போற்றுதற்குரியவர்கள் உழைப்பாளிகளே!!!

(படுவான் பாலகன்) மரம் ஒன்று வளர்ச்சியடைவதற்கும் அது நிமிர்ந்து நிற்பதற்கும் அதனுடைய ஆணிவேர் மற்றும் பக்கவேர்கள் என்பன மிகவும் அவசியமானது. வேர்கள் இல்லையென்றால் மரங்கள் இல்லை. மரம் விருசட்சமாக வளர்த்து கிளைகளை, இலைகளை பரப்பி அழகு கொடுத்தாலும் வெளிப்படையாய் தெரியாமல் மண்ணுக்குள் இருந்து கொண்டு அதன் முழு உருவாக்கத்தினையும் தாங்கிக் கொள்வது வேர்களே. மரத்தின் இலைகளையும், அதன் கிளைகளையும் பார்த்து அழகு சொல்வதும், அறிவு சொல்வதுமாகவே இருந்து கொண்டிருக்கின்றோமே தவிர, வேர்களை நினைத்தும் அதன் அழகு, அறிவு தொடர்பிலும் எவருமே பேசிக் கொள்வது இல்லை. அதேபோலதான் மனிதனுடைய நிலையும் உண்மையாக உடம்பை வருத்தி, வியர்வை சிந்தி, வெயிலோ, மழையோபெய்தாலும் தன் தொழிலே தெய்வம் என்று நினைத்து சந்தோசமாக வாழ்க்கை நடத்துபவனாகவும் பிறருக்கு உணவழிப்பவனாகவும் கூலிவேலை செய்பவனே இருந்து கொண்டிருக்கின்றான்.
கல்விவளர்வதற்கும், பணம் சேருவதற்கும் மறைமுகமாக இருந்து தன்னை இனங்காட்டாது வாழ்ந்து கொண்டிருப்பவனும் கூலிவேலை செய்பவனே. பேராசிரியர்களை போற்றுகின்றோம், உயர்பதவிகள் வகிப்பவர்களை வாழ்த்துகின்றோம். ஆனால் எல்லோருக்கும் குருவான சாதாரண மனிதர்களைப் போற்றுவதுமில்லை, வாழ்த்துவதுமில்லை. பல்கலைக்கழகத்திலே உள்ள பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும், மாணவர்களும், உயர்கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்களும் ஆய்வு செய்யப்போகின்றோம் என்று கூறி சாதாரண மனிதர்களிடம் சென்றே ஆய்வுகளை மேற்கொள்ளுகின்றனர். அதாவது ஆய்வுக்கான கருத்துக்களை வழங்குபவர்களாக இவர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய கருத்துக்களை கொண்டு எழுத்தாவணமாக்கி பல்கலையும் கற்ற புத்திமானாக பேராசிரியர்களாக ஆகின்றனர். ஆனால் சாதாரண மனிதர்கள் அவர்களாவே இருந்து விடுகின்றனர். குறிப்பாக கூத்துப்பற்றி ஆய்வு நடத்த வேண்டுமாக இருந்தால் பரம்பரையாக கூத்தினை ஆடிவரும் கூத்தர்களிடமும், அவற்றை பழக்கும் அண்ணாவியார்களிடமுமே கேட்டு அறிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது. இவ்வாறான கூத்தர்களிடம் சென்று கருத்துக்களை கேட்டறிந்து கொண்டுஅவற்றை புத்தகமாக்கிபலர் பெருமை கொள்கின்றனர். மறுபுறம் கல்வியிலும் வேர்களாக விளங்கும் சாதாரண மனிதர்கள், பொருhளாதாரத்திலும் ஆணிவேர்களாகவே விளங்குகின்றனர். விவசாயம், தச்சு, மேசன், மீன்பிடி, செங்கல் உற்பத்தி, ஆடை உற்பத்தி என்று பல்வேறு உற்பத்திகளை வெயிலிலே நின்று கொண்டு உடல் வேதனையோடு உழைத்துநிற்கின்ற இம்மக்கள் கொள்வனவு செய்யும் அனைத்துப் பொருட்களிலும் வரிகளை அரசாங்கம் அறவிட்டு அப்பணத்தினை கொண்டே நாட்டில் அரசபதவிகளை உருவாக்கி நியமனங்கள் வழங்கி அவர்களுக்குரிய ஊதியமாக இவர்களிடமிருந்து பெறும் பணத்தினை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். கூலித்தொழில் செய்து வியர்வை சிந்தி உழைக்கின்ற  பணத்திலேபலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவ்வகையில் பலரின் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் சாதாரண கூலிவேலைசெய்யும் தொழிலாளிகளே. அவ்வகையில் மற்றவர் வாழவழிகொடுக்கும் மகாத்மாக்களாக விளங்குகின்றனர். இதனால் இவர்கள் பெருமைப்படுத்தப்பட வேண்டியவர்கள். ஆனால் இவர்களை பற்றி யாருமே சிந்திப்பதில்லைஎன்பதே இங்கு வருந்தத்தக்கவிடயமாகும்.

ஆமை அதிக முட்டையிட்டு அமைதியாக நின்றுவிடும் ஆனால் கோழி ஒரு முட்டையிட்டு விட்டு அதிகசத்தமிடும். கோழி அவ்வாறு சத்தமிட்டாலும் அதற்குதான் மதிப்பும் அதிமாகின்றது. இதுபோன்று தான் மனிதர்களது நிலையும் பலரின் வாழ்க்கையின் இருப்புக்கு ஆணிவேராக இருக்கின்றசாதாரண கூலிவேலைகள் செய்பவர்கள் ஆமைபோன்று அதிக வேலைகளை செய்துவிட்டு அமைதியாக இருந்துவிடுகின்றனர். ஏனெனில்,அவர்களதுவாழ்க்கையில் அவ்விடயங்கள் சாதாரணமானவை.

ஆனால் செல்வந்தர்களும், உயர் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சிறுவேலைகளைச் செய்துவிட்டால் அதுகோழியைப் போன்று சத்தமிட்டு எல்லோருக்கும் தெரியப்படுத்துவதும் அதன் மூலமாக அவர்களே சாதிப்பவர்களாகவும் பிறருக்குத் தென்படுகின்றனர். சாதனைகள் பல கூலிவேலை செய்பவர்களுக்கு சாதாரணமாகவிருக்க, அதிகாரிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் கூலிவேலைசெய்பவர்கள் செய்பவற்றை செய்துவிட்டால் அது சாதனையாகின்றது.
கூலிவேலை செய்து வாழ்கின்ற மக்களை திருப்திப்படுத்துவதற்காக செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் அரிது. மறுபக்கம் சமூகத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் அந்தஸ்தும் மிகக்குறைவு. ஆனால் இவர்களிடமிருந்து பெறப்படும் அறிவும்,அனுபவமும் அளப்பெரிது. இவ்வாறான மக்கள் தங்களுக்கு அறிமுகமும், அந்தஸ்தும் வழங்கப்பட வேண்டுமென கேட்பதுமில்லை. ஆனால் ஒருநாட்டில் சிறந்த அந்தஸ்து வழங்கப்பட வேண்டியவர்கள் கூலிவேலை செய்பவர்களே. இன்னோர் பக்கம் கூலிவேலை செய்பவர்களை கீழ்நோக்கி பார்க்கின்ற நிலையும் பலரிடத்தில் இருந்து கொண்டிருக்கின்றது. அவ்வாறு  நோக்குகின்றவர்கள் யார் என்றால்? அவர்கள் சமூகத்தால் உயர்நிலையில் கூறப்படுபவர்கள். இவர்கள் சற்று அறிவு பூர்வமாகப் பின்னோக்கி பார்த்தார்களானால் கீழ்நோக்கி பார்க்கின்றவர்கள் தான் கூலித்தொழில்வேலை செய்பவர்களுக்கு கீழானவர்கள். மறுபக்கம் கூலித்தொழில் செய்பவர்களை அடிமைகளாக பார்க்கின்ற நிலையும் சமூகத்தில் உள்ளது. யானை பெரியமிருகமாக இருந்தாலும் அதனை கொல்லுவதற்கு ஒரு எறும்பு போதும் என்று கூறுவார்கள். எறும்பும், யானையும் தோற்றத்தில் தொடர்பில்லாமல் இருந்தாலும் எறும்புக்கு யானை அடிமை என்பதை இவ்விடத்தில் மனதில் கொள்ள வேண்டியிருக்கின்றது. 
சுய உழைப்பை மேற்கொண்டு வாழும் மனிதர்களிடம் எதையும் சொல்லிவிடலாம், அவர்கள் அதனை கேட்டுவிடுவார்கள் என்றதன்மையும் பலரிடத்தில் இருந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஏமாளிகளாக பார்க்கின்ற நிலையும் சில இடங்களில் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றது.
உயர்ந்த கௌரவமிக்க தொழில்கள் என்று பல அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் போற்றும் சமூகம் மாற்றப்பட வேண்டும் எப்போதும் கௌரமானவர்களும், கௌரவிக்கப்பட வேண்டியவர்களும், அந்தஸ்து வழங்கப்பட வேண்டியவர்களும், முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவர்களும், சலுகைகள் வழங்கப்பட வேண்டியவர்களும், சாதாரண கூலித்தொழில் செய்து தமது வாழ்க்கை நடத்துபவர்களேயாகும் என்ற உண்மை என்று அனைவருக்கும் புலப்படுகின்றதோ அன்றைய நாளே மனிதத் தன்மை உதயமாகும் நாளாகமலரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
உழைப்பே உயர்வுதரும்; மனநிறைவு தரும்; ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளர்வறியா உழைப்பின் மூலம் நமது நாட்டின் பெருமையை உயர்த்திவரும் தொழிலாளர் பெருமக்கள் அனைவரையும் போற்றுதற்குரியவர்கள் அன்றி தூற்றுதற்குரியவர்களலல்லர் என்பதை நினைவிற் கொள்வோமாக!