ஒரு இனம் இன்னோர் இனத்தின் மீது ஆளுமையை பிரயோகித்தலாகாது.

‘வஞ்சம் தீர்க்க வேண்டுமென்று கிறிஸ்தவம் போதிக்கவில்லை.’ தன்னை  சிலுவையில் அறைந்தவர்களையே மன்னித்தவர் இயேசு பிரான். அந்த வாழ்க்கை நெறியையே நாம் பின்பற்றுகிறோம்’ ஒவ்வொருவரும் தாய்நாட்டை முதலில் நேசிக்க வேண்டும். ஒரு இனத்தின் வரப்பிரசாதங்களை இன்னொரு இனம் பறித்தெடுக்கக் கூடாது. ஒரு இனம் மற்றைய இனம் மீது ஆளுமையை பிரயோகிக்கவும் கூடாது!
‘முஸ்லிம்கள் எல்லோருமே பயங்கரவாதிகள் அல்லர். முஸ்லிம் சமூகத்திலுள்ள ஒரு சிலர் செய்த பயங்கரவாத நிகழ்வுக்காக முழுச் சமூகத்தையும் நாம் ஓரம்கட்டி வைப்பதோ அல்லது அவர்களின் மேல் வஞ்சம் தீர்ப்பதோ நீதியாகாது. கிறிஸ்தவம்அப்படிப் போதிக்கவில்லை.எதிரிகளையும் மன்னிக்க வேண்டுமென்றே கிறிஸ்தவம் கூறுகிறது. மன்னிப்பு,பகை மறப்பு,நல்லிணக்கம் என்பவற்றை கிறிஸ்தவம் ஆழமாக எடுத்துரைக்கிறது.
தன்னை சிலுவையில் அறைந்தவர்களைக் கூட இயேசு பிரான் மன்னித்தார். அவர் காட்டிய வழியையே நாம் பின்பற்றுகிறோம். வன்முறைக்குத் தீர்வு வன்முறையாகாது. ஆயினும் முஸ்லிம்கள் தங்கள் மத்தியில் மறைந்திருப்பதாகச் சந்தேகிக்கின்ற தீவிரவாதிகள் பற்றிய தகவல் கொடுப்பது மிக அவசியமானது. அது நாட்டையும்,மக்களையும் அழிவிலிருந்து காப்பாற்றும்.நடந்து முடிந்தது ஒரு துன்பியல் நிகழ்வு. அதன் இழப்புகளை ஈடு செய்ய முடியாது’.
இவ்வாறு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா கருத்துத் தெரிவித்தார். தினகரனுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கேள்வி: மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஆயர் என்ற வகையில் நாட்டில் நடந்த குண்டுத் தாக்குதல் சம்பவங்களையும் அதன் பின்னால் நடந்து வருகின்ற சம்பவங்களையும் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்: நமது நாட்டில் குண்டுவெடிப்பால் ஏராளமானோர் இறந்திருக்கிறார்கள். 500க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளார்கள். மட்டக்களப்பில் மட்டும் 27பேர் இறந்திருக்கிறார்கள். அதில் 14குழந்தைகள், 5பெண்கள், 8ஆண்கள் அடங்குவர்.இது வேதனைக்குரியது.இயேசுவின் உயிர்ப்புத் தினம் கிறிஸ்தவர்களுக்கு புனித நாள். அதனால் கிறிஸ்தவர்கள் வேதனைப்படுகிறார்கள்.
கேள்வி: பாதுகாப்பு அதிகாரிகள் தமது கடமைகளை உரிய நேரத்தில் செய்யவில்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறதே…
பதில்: கிடைத்த தகவலை அதிகாரிகள் சரியாக நெறிப்படுத்தியிருந்தால் அனர்த்தத்தை தவிர்த்திருக்கலாம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதனால் பொலிஸார் கூட மூவர் இறந்திருக்கிறார்கள். அவர்களது கடமையுணர்வை மதிக்கிறோம். அவர்களுக்கு நியாயமான நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும். இச்சம்பவத்தைப் பொறுத்தவரை இது நடக்கக் கூடும் என்றதொரு எச்சரிக்ைக கிடைத்திருந்தால் அன்றைய பூசையை எங்களால் ரத்து செய்திருக்க முடியும். இதனால் அழிவு ஏற்படுவது தவிர்க்கப்பட்டிருக்கும்.
கேள்வி:ஆபத்து கால பணிகள் பற்றிய உங்களின் கருத்து என்ன?
