கல்குடா உலமா சபை மற்றும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கூட்டாக கண்டனம் தெரிவிப்பு

நீண்ட கால யுத்தத்தில் அவதியுற்று களைப்படைந்து யுத்தம் முடிந்து அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற இவ்வேளையில் மீண்டும் ஒரு முறை எமது நாடு மிலேச்சத்தனமான தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது. இந்த மனிதாபிமானமற்ற பயங்கரவாதத் தாக்குதலை மனிதாபிமானமுள்ள யாரும் கண்டிக்காதிருக்க முடியாது. இக்கோரத் தாக்குதலை இம்மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லீம்களும் மிக வண்மையாகக் கண்டிப்பதாக கல்குடா ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் கல்குடா பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆகியன இணைந்து கூட்டாக தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மேலும் அந்த கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது நாட்டில் வாழ்கின்ற பெரும்பான்மையான மக்கள் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ விரும்புகின்றனர். நாட்டு நலன் பற்றியோ நாட்டு மக்களைப் பற்றியோ சமூகத்தைப் பற்றியோ எவ்விதமான சிந்தனையும் இன்றி அற்ப இலாபத்தை அடைந்து கொள்வதற்காக பிறரது அடிவருடிகளாக அல்லது பிறரின் மறைவான நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குகின்ற தீயசக்திகளினால் தான் இத்தகைய படு பாதகச் செயற்பாடுகளில் ஈடுபட முடியும்.
இத்தயை தீய எண்ணம் கொண்ட சமூகங்களால் ஓரங்கட்டப்படுகின்ற ஒரு சிலரின் செயற்பாடுகள் ஒரு சமூகத்தின் செயற்பாடாக இருக்கவும் முடியாது அவ்வாறு கருதிவிடவும் கூடாது.
மனித சமூகமே வெட்கித் தலைகுனியும் இந்த அராஜக செயலை நடாத்தி அப்பாவிகளின் விலை மதிக்க முடியாத பல நூறு உயிர்களை காவுகொள்ளவும், இன்னும் பல நூறு பேரை காயப்படுத்தவும்,  சொத்துக்கள் இழப்பதற்கும் காரணமாக இருந்தவர்கள், இதற்கு சூத்திரதாரியாக செயற்பட்டவர்கள், இதற்கு உதவியவர்கள் உட்பட அனைவரும் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்கள் யாராக இருந்தாலும் உயர்ந்த பட்ஷ தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இதற்கான சகல நடவடிக்கைகளையும் பொலிஸாரும், முப்படையினரும் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் எமது தாய் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதுனுடன் இந்த பயங்கரவாத செயற்பாடுகளுடன் எந்த விதத்திலும் தொடர்பில்லாத அப்பாவிகளினது உயிர் உடமைகளினது பாதுகாப்பும் உறுதி செய்யப்படுதல் வேண்டும்.
ஆலயங்களில் இறைவழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் தமது குடும்பங்களுடனும் உறவுகளுடனும் ஓய்வை கழித்துக் கொண்டிருந்தவர்கள் மீது இத்தகைய மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டவர்கள் நிச்சயமாக இறை நிந்தனையைப் பெற்றுக்கொள்வதுடன் மனித சமூகத்தின் வெறுப்பையும் கோபத்தையும் அடைவர் என்பதில் ஐயமில்லை.
இந்த தாக்குதலின் காரணமாக தங்களின் அன்பான உறவுகளை இழந்து தவிக்கும் சகோதர, சகோதரிகளின் துன்பத்திலும் துயரிலும் வேதைனையிலும் பங்கு கொள்வதோடு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் காயத்திற்குள்ளாகி சிகிச்கை பெற்று வருபவர்கள் துரிதமாக சுகம் பெறவும் பிரார்த்திக்கின்றோம் என கல்குடா ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் கல்குடா பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆகியன தெரிவித்துள்ளது.