குடிநீரை பணம் கொடுத்து வாங்குவேன் என கனவிலும் நினைக்கவில்லை!

– படுவான் பாலகன் –
சுவாகாற்றையும் பணம் கொடுத்து வாங்கும் காலம் விரைவில்?
பணம் கொடுத்து குடிநீரை வாங்குவேன் என கனவிலும் கூட நான் நினைத்திருக்கவில்லை. ஆனாலும் பணம்கொடுத்து வாங்கும் நிலையை அடைந்திருக்கின்றேன் என்கிறார் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள மகிழடித்தீவு கிராமத்தில் வசியும் வே.வல்லிபுரம்.
தமிழரின் பாரம்பரிய கலைகளான கூத்து, கரகம் போன்றவற்றினை வளர்த்தமையில் பெரும்பங்கு இவருக்குண்டு. இதனால் பிரதேசத்தில் இருவருக்கு தனிஇடமும் உண்டு. அண்மையில்தான் 80வயதினை நிறைவுசெய்திருந்த இவர், இன்றும் கம்பீரமான தோற்றத்துடன், இவ்வருடமும் கூத்து ஒன்றினை பழக்க வேண்டும் என்பதில் ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றார். கூத்துக்கலையில் கூத்தராக, மத்தள, கொப்பி ஆசிரியராக திகழும் இவர், கரகத்தினையும் பழக்கி அவற்றினையும் அரங்கேற்றிய பெருமையும் இவருக்குண்டு. கலைகளின் ஊடாக தம்மை வெளிக்காட்டி பல்வேறு கௌரவங்களையும், பாராட்டுக்களையும் பெற்ற இவர், கடந்த கால அனுபவங்களையும் தற்போதைய அனுபவங்களையும், கொக்கட்டிச்சோலை பிரதேச கலாசார மண்டபத்தில் வைத்து பரிமாறிக்கொண்டார்.
80வருடங்களை கடந்திருக்கின்ற தனது காலப்பகுதியில், பெரியளவிலான அனர்த்தங்களை எதிர்கொண்டதாகவும் கூறுகின்றார். வெள்ளம், சூறாவளி, வரட்சி, சுனாமி போன்றவை குறிப்பிட்ட நாட்களில் மாத்திரம் இடம்பெற்ற போதிலும் இதனால் பாரிய அழிவுகளையும் சந்திக்க நேரிட்டதாகவும் கூறுகின்றார். இவ்வாறான அனர்த்தங்களில் இருந்து மாறாபட்டதாகவிருந்த யுத்தத்தினை பல வருடங்கள் எதிர்கொள்ள நேரிட்டதாக (குறிப்பாக வாழ்நாளில் அரைப்பங்குக்கு மேலான பகுதியை) குறிப்பிடுவதுடன், இதனால்பட்ட துன்பங்களை இலகுவில் கொட்டி தீர்த்துவிடமுடியாதெனவும் தெரிவித்தார். இச்சம்பங்கள் பல நமது சமுகத்திற்கு தெரிந்தமையே, என்பதினாலும், இதுபற்றி பெரியளவாக பேசிக்கொள்ளாமல்,  தாம் கனவிலையேனும் நினைத்துப்பார்த்திராத குடிநீர் பிரச்சினை தொடர்பிலே இவர் அதிகம் பேசத்தொடங்கினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரை, இயற்கை அன்னை கொடுத்த வளங்கள் நிரம்பவே இருக்கின்றன. இதனால் குறைவில்லாதவகையில் அனுபவிக்ககூடிய நிலை காணப்பட்டது. பெரிதாக செலவு செய்யவேண்டிய தேவையும் இருக்கவில்லை. குடிநீரைப் பொறுத்தவரை வருடத்தில் வரட்சி நிலவுகின்ற யூலை மாதம் தொடக்கம் செப்டெம்பர் மாதம் வரை நீர்மட்டம் குறைவடைந்து செல்லும் இதனால் குடிநீரைப்பெற சிலதூரங்கள் செல்லவேண்டிய நிலை இருந்ததாக கூறும் இவர், ஏனைய காலங்களில் போகும் இடங்களில் எல்லாம் பூவலும், மடுவும், கொட்டுமாகவே இருந்தன. இதன்மூலம் குடிநீரைப்பெற்றுக்கொண்தாக கூறுகின்றார்.
