மொஹமட் சஹ்ரானுக்கு தலைமைத்துவத்தை வழங்கிய மதத்தலைவர் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் மொஹமட் சஹ்ரானுக்கு தலைமைத்துவத்தை வழங்கிய மதத்தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மதத் தலைவரே தாக்குதல்களை நடத்துவதற்கு மொஹமட் சஹ்ரானுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறன்று தெஹிவளை விடுதியொன்றில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய 11 சந்தேகநபர்கள் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில், தாக்குதலில் உயிரிழந்த ஒருவரின் மனைவியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, தாக்குதலின் முக்கிய சந்தேகநபராகக் கருதப்படும் சஹ்ரான் என்பவர் வசித்த, மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியிலுள்ள வீட்டை பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று சோதனையிட்டனர்.

மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியிலுள்ள இந்த வீட்டை சோதனைக்கு உட்படுத்தும்போது, வீட்டிற்குப் பொறுப்பாகவிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகத்திற்கிடமான எவையும் இங்கிருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுடன், சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் இந்த வீட்டிலிருந்தவாறு தாக்குதலை திட்டமிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதேவேளை, சாய்ந்தமருது பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வீட்டிலிருந்து காப்பாற்றப்பட்ட இருவரும் மொஹமட் சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் என்பது தெரியவந்துள்ளது.

இதனை தவிர, கடந்த நவம்பர் மாதம் வவுணதீவு பகுதிலுள்ள காவலரணில் கடமையாற்றிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் உயிர்த்த ஞாயிறன்று தாக்குதல் நடத்தியவர்களால் கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, கல்முனை – சம்மாந்துறை மற்றும் சவளக்கடை பொலிஸ் பிரிவுகளில் நேற்று மாலை 5 மணி முதல் தொடர்ந்தும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது.

கடந்த 26 ஆம் திகதி இரவு முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நேற்று காலை 10 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டது.

எனினும், நேற்று மாலை 5 மணி தொடக்கம் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

newsfirst.