நாளாந்தம் சில மணித்தியாலங்களுக்கு மின்சாரத் தடை

நாளாந்தம் காலை மற்றும் மாலை வேளைகளில் சில மணித்தியாலங்களுக்கு மின்சாரத் தடையை அமுல்படுத்தவுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரையான 3 மணித்தியாலங்களும் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை அல்லது 7.30 மணி முதல் 8.30 மணி வரையும் மின்சாரம் தடைப்படவுள்ளதாக சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நிலவும் அதிக வெப்பத்துடனான வானிலையால் அதிகரித்த மின்சார தேவையை பூர்த்திசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுளளதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.

நிலவும் வரட்சியுனான வானிலையால், நாளாந்தம் பகல் வேளையில் 2,350 மெகாவோட் மின்சாரத்திற்கான கேள்வி காணப்படுகின்ற போதிலும் 1,950 மெகாவோட் மின்சாரத்தையே விநியோகிக்க முடிவதாகவும் இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், நாளாந்தம் இரவு வேளைகளில், 2,600 மெகாவோட்டிற்கும் அதிகமாக மின்சாரம் தேவைப்படுகின்ற போதிலும் 2,300 மெகாவோட்டை மாத்திரமே நாளாந்தம் விநியோகிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கடந்த வருட இறுதிப்பகுதியில் மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சை தௌிவுபடுத்திய போதிலும், அதற்கான உரிய பதில் வழங்கப்படாத நிலையில், இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.