பூவல் என்பது, 1அடி தொடக்கம் 2அடிக்குள் வெட்டப்பட்ட சிறிய மடுவை பூவல் என்றும், 2க்குமேல் 3அடி வரை வெட்டப்பட்ட குழியை மடுவென்றும், அதற்குமேல் வெட்டப்பட்டு கொட்டுப்பதிக்கப்பட்டதை கொட்டு, அல்லது கிணறு என்று அழைக்கும் வழக்கமும் இருந்தது. கொட்டு என்கின்ற போது, முதிரை, விளினை மரங்களை கொண்டு நடுவில் துளையிடப்பட்டதையே கொட்டு என்கின்றனர். இக்கொட்டுக்கள் நூற்றாண்டு கடந்தும் நிலைத்திருக்கும். கொட்டில் எடுக்கப்படும் நீர், மடு, பூவல் நீரைவிட தெளிவான நீராக காணப்படும். இவற்றில் இருந்துபெற்ற நீரையே அருந்தினோம். இதைவிடவும், வயல்கள், காடுகளுக்குள் சென்றால் தண்ணீர் உள்ள பகுதியில், குறிப்பாக ஆற்றின், குளங்களின், வாய்க்கால்களின் ஓரத்தில் சிறிய மடுவினை தோண்டி அந்நீரின் மேல்மட்ட நீரினை இறைத்துவிட்டு பின்னர் அந்நீரை குடித்துக்கொள்ளும் வழக்கமே எங்களிடம் காணப்பட்டன. இவ்வாறான செயற்பாடுகளை எனக்கு 60வயது வரை செய்தேன். ஆனால் எந்நோயும் எனக்கு ஏற்பட்டுவிடவில்லை. தற்போதைய சூழலில்தான், அக்கிணற்று நீரைக்குடிக்க வேண்டாம். போத்தல் நீரை அல்லது குழாய்மூலம் கிடைக்கின்ற சுத்திகரிப்பு நீரைத்தான் அருந்தவேண்டும் என்கின்ற வரையறைகளை இடுகின்றனர். அவ்வாறு இந்நீரை குடிக்காவிட்டால், வேறுநீரை குடித்தால் கிருமி எம்முடன் கலந்து பல நோய்களுக்கு ஆளாவோம் என பயமுறுத்துகின்றனர். ஆனால் முடங்கை வரை மடுதோண்டி குடித்து வாழ்ந்தவர்கள்தான் நாங்கள். இப்போ, எல்லாமே சங்கடமான உலகமாச்சு. மடுதோண்டி குடிநீரை குடித்தமையால், குடிநீரை பணம் கொடுத்து வாங்குவேன் என்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை. ஆனால் இன்று நிஜத்திலே அதை காணும் போது எதுவும் நடக்கலாம் என்ற அனுபவத்தைப் பெறுகின்றேன்.
இப்போதைய நீரில் பல கிருமிநாசினிகளும், கிருமிகளும் கலக்கின்றமை உண்மைதான். அப்போதெல்லாம் விவசாய செய்கைகளுக்கு செய்கையாக உற்பத்திசெயற்பட்ட மனிதர்களை கொல்லக்கூடிய கிருமிநாசினிகள் தெளிப்பதில்லை. எல்லாமே இயற்கையில் கிடைத்த கலவையாகவே இருந்தன. அவை மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. தப்போது, மனிதரை கொல்லும் கிருமிநாசினிகளை தெளிