பள்ளிவாசல்களை ISIS தாக்கும் பாதுகாப்பு வழங்குங்கள்

நாட்டின் தற்போதைய சூழல் தொடர்பிலும், நாட்டில் செயல்பட்டு வரும் தவ்ஹீத் அமைப்புகள் தொடர்பில் விளக்கம் அளிக்கும் முகமாகவும் இன்றைய தினம் (25.04.2019) சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பதில் பிரதி பொலிஸ்மா அதிபருடன், பொலிஸ் தலைமையகத்தில் விசேட சந்திப்பு நடத்தப்பட்டது.

தவ்ஹீத் ஜமாஅத் – என்றால் என்ன? தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் இயங்கும் அமைப்புகளின் பணிகள் என்ன என்பது பற்றியெல்லாம் குறித்த சந்திப்பில் தெளிவாக விளக்கிக் கூறப்பட்டதுடன்,
குறித்த சந்திப்பில், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ), SLTJ, ACTJ, UTJ போன்ற தவ்ஹீத் அமைப்புகள் மற்றும் உள்ளுர் தவ்ஹீத் அமைப்புகள் என யாரும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதில்லை என்பதை தெளிவாக எடுத்துக் கூறியதுடன், உள்நாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான எதிர் பிரச்சாரங்களை தவ்ஹீத் அமைப்புகளே முன்னெடுத்து வருகின்றன என்றும் சுட்டிக் காட்டப்பட்டது.
அத்துடன், இலங்கையில் இடம் பெற்றுள்ள தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டுள்ள ISIS இயக்கத்தின் முக்கியஸ்தரான ஸஹ்ரான் ஹாஷிம் என்பவர் பற்றி முற்கூட்டியே சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ) மூலம் பாதுகாப்பு பிரிவினருக்கு எச்சரிக்கை தகவல் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியதுடன், தவ்ஹீத் அமைப்புகளே இலங்கையில் அதிகமான அளவு சமுதாயப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன என்றும் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டது.
ஸஹ்ரான் ஹாஷிம் என்பவனுக்கும் தவ்ஹீத் அமைப்புகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்பதுடன், எந்தவொரு இஸ்லாமிய அமைப்புக்கும் ஸஹ்ரான் ஹாஷிம் என்பவருடன் தொடர்புகள் இல்லையென்பது எடுத்துக் கூறப்பட்டது.
பயங்கரவாதத்திற்கு எதிராகவும், ஸஹ்ரான் ஹாஷிம் மற்றும் ISIS இயக்கத்திற்கு எதிராகவும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ) மற்றும் SLTJ, ACTJ, UTJ போன்ற உள்ளுர் அமைப்புகளும் கடும் எதிர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதினால், ISIS பயங்கரவாதிகள் குறித்த அமைப்புகளையும் இலக்கு வைக்கக் கூடும் என்கிற காரணத்தினால் அனைத்து தவ்ஹீத் அமைப்புகள் மற்றும் பள்ளிவாயல்கள், மத்ரஸாக்கள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கும் எதிர்வரும் சில நாட்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டது.
ஊடகப் பிரிவு,
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