பாதிக்கப்பட்ட பட்டதாரிகளை மீண்டும்மிதிக்கும் கிழக்கு மாகாண சபை – பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் தெரிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடத்தினை நிரப்புவதற்காக, பட்டதாரி பயிலுனர்கள், ஆசிரியர் உதவியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபடுத்துவதற்காக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இவ்விண்ணப்பத்தின் மூலமாக பட்டதாரிகள் மற்றும் கல்விப்பொதுத்தராதர உயர்தரத்தில் கற்றவர்களுக்கு வாய்ப்பேட்டிருக்கின்றமை வரவேற்தக்கதாக இருந்தாலும், கடந்த காலத்தில் ஆசிரியர் நியமனத்திற்காக விண்ணப்பித்து பரீட்சையில் சித்தியடைந்த தமக்கு இதுவரை நியமனம் வழங்கப்படாது புறக்கணிப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் நிலவிய வெற்றிடங்களுக்கு அமைய மாவட்ட அடிப்படையில் பட்டதாரிகள், ஆசிரியர்சேவை வகுப்பு 3ஐ(அ)ல் இணைக்கப்பட்டனர். இப்பரீட்சையில் சித்தியடைந்து நியமனம் பெறுவதற்கு தகுபெற்ற நிலையில் பல பட்டதாரிகள் இருந்தபோதிலும், குறிப்பிட்டளவிலானவர்களுக்கே நியமனங்கள் வழங்கப்பட்டன. அவ்வாறு சித்தியடைந்த ஏனைய பட்டதாரிகளுக்கு மாகாணத்தில் ஏற்படுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்கேற்ப நியமனங்கள் வழங்குவதாகவும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுனர் குறிப்பிட்டிருந்தார். அதேநேரம் அக்காலப்பகுதியில், பரீட்சையில் சித்தியடையாத பட்டதாரிகள் பலருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. இதன்மூலம் சித்தியடைந்த பட்டதாரிகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தனர். தொடர்ச்சியாகவும் தங்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தியிருந்தனர். ஆனாலும் இதுவரை பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகளுக்கு கிழக்குமாகாணசபை நியமனங்களை வழங்காத நிலையில், தற்போது ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் நேர்முகத்தேர்வினை நடாத்தி பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளவுள்ளதாக குறிப்பிடுகின்றமை கவலையளிக்கின்றதாக பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கூறுகின்றனர்.

கடந்த காலங்களில் விண்ணப்பம் கோரப்பட்ட வரலாறு, குடியியல், நாடகமும் அரங்கியலும், தமிழ், எனப்பல பாடங்களுக்கும் மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அப்பாடங்களுக்காக பரீட்சையிலே சித்தியடைந்தவர்கள் இருக்கின்ற போது, மீண்டும் நேர்முகத்தேர்வு நடாத்தி நியமிப்பதானது, தம்மை மீண்டும் மீண்டும் அவமதிக்கும் செயலாகவே கருதுவதாக பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கூறிநிற்கின்றனர். அதேவேளை ஆரம்பக்கல்வி போன்ற பாடங்களுக்கு தமிழ்மொழியில் கடந்த காலங்களில் விண்ணப்பம் கோரப்படாத நிலையில் தற்போது கோரப்படுகின்றது. அதேபோன்று பல பாடங்களுக்கு இம்முறை விண்ணப்பம் கோரப்படுகின்றமை வரவேற்கத்தக்கது. எனவே கடந்த காலங்களில் பரீட்சையில் சித்தியடைந்து இன்றும் ஏமாற்றமடைந்த நிலையில் இருக்கின்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனத்தினை வழங்க உடன்நடவடிக்கை எடுக்கவேண்டுமென பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கோரிக்கை விடுத்து நிற்பதுடன், மாவட்ட ரீதியாக உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அம்மாவட்டத்தில் உள்ள பட்டதாரிகளை பயிலுனர்களாக இணைத்துக்கொள்வதோடு, அவ்வாறு பட்டதாரிகள் மாவட்டத்தில் இல்லாத சந்தர்ப்பத்தில், அப்பிரதேசங்களில் உள்ள உயர்தர மாணவர்கள் ஆசிரிய உதவியாளர்களாக இணைப்பதற்கான நடவடிக்கையை தற்போதைய கிழக்கு மாகாணசபையின் ஆளுனர் எடுக்கவேண்டும். இதன்மூலமாக பட்டதாரிகளின் வேலையில்லாப்பிரச்சினையை தீர்க்க முடிவதுடன், தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு உளநெருக்கடிக்கும் உள்ளக்காப்பட்டு, கற்கவே வேண்டாம் என மற்றவருக்கு அறிவுரை சொல்லுமளவிற்கு மனநிலையை கொண்டிருக்கின்ற, வேலையில்லாப்பிரச்சினையின் காரணமாக தமது வயதும் கடந்து, அரசதொழிலே பெற்றுக்கொள்ளமுடியாத துர்ப்பாக்கிய நிலையையும் அடைந்துகொள்ளுகின்ற தறுவாயில் நிற்கின்ற பட்டதாரிகளுக்கு உரிய தீர்வினை வழங்ககூடிய வகையில் விண்ணப்பத்தினை மாற்றியமைக்க வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கூறிநிற்கின்றனர்.