இராணுவம், பொலிஸ் விஷேட அதிரடிப்படை,பிரதேச மக்கள் ஆகியோரின் பாதுகாப்புடன் காத்தான்குடியில் ஜூம்ஆ தொழுகை நிறைவேற்றம்.-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மதத்தவர்களின் விஷேட தினங்களில் ஒன்றான ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அனைத்து முஸ்லிம்களும் ஜூம்ஆ பள்ளிவாயல்களில் ஒன்று சேர்ந்து ஜூம்ஆ பிரசங்கத்திலும்,   ஜூம்ஆ தொழுகையிலும் ஈடுபடுவதால் அங்கு எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறாமல் பாதுகாக்கும் வகையில் இராணுவம், பொலிஸ் விஷேட அதிரடிப்படை,பிரதேச மக்கள் ஆகியோரின் விஷேட பாதுகாப்புடன் 26 இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேசத்தில் ஜூம்ஆ பிரசங்கமும், ஜூம்ஆ தொழுகையும் சிறப்பாக இடம்பெற்றது.
குறிப்பாக நாட்டில் பிரச்சினைகள் நீங்கி அமைதி,சமாதானம் நிலவுவதற்கு தொழுகையில் (குனூத்) பிரார்த்தனையும் இடம்பெற்றன.
அத்தோடு மக்களின் பாதுகாப்புக் கருதி வழமைக்கு மாறாக பாதுகாப்பு தரப்பினரின் வேண்டுகோளின் பேரில் ஒரு சில ஜூம்ஆ பள்ளிகளில் வாராந்தம் ஒரு தடவை ஜூம்ஆ என்ற அடிப்படையில் இடம்பெறுகின்ற ஜூம்ஆ பிரசங்கம் மற்றும் ஜூம்ஆ தொழுகை இன்று மாற்றப்பட்டு காத்தான்குடி அநேக ஜூம்ஆ பள்ளிவாயல்களில் ஜூம்ஆ நேரம் குறைக்கப்பட்டு ஜூம்ஆ இடம்பெற்றதுடன், பள்ளிவாயல் வளாகம் மற்றும் பள்ளிவாயலுக்கு அருகாமையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.