இன – மத வாதத்தை தூண்டினால் கடும் நடவடிக்கை ; பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை

தொடர் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையின் போது வதந்திகளைப் பரப்புதல் மற்றும் இன, மத வாதத்தை தூண்டும் வகையில் பிரசாரங்களை மேற்கொள்ளுதல் என்பவை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு தீவிர கவனம் செலுத்தியுள்ளது.

 

இவ்வாறு செயற்படுபவர்கள் அடையாளங்காணப்பட்டால் அவசர கால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதப்பத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இன, மத வாதத்தை ஏற்படுத்தும் வகையில் அவை பற்றிய பிரசாரங்களை மேற்கொள்ளுதல், ஊடக சந்திப்புக்களை நடத்துதல் , படங்கள் அல்லது வேறு வழிமுறைகளில் அவை பற்றிய உண்மைக்கு புறம்பான செய்திகளைப் பரப்புதல் போன்றவற்றில் ஈடுபடும் நபர்கள் அல்லது குழுக்கள் தொடர்பில் அடையாளம் காணப்பட்டால் அவர்களை அவரச கால சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுதல் , வதந்திகளை பரப்பும் நபர் அல்லது குழுக்கள் இனங்காணப்பட்டால் அவர்களும் கைது செய்யப்படுவார்கள். அத்தோடு பாதுகாப்பு பிரிவினரால் வழங்கப்படாத தகவல்கள் அல்லது செய்திகள் அன்றி உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.