இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் அநாகரீகமானதும், மனித குலத்திற்கு எதிரானதுமாகும்

கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதலினால் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டும் காயப்பட்டும் உள்ளனர். இத்தகைய கொடுரமான தாக்குதலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினராகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ் மாவட்ட வாலிபர் முன்னணித் தலைவர் க.பிருந்தாபன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பாக வெளியிட்ட அனுதாப மற்றும் கண்டன அறிக்கையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இத்தகைய அநாகரிகமான மனித குலத்திற்கு எதிரான செயற்பாட்டை யாராக இருந்தாலும் நிறுத்திக் கொள்ள வேண்டும். இன மத பேதமின்றி நாம் எல்லோரும் ஒன்றுபட்டு எதிர்காலத்தில் இப்படியான துன்பியல் நிகழ்வு நடக்காமல் இருப்பதற்கு செயற்படவேண்டும்.

இந்த கொடூரத் தாக்கதலில் கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதோடு அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைவதற்காகவும், படுகாயமடைந்தவர்கள் குணமடைவதற்காகவும் சமயப் பிரார்த்தனை ஒன்றினை நிகழ்த்துவதற்கு வாலிபர் முன்னணியினராகிய நாம் தீர்மானித்துள்ளோம்.

இப் பிரார்தனையானது 2019.04.26ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தந்தை செல்வா சதுக்கத்தில் நடைபெற உள்ளது இவ் நிகழ்வுக்கு அனைவரும் கலந்து அஞ்சலியிலும், பிரார்த்;தனையிலும் ஈடுபடுமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.