பதில்: ஆபத்து கால பணிகள் பாராட்டத்தக்கவை. அவ்வப்பகுதி மாநகரசபையினர், வைத்தியசாலை ஊழியர்கள் தங்களது கடமைக்கு அப்பால் அர்ப்பணிப்போடு கடமையாற்றினர். அதை விட பொதுமக்கள் வயது வேறுபாடின்றி இரத்த தானம் செய்தனர். பொலிஸ் அதிாரிகள் தீவிரமாக கடமையாற்றியிருக்கின்றனர்.திருச்சபைத் தொண்டர்கள் இறந்தவர்களது பூதவுடல்களை அப்புறப்படுத்துவதிலும்,காயப்பட்டவர்களை வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்வதிலும் அனர்த்தத்திற்குள்ளான தலங்களை கழுவி துப்புரவு செய்வதிலும் முழுமையாக ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் துரிதமாக செயற்பட்டதனால் வைத்திய சேவையை காலதாதமின்றி நடந்தன.பொலிஸ் அதிகாரிகள் ஸ்தலத்தில் நாள் பூராவும் நின்றார்கள்.இவர்களுக்ெகல்லாம் நன்றி கூறுகின்றேன்.
கேள்வி: வெளிநாட்டவர் பலர் இறந்துள்ளனர். பலர் வெளியேறி வருகின்றனரே…
பதில்: உல்லாசப் பயணிகள் பயங்கரவாத குண்டு வெடிப்பினால் அச்சமுற்று அவசரஅவசரமாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாவிட்டால் அவர்களால் என்ன செய்ய முடியும்? உல்லாசப் பயணத்துறையினூடாக கணிசமான வெளிநாட்டுச் செலாவணியை நம் நாடு சம்பாதித்து வருகிறது. இந்த நாடு உல்லாசப் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு திராணியின்றி இருக்கிறது என்ற கருத்து வெளிநாடுகளில் பரப்பப்படுமாயின் அது உல்லாசப் பயணிகள் வருகையை முழுமையாகப் பாதிக்கும்.அதனால் நம்நாடு தொடர் பாதிப்பை சந்திக்க வேண்டி வரும்.பலர் தங்களது தொழிலை இழக்க வேண்டி வரும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் நாடு பொருளாதார பின்னடைவுக்குள் தள்ளப்படும்.வெளிநாட்டவர்கள் நமது நாட்டில் பயங்கரவாதச் சம்பவங்களினால் இறந்து விட்டார்கள் என்பது நமது நாட்டுக்கு பாரிய இழுக்கான செயலாகும்.
கேள்வி: தேவாலயங்களை மீளக் கட்டி முடிப்பது பற்றிய உங்களின் கருத்து என்ன?
பதில்: பாதிப்புக்குள்ளான தேவாலயங்கள் விரைவாகவும்,உறுதியோடும்,காலத்திற்கு ஒத்த நாகரிகத்தோடும் கட்டப்பட வேண்டும். இதற்கான நிதியுதவியை அரசு நட்டஈடாக வழங்க வேண்டும். வேறு ஸ்தாபனங்கள் நிதியுதவி வழங்க முன்வருமாயின் அதுபற்றி கவனத்திலெடுக்கப்பட வேண்டும்.ஒவ்வொன்றையும் கட்டுவதற்கு முன்பதாக கட்டடத்திற்கான வரைபடங்கள் பொருத்தமான ஸதாபனத்தினால் அங்கீகரிக்கப்படுவது அவசியமானது.
கேள்வி: இந்த நாட்டு இனங்களை ஒற்றுமைப்படுத்த நீங்கள் கூறும் வழிதான் என்ன?
பதில்: வெளிநாட்டுக் கொள்கைகள் எல்லாவற்றையும் அப்படியே இறக்குமதி செய்கின்ற பழக்கங்களும்,பண்பாடுகளும் ஆழமாக கண்காணிக்கப்பட வேண்டும்.
நம் நாட்டுக்கும், நமது மக்களுக்கும் பொருத்தமானதை மட்டுமே ஏற்கக் கூடிய மனோபாவம் நமது மக்களுக்கும் அரசுக்கும் வர வேண்டும்.  வ்வொரு பிரஜையும் தாய்நாட்டை முதலில் நேசிக்க வேண்டும். ஒரு இனத்துடைய வரப்பிரசாதங்களை இன்னோர் இனம் பறித்தலாகாது. ஒரு இனம் இன்னோர் இனத்தின் மீது ஆளுமையை பிரயோகித்தலாகாது.
இப்படியிருந்தால் தர்மம் தழைத்தோங்கும். மதங்களின் பேரால் சண்டைக்கு இழுப்பது நின்று விடும்.பல்லின மாணவர்கள் ஒரே பாடசாலையில் கற்கின்றவாறு கல்வித் திட்டம் வரையப்பட்டு அவை செயற்படுத்தப்படவேண்டும். இதனால் இளம் வயதிலிருந்தே மாணவர்கள் இன ஐக்கியத்தோடு வளருவார்கள். மாதந்தோறும் பல்சமய உரையாடல்களை நடத்த வேண்டும். இதில் வயது வேறுபாடின்றியும் ஆண்,பெண் வேறுபாடின்றியும் அனைத்து மதத் தலைவர்களும் மக்களும் கலந்து கொள்ள வேண்டும். இதனால் மதச் சண்டைகள் தோன்ற இடமில்லை. இதனூடாக சமாதானமம்,சகவாழ்வு நிலைக்கும்.
எஸ்.தவபாலன்