உண்மையை ஏற்றுக்கொண்ட பிரதமர் : சர்வதேச உதவியைக் கோருகின்றோம்.

இவ்வாறான மோசமான  தொடர்குண்டு தாக்குதல் சம்பவம் இடம்பெறும் அச்சுறுத்தல் ஏற்கனவே விடுக்கப்பட்ட போதும் அதுகுறித்து பாதுகாப்பு தரப்பு கவனம் செலுத்தாதும் , எமக்கு அறியப்படுத்ததும் பாரதூரமான பிரச்சினையாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 

இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் சர்வதேச சக்திகள் உள்ளனவா என்பதை கண்டறிய சர்வதேச பொலிஸ் உதவியை கோருகின்றோம், எமது புலனாய்வு துறையும் இதுகுறித்து ஆராய்ந்து வருகின்றது என்றவும் குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று இரவு விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தி இந்தக் கருத்துக்களை முன்வைத்தார். இதில் அவர் கூறியதானது,

இன்று இடம்பெற்ற இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவானது மிகவும் வேதனைக்குரியதும் துரதிஷ்டவசமான சம்பவமாகும்.

இந்த மோசமான சம்பவத்தை ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது. இந்த விடயம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன். அதற்கமைய  அவசர பாதுகாப்பு சபையை கூட்டி அடுத்தகட்டமாக துரிதமாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை நாம் ஆராய்ந்தோம்.

அதேபோல் இன்று காலையும் அதேபோல்  மீண்டும் இரவும்  அமைச்சர்களுடன் கலந்துரையாடி அரசாங்கமாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஆராய்ந்தோம். அதேபோல் சபாநாயகருடன் பேச்சுவார்த்தை நடத்தி  நாளை மறுதினம் (நாளை )பாராளுமன்றத்தை கூட்டவும், சுகாதார அமைச்சருடன் பேச்சுவாரத்தை நடத்தி பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் உள்ள பொதுமக்களுக்கான சகல மருத்துவ வசதிகளை முன்னெடுக்கவும், கல்வியமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்கள் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை விடவும் ஏற்பாடுகள் செய்துள்ளோம். அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் தேசிய கூட்டமைபின் தலைவர் சம்பந்தன், மற்றும் சுமந்திரன் ஆகியோருடன் பேசி நிலைமைகளை கையாளும் வழிமுறை குறித்து பேசினேன். பாதுகாப்பு தரப்பை தொடர்புகொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் ஆராய்ந்துள்ளோம்.

இன்று குண்டு வெடிப்புக்குள்ளான கொச்சிக்கடை அந்தோனியார் ஆலையம் மற்றும் கட்டான தேவாலயம் இரண்டையும் நேரில் சென்று பாரிவையிட்டேன். இதன்போது குண்டுத்தாக்குதலில் பலியாக பொதுமக்களின் குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்கவும், சேதமடைந்த ஆலயங்களை மீளவும் புனரமைக்கவும் சகல நடவடிக்கையும் எடுக்கப்படும். அதற்கான சகல ஆலோசனைகளையும் வழங்கியுள்ளேன். இந்து குறித்து கருதினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகையுடனும் பேசினோம். அதேபோல் மாநாகைய தேரர்களை தொடர்புகொண்டு நாட்டின் அமைதியை நிலைநாட்டும் நகர்வுகள் குறித்தும் ஆராய்ந்தோம். அவர்கள் இந்த சம்பவம் குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டனர்.

அதுமட்டும் அல்லாது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன்  தொடர்புகொண்டு இந்த சம்பவம் குறித்து பேசினேன். பயங்கரவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளை தாம் எந்த நேரத்திலும் முன்னெடுக்க இலங்கையும் இணைந்து செயற்படுவதாக அவர் வாக்குறுதிகொடுத்தார். அதேபோல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவர்களின் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர். நேபாள பிரதமரையும், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரும் தமது கவலையை தெரிவித்தனர். அவர்களது ஒத்துளைப்புகளையும் முழுமையாக வழங்குவதாக தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவத்துடன் சர்வதேச சதித்திட்டம் உள்ளனவா என்பது குறித்து ஆராய சர்வதேச  பொலிஸ் உதவி எமக்கு அவசியம். இது குறித்தும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். எமது புலனாய்வு பிரிவும் இதுகுறித்து ஆராய்ந்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர். அமைச்சர்களுடன் இது குறித்தும் பேசினேன். இந்த தாக்குதலில் 200 க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். நானூறுக்கும் அதிகமான பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோல் இதில் பாரதூரமான விடயம் என்னவென்றால் இந்த தாக்குதல் குறித்து தகவல் முதலில் தெரிவிக்கப்பட்டும் அது குறித்து கவனம் செலுத்தாமையேயாகும். இதுகுறித்து உரிய காரணிகளை ஆராயவேண்டியுள்ளது. எனக்கும் அமைச்சரவைக்கும் இந்த காரணிகளை தெரியப்படுத்தாதது ஒரு காரணியாக அமைந்துள்ளது. ஆனால் இவற்றை தாண்டி முதலில் நாட்டினை பலவீனப்படுத்தாது உறுதியான நாட்டினை கொண்டுசெல்ல வேண்டும். பாதுகாப்பு தரப்புக்கு தகவல் கிடைத்தும் அதனை சரியாக கையாள்ளது பாரிய பிரச்சினையாகும்.  இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக எட்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்து எந்த கருணையும் காட்டப்பட மாட்டாது. இதனுடன் தோற்புபட்ட பயங்கரவாத சட்டத்தின் கீழ் இவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.

மேலும் மூன்று பொலிஸ் அதிகாரிகள் உயிர் நீத்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்த்த அனுதாபங்களை தெரிவிக்கின்றேன். அதுமட்டும் அல்ல, இந்த சம்பவங்களை அடுத்து இனவாதம், மதவாதம் காக்கப்படுமாயின் அது மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளிலேயே வந்து முடிவடையும். ஆகவே இலங்கை மக்கள் அனைவரும் அமைதியாக செயற்பட வேண்டும். இந்த நாட்டினை பலவீனப்படுத்தும் ரீதியில் பயங்கரவாதத்தை பரப்ப எவரேனும் குழுக்கள் முயற்சி செய்தால் தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்புடன் அவர்களை அழிப்போம்,   அதேபோல் இந்த சவாலை வெற்றிகொள்ள சகல மக்களையும் ஒன்றிணைய வேண்டிக்கொன்கிறேன்.