பொலிஸ் ஊரடங்கு தொடர்ந்தால் மட்டு-கொழும்பு மாலை,இரவு நேர புகையிரதம் இடம் பெறாது – காலை நேர புகையிரதம் மாத்திரம் தற்போது சேவையில்- (படங்கள்)

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
பொலிஸ் ஊரடங்கு தொடர்ந்தால் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி இடம்பெறும் மாலை மற்றும் இரவு நேர புகையிரதங்கள் இடம்பெறாது எனவும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்படாத தினங்களில் மாலை மற்றும் இரவு நேர புகையிரதம் சேவையில் ஈடுபடும் எனவும் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் பிரதான புகையிரத நிலைய அதிபர் சின்னத்தம்பி சுவேதகுமாரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி இடம்பெறும் புகையிரதம் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ………….
மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கும் கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கும் காலை மற்றும் மாலை,இரவு நேரங்களில் சேவையில் ஈடுபடும் மூன்று புகையிரதங்களில் காலையில் சேவையில் ஈடுபடும் ஒரு புகையிரதம் மாத்திரம் தற்போது சேவையில் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை காலை 11.00 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து மாகோ சந்திக்கு ஒரு புகையிரதம் சேவையில் ஈடுபடுவதுடன்,இரவு நேர எரிபொருள் புகையிரதம் இன்னும் சேவையில் ஈடுபடவில்லை.
அத்தோடு மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களிலிருந்து கொழும்பு நோக்கி இரவு நேரங்களில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களும்,தனியார் பஸ்களும் காலை நேரங்களில் சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.