சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்கள் பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்டன

புறக்கோட்டை – ஐந்துலாம்பு சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்று பாதுகாப்பாக வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த மோட்டார் சைக்கிள் வெடிக்கச் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

எவ்வாறாயினும், மோட்டார் சைக்கிளில் எவ்வித வெடிபொருட்களும் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, வௌ்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றை ​சோதனையிடுவதற்காக பாதுகாப்பு தரப்பினர் வெடிப்புச் சம்பவமொன்றை நிகழ்த்தியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளின் இருக்கையை வெடிக்கச் செய்து பாதுகாப்புத் தரப்பினர் அதனை திறக்க முற்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

வீதியின் இருமருங்கிலும் வாகனங்களை நிறுத்திச் செல்வதாயின், தொலைபேசி இலக்கம் மற்றும் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களை வாகனத்தின் முற்பகுதியில் வைத்து செல்லுமாறு பொலிஸார் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளனர்.

வீதியோரங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள் தொடர்பில் பொதுமக்கள் வழங்கும் தகவல்களுக்கு அமைய, சோதனைகள் முன்னெடுக்கப்படும் எனவும், இதனால் ஏற்படும் அசௌகரியத்தை தவிர்த்துக் கொள்வதற்கு அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் பொலிஸார் வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.