலிருந்து 18 மணித்தியாலங்களுக்குப் பின்னரே அவர் வந்தார். நாட்டுத் தலைவரிடம் எதிர்பார்ப்பது, அவரிடம் இல்லை என்பதால், நேரம் வரும்போது, மக்கள் தேவையான முடிவை எடுப்பார்கள்.

கே: எதிர்க்கட்சியினர் அவருடைய இராஜினாமாவைக் கோரியுள்ளனரா?

உத்தியோகப்பூர்வமாக எதையும் நாம் செய்யவில்லை. ஆனால், இது குறித்தான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தப் பதவியில் அவர் தொடர்ந்து இருப்பது சாத்தியப்படாது என்ற பொதுவான ஒரு கருத்து உள்ளது. இன்னும் கூட, பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனை எதுவுமின்றி, அவரின் தேவைக்கேற்பவே, இந்த நிலைமையை அவர் நடத்திச் செல்கிறார். எனவே, அவருடன் வேலை செய்வதை நாம் கடினமாக நினைப்பதோடு, அவர் தொடர்ந்தும் தலைவராக இருந்தால், இந்த நாடு கஷ்டப்படும்.

கே: இலங்கை இனிவரும் காலங்களில் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள், சவால்கள் எவை?

தமிழீழப் பிரச்சினையை நாம் இன்னும் மறந்துவிடவில்லை. ஆனால், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரவாத்தை இல்லாமல் செய்வதற்கு, வேறு சில பலமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது கட்டாயமாகும். இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. உலக பயங்கரவாரத்தின் ஒரு பகுதியாகவே இது கருதப்படுகின்றது.

இஸ்லாமிய அரசுப் பயங்கரவாதம், வேறுபட்ட கொள்கைகளையே கொண்டுள்ளது. எனவே, இதை இல்லாமல் செய்வதற்கான பாரிய பொறுப்பு எம்மிடம் உண்டு. அதனால், ஐ.எஸ் பயங்கரவாதம் ஊடுருவுவதைத் தடுக்கவேண்டும். தற்போது காணப்படும் இந்தப் பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வை, அரசாங்கம் காணவேண்டும். அதையே மக்களும் விரும்புகின்றனர்.

கே: இனிவரும் நாள்களில், தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தடுத்து, நாட்டை வழமையான நிலைமைக்கு கொண்டுவர முடியுமென நினைக்கிறீர்களா?

அதற்கான நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து, முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கப்பெற வேண்டும். அப்போது அது சாத்தியப்படும். இந்நாட்டு ஜனாதிபதியும், இந்த விடயத்தின் பாரதூரத்தை அறிந்து செயற்பட வேண்டும்.

கே: நாட்டில் நிலைகொண்டுள்ள பயங்கரவாதிகளை முற்றாக ஒழிக்க, 2 வருடங்களேனும் தேவை என்று கூறியுள்ளீர்கள்? அதற்கான திட்டம் உங்களிடம் உள்ளதா?

எனக்குள்ள அனுவபத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்தப் பிரச்சினையை 2 வருடங்களில் முடிக்க முடியுமென்று நம்புகிறேன். அதற்கான சிறந்த திட்டமிடல் இருக்க வேண்டும். யுத்தத்தை நான், மூன்று வருடங்களுக்குள் முடிப்பேன் என்று கூறியிருந்தேன். ஆனால், 2 வருடங்களும் 9 மாதங்களுக்குள் அதை முடிவுக்குக் கொண்டுவந்தேன். அந்தவகையில், இப்பிரச்சினையையும் இரண்டு வருடங்களுக்குள் ​முடிவுக்குக் கொண்டுவரலாம். அதற்காக, அவர்களைப் பிடித்துக் கொல்வது தான் திட்டம் என்று கூறவில்லை. தவறிழைப்பவர்களைக் கைது செய்தல், அவர்களின் செயற்பாடுகளை முடக்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம், இந்தப் பிரச்சினையை, இரண்டு வருடங்களுக்கும் தீர்க்கலாம் என்று நம்புகிறேன். இரண்டு, மூன்று மாதங்களில், இப்பிரச்சினையை ஒருபோதும் தீர்க்க முடியாது.

