நிலாவைப் பார்க்க வைத்த மின் துண்டிப்பு

  • படுவான் பாலகன் –

குப்பி லாம்பில் குடிசைவீட்டில் வாழ்ந்த போதிருந்த சுகம்,தற்போதைய மின்சார வெளிச்சத்திலும், மாளிகை வீட்டிலும் இல்லை’ என தங்கம்மாவும்,தெய்வானையும் பேசிக்கொண்டனர்.

சில நாட்களாக மின்சாரத் துண்டிப்பு அமல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், வீட்டு வாசலின் முற்றத்தில் அமர்ந்துகொண்டு பேசுகையிலேயே இதனை அவர்கள் குறிப்பிட்டனர்.

‘முன்னர் எல்லாம் நமது பகுதிகளில் குடிசை வீடுகள்தான் இருந்தன. அதற்குள் மின்விசிறி இருக்கவில்லை,மின்சாரமும் இருக்கவில்லை. ஆனால் குளிர்ச்சியும்,அமைதியான சூழலும்,இதமான நித்திரையையும் குடிசை வீடுகள் கொடுத்தன. குப்பி விளக்கே குடிசையை ஒளிர வைத்தது. எவ்வளவுதான் மின்விசிறியை பூட்டினாலும்,இயற்கையாக வருகின்ற காற்றுக்கு ஈடுஇணையாக ஒன்றுமே இருந்துவிடமுடியாது’ எனக்கூறிய தங்கம்மா,தொடர்ந்தும் தன்மனதில் கிடந்ததை கொட்டுவதற்கு ஆரம்பித்தாள்.

‘நான் வாழ்ந்த காலம் ஒரு பொற்காலம் என்றே சொல்லுவேன் ஏனெனில் நான் பேசி மகிழ்ந்த தருணங்கள் மனிதர்களிடையே. இதனால் என் உள்ளத்தில் இருந்த சுமைகள் குறைந்தன. நான் வாய்விட்டு சிரித்த தருணம் நான் ஆரோக்கியமானவள் என்பதனை உணர்ந்தேன். இப்போதெல்லாம் மனிதர்களிடம் மனிதர்கள் முகம்கொடுத்து பேசுவதில்லை. தொல்லைபேசியோ அல்லது தொல்லைக்காட்சியுடனேயே பலரும் பேசுகின்றனர். இதனால் ஒருபக்கப் பேச்சுமட்டும்தான் இருக்கின்றதே தவிர, தமது பேச்சுக்கு ஆதரவும் இல்லை. இதனால்தான் பலர், இன்று மனநோயாளிகளாக உள்ளனர். வீட்டிலே உணவு உண்பதாகவிருந்தாலும் ஒருமித்தே உண்டனர். இதன்போது உறவுகள் பலமடைந்தன. இன்று ஒருவருக்கு ஒருநேரத்தில் உணவு இதனால் உறவுகள் விரிவடைந்திருக்கின்றன. இதுபற்றி பேச ஆரம்பித்தால் பேசிக்கொண்டே போகலாம்’ எனக்கூறிய தங்கம்மா,மின்சாரம் துண்டிக்க ஆரம்பித்ததினால்தான் நட்சத்திரங்களையும்,நிலாவையும் பலர் பார்க்கின்ற சூழல் ஏற்பட்டிருக்கின்றது என தனது ஆதங்கத்தினை போட்டுடைத்தாள்.

நான் எனது பிள்ளைகளை வளர்த்தபோது, பிள்ளைக்கு நிலாவைக்காட்டித்தான் உணவைத் உண்ணவைத்தேன். அப்போ அழகான வெளிச்சமும்,தூரத்துப்பார்வையும் என்பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருந்தமையை உணர்ந்தேன். இன்றெல்லாம் மின்குமிழை காட்டி,தொல்லைபேசியை கையில் கொடுத்து உணவு கொடுக்கின்றனர். இதனால் பிள்ளையின் பார்வைத்திறனும் குறைந்துவிடுகின்றது. குறுகிய இலக்குக்குள்ளே அகப்பட்டுவிடுகிறார்கள். வானத்தினைப் பார்த்து,முன்நிலவா, பின்நிலவா என அறிந்து அதற்கேற்றால் போல் வாசலில் அமர்ந்து உறங்கி, கதைபேசிய காலமெல்லாம் எங்கேயோ போய்விட்டது. சின்னஞ்சிறுவர்களின் இரவுநேர நிலாவெளிச்சத்திலான விளையாட்டுக்களும் மறைந்துவிட்டன. பக்கத்தில் இருக்க வைத்து பாட்டி சொல்லித்தந்த இராமாயணக்கதைகளும்,மகாபாரதக்கதைகளும் இன்றும் என் ஞாபகத்தில் உள்ளன. ஆனால் இன்றைய பிள்ளைகளுக்கு அக்கதைகள் தெரியுமா? என்பதும் சந்தேகமே. கதை இப்படித்தான் இருக்கும் என்பதை இப்போது,புத்தகத்தில் படிக்கின்றனர். அப்போது கதையைக்கூறி இதுதான் கதையென என்பாட்டி எனக்குகூறிவிட்டாள். இரவில் தூங்கும்போது பாட்டி சொன்ன கதைகளும்,வீட்டிலே பேசிமகிழ்ந்த தருணங்களும் நல்லதொரு நித்திரையையும் கொடுத்துவிட்டன. இப்போதெல்லாம் மின்விசிறியின் சத்தம் நித்திரையை குறைத்துவிட்டது.

மின்சாரம் இல்லாவிட்டால் மனிதர்களே இயங்கமாட்டார்கள் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கின்ற இக்காலகட்டத்தில் அடிக்கடி மின்துண்டிப்பு இடம்பெறுகின்றது. இதனால் பல வேலைகளைச் செய்யமுடியாத நிலையேற்பட்டிருக்கின்றது என பேசிக்கொண்டாலும்,ஒருபுறம் பலரை வீட்டின் முன்புறம் வாசலில் அமர்ந்திருந்து வானத்தினைப் பார்க்கும்  நிலைமையினை உருவாக்கியிருக்கின்றமையினை எண்ணி சந்தோஷப்படவும் முடியும். நச்சத்திரங்களை எண்ணி,அவற்றினை பிடிப்பதற்கு நினைத்த காலங்களும் உண்டு. இப்போது நட்சத்திரத்தை, நிலாவை புத்தகத்தில்தான் பார்க்கவேண்டிய நிலையும் உருவாகியுள்ளமை கவலையானதே.

நிலாவெளிச்சத்தில் உணவு உண்டு, கதைபேசி,அமைதியான, விருப்புடனான நித்திரை சென்ற காலங்களை மீட்டிப்பார்க்க வைத்த மின்சாரதுண்டிப்புக்கு நன்றி கூறிய தங்கம்மா, வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்து நிலாவைப்பார்த்து பிள்ளைகளுக்கு கதைசொல்லி மகிழும் தருணங்களை ஏற்படுத்தும் போது, சிறுவர்களிடத்தில் நற்சிந்தனைகளை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை வெளியிட்டவளாக நேரமும் இரவு 10 இனை கடந்துசெல்ல இருவரும் வீட்டினைநோக்கி சென்றனர்.