மட்டக்களப்பு அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபையின் கண்டன அறிக்கை

2019.04.21ம் திகதி அன்று குறிப்பாக கிறிஸ்தவர்களின் உயிர்தெழல் நாளில் ஆலயங்களிலும் மற்றும் பொதுமக்கள கூடும் இடங்களிலும் திட்டமிட்டு நடாத்தப்பட்ட வெடி குண்டுதாக்குதலை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம் என மட்டக்களப்பு அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபை சமயங்களின் சுதந்திரம் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைக்கான பணி அமையம் தமது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது

இத்தாக்குதலினால் உறவுகளை இழந்துள்ள அனைத்து உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்n காள்வதுடன், மறுமைக்குள் சென்ற உறவுகளின் நிலை வாழ்வுக்காக பிரார்த்திக்கின்றோம்.

இத்தாக்குதல்களானது 290 இற்கும் மேற்பட்ட உயிர்களை பலி எடுத்துள்ளது. பலபெறுமதி வாய்ந்த சொத்தக்களை அழித்துள்ளது. ஆனாலும், இன, மத சமூகங்களுக்கிடையிலே உறவுகளில் பாதிப்பையும் பயத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இத்தாக்குதலை எந்தவொரு சமயத்தின் அடிப்படையிலும் நியாயப்படுத்தவோ அல்லது ஏற்றுக் கொள்ளவோ முடியாது. ஆகவே இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராயினும் தமது தவறுகளை உணர்ந்து கொள்வதுடன் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கை வாழ் அனைத்து மக்களிடமும் பணிவுடன் கேட்டுக் கொள்வது என்னவென்றால், இன, மத, மொழி, சாதி மற்றும் எந்தவொரு வேறுபாட்டின் அடிப்படையிலும் வன்முறையில் ஈடுபடவோ, வன்முறையை தூண்டவோ மற்றும் வன்முறையை ஆதரிக்கவோ வேண்டாம் என கேட்டுக் கொள்வதுடன், வன்முறையை ஏற்படுத்தும் கருத்தியல்கள், பேச்சுக்கள், காட்சிகள் என்பவற்றை சமூக வலைத்தளங்களில் பகிர்வதையோ, ஆதரிப்பதையோ தவிர்த்துக் கொள்ளுங்கள்.

கிறிஸ்தவ சகோதரசகோதரிகளிடம் பணிவுடன் கேட்டுக் கொள்வது என்னவென்றால் கிறிஸ்தவராகிய நாம் இத்துயரமான சூழ்நிலைகளிலும் கடவுளின் அன்பையும் மன்னிப்பையும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தும் பொறுப்புடையவர்கள். மேலும் நாம் வாழும் சூழமைவில் கடவுளின் சமாதானத்தை நிலை நிறுத்த இயேசு கிறிஸ்துவினால் வலுப்பெற்றிருக்கின்றோம் ஆகவே எமது கிறிஸ்தவ சாட்சிய வாழ்வை பாதுகாத்து சமாதானத்திற்காகவும் ஒப்புரவிற்காகவும் உழைக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்ந்தும் ஆண்டவருடைய வாக்கின் படி “ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” எனும் எமது பொறுப்பை உணர்ந்து இலங்கையில் இயேசுவின் நற்சீடர்களாக வாழ்வோமாக என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.