​கே: அதைச் செயற்படுத்த, எவ்வாறான அதிகாரம், எவ்வாறான பதவியை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

நான் இப்போது அரசியல்வாதி என்பதால், இராணுவத்தைப் பொறுப்பேற்க முடியாது. கட்டாயம், அரசியல் ரீதியான பொறுப்பையே ஏற்க வேண்டும். அந்த வகையில், எனக்கு தற்போது, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை வழங்க வேண்டுமென பலரும் கோரி வருகின்றனர். அந்த அமைச்சை தற்போது, சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதி தன்வசம் வைத்திருக்கிறார். அரசமைப்பின் பிரகாரம், அதை அவரால் வைத்திருக்க முடியாது. அந்த அமைச்சை அவர் கைவிட்டு, அரசாங்கத்திடம் அதை ஒப்படைக்க வேண்டும்.

அதன் பின்னர், அந்த அமைச்சைப் பொறுப்பேற்கத் தகுதியானவர் யார் என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும். தற்போது நாடு எதிர்​நோக்கியுள்ள பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் நல்ல தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

கே: மஹிந்தவினால் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளுடனான கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது. அதற்கான அழைப்பு உங்களுக்கு கிடைக்கவில்லையா?

முன்னாள் ஜனாதிபதியுடனான கொடுக்கல் வாங்கல்களை, நான் எப்போதோ முறித்துக்கொண்டேன். அதனால், அவ்வாறான கலந்துரையாடல்களுக்கு, அவர் என்னை ஒருபோதும் அழைக்க மாட்டார். அவ்வாறு நடத்தப்பட்ட கலந்துரையாடல், அரசியல் ரீதியிலான கலந்துரையாடலாக இருக்கும்.

கே: ஐ.எஸ் தீவிரவாதிகள் புகுந்த நாடு, அவர்களிடமிருந்து மீட்கப்பட்டதாக வரலாறு இல்லை. அப்படியிருக்க, இலங்கை எவ்வாறு தப்பும்?

கட்டாயம் தப்பிக்க முடிவும். அதற்கு, இந்நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும். அத்துடன், நாட்டிலுள்ள அனைத்தின மக்களும், இதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். விசேடமாக முஸ்லிம் மக்கள் ஒத்துழைக்க வேண்டும். காரணம், இதனால் அவர்களே பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். இந்தப் பயங்கரவாதப் பிரச்சினையால், அவர்களுடைய வாழ்க்கை முறைக்கு பெருமளவில் தடங்கல் ஏற்படும். அதனால், அந்த மக்கள் இந்த விடயத்தில் அதிகளவு அக்கறை காண்பிக்க வேண்டும்.

அமெரிக்கா போன்ற நாடுகள், அந்த நாடுகளில் பயங்கரவாதச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதளவுக்கு, பயங்கரவாதிகளை முடக்கி வைத்துள்ளனர். அதில் வெற்றி கண்டுள்ளனர். அதனால், எம்மாலும் அதைச் செய்ய முடியாதெனக் கூறமுடியாது.

கே: பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த நாடு என்ற பெருமை இலங்கைக்கு உண்டு. அந்த பெயர் நீடிக்குமென்ற நம்பிக்கை உண்டா?

சரியானவர்களுடன் பயணித்தால், சரியானவர்களுக்கு பொறுப்புகளைக் கையளித்தால், இதில் வெற்றிகாண முடியும். ஆனால், பலவீனமான அரசியல்வாதிகள், தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டால், இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது. அதனால், அரசியல் தலைமைத்துவம் சரியானதாக இருக்கவேண்டும். இராணுவத் தலைமைத்துவமும், அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

கே: இராணுவத்துக்கு விசேட அதிகாரம் கிடைத்தால், இந்த ஐ.எஸ் பிரச்சினையைத் தீர்க்க முடியுமென்று, இரர்ணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இது குறித்த உங்களுடைய கருத்து என்ன?

இராணுவத்துக்கு அந்தத் திறமை உள்ளது. சரியாகத் திட்டமிட்டுச் செயற்பட்டால், வெற்றி காணலாம். நானும் இதே இராணுவத்தோடு ​தான் யுத்தத்தை நடத்தி வெற்றி கண்டேன். ஆனால், திட்டமிடல் மற்றும் தலைமைத்துவப் பங்களிப்பு என்பன, சரியான முறையில் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

விசேடமாக, அரசியல் தலைமைத்துவமானது, சரியான முறையில் சிந்திக்கவும் சரியான தலைமைத்துவத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிப்பட்ட அரசியல் கொள்கைகளுக்காகவும் தனிப்பட்ட நோக்கங்களுக்காகவுமின்றிச் செயற்பட்டால் வெற்றி நிச்சயம்.

 

tamilmirror