கல்முனை ஆதாரவைத்தியசாலையில் புதிய நடைமுறைகள்! உள்வரும் பொதிகள் சோதனை: வாகனங்கள் நிறுத்த கட்டுப்பாடு.

(காரைதீவு    நிருபர் சகா)

உயிர்த்த ஞாயிறு தொடர்குண்டுதாக்குதலையடுத்து கல்முனை
ஆதாரவைத்தியசாலையில் பொதுமக்கள் நோயாளர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களின்
பாதுகாப்புக்கருதி புதிய நடைமுறைகளை வைத்தியசாலை நிருவாகம் தற்காலிகமாக
அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையடுத்து இப்பாதுகாப்பு
ஏற்பாடுகளை தற்காலிகமாக அமுல்படுத்தவேண்டிநேரிட்டுள்ளதாக வைத்தியசாலை
நிருவாகம் கவலையுடன் தெரிவித்தது.
வைத்தியசாலையினுள் கொண்டுசெல்லப்படும் சகல பொதிகளும் நுழைவாயிலில்
சோதனைசெய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும். பொதுமக்கள் இதற்கு
பூரணஒத்துழைப்பு வழங்கவேண்டும் என நிருவாகம் எதிர்பார்க்கிறது.

பார்வையாளர் நேரம் -காலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரை மதியம் 12.00
மணிமுதல் 1.00 மணிவரைமாலை 4.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை என தற்காலிகமாக
மாற்றப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வாகனங்கள் வரையறுக்கப்பட்டமுறையில் நிறுத்தஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விடுதிகளுக்குச் செல்வோர் ஏலவேயிருந்த பாஸ் முறைப்படி ஆனால்
வரிசைக்கிரமமாக குறித்த காலப்பகுதியினுள் உட்செல்ல அனுமதிக்கப்படுவர்.

வைத்தியசாலை பாதுகாப்பிற்கென இராணுவத்தினர் 24மணிநேரமும் காவலில்
ஈடுபட்டுவருகின்றனர். ஊரடங்குவேளைகளில் அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலை
தாதியர்கள் சேவைக்குக்கொண்டுவரப்பட்டனர்.

இதேவேளை கடந்த வெள்ளியன்று இரவு இடம்பெற்ற
சாய்ந்தமருதுக்குண்டுத்தாக்குதலில் படுகாயமுற்ற பெண்மணியொருவர் அன்றிரவு
10மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அவசரசிகிச்சை
அளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு
அனுப்பிவைக்கப்பட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.