இன்று திருக்கோவில் ஆலயத்தில் ஆத்ம அஞ்சலியுடன் விசேடபூஜை! பொதுமக்கள் பொலிசார் இராணுவத்தினர் பங்கேற்பு: மௌனஅஞ்சலி!

(காரைதீவு  நிருபர் சகா)
 
வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தில் கடந்த21ஆம் திகதி உயிர்நீத்த உறவுகளுக்கு ஆத்மஅஞ்சலி நிகழ்வும் விசேடபூஜையும் ஆலயத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையில் இன்று (29)திங்கட்கிழமை நண்பகல்  சிறப்பாக நடைபெற்றது.

 
ஆலயப்பிரதமகுரு சிவஸ்ரீ அங்குசநாதக்குருக்கள் விசேடபூஜையை நடாத்திவைத்தார்.
 
முன்னதாக  திருக்கோவில் பிரதேசசபைத்தவிசாளர் ஜ.கமலராஜன் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் வேல்சாமி மகேஸ்வரன் திருக்கோவில் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.ஜயவீர காஞ்சிரன்குடா இராணுவஉத்தியோகத்தர் எஸ்.சந்தருபன் மற்றும் பிரதேசசபையின் உபதவிசாளர் உறுப்பினர்கள் ஆலயநிருவாகிகள் பொதுமக்கள் அனைவரும் அகல்விளக்கேற்றினர்.
 
பகவான் சத்யசாயிபாவா சமித்தியினரின் விசேட பஜனை இடம்பெற்றது.
 
ஆலயவண்ணக்கர் வ.ஜெயந்தன் செயலாளர் அ.செல்வராஜா தலைவர் சு.சுரேஸ் பொலிஸ்பொறுப்பதிகாரி எஸ்.ஜயவீர பிரதேசசெயலகம்சார்பில் கண.இராசரெத்தினம் உள்ளிட்ட பலர் அஞ்சலி உரையாற்றினர்.
 
இனமதபேதமின்றி இறைசந்நதியில் இறைபதமடைந்த ஆத்மாக்களுக்கு நாடுமுழுவதிலும் அஞ்சலி செலுத்தப்படுவதனையிட்டு இலங்கையராகிய நாம் ஒருவகையில் பெருமைஅடையலாம்.இறைபதமடைந்த அனைவரும் இறையடிசேர பிரார்த்திப்போம் என அனைவரும் உரையாற்றினார்கள். 
 
காயமடைந்த உறவுகள் விரைவில் குணமாகவேண்டி இருநிமிடநேரம் மௌன இறைவணக்கமும் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
 
இறுதியில் ஆலயச்செயலாளர் அ.செல்வராஜா நன்றியுரையாற்றினார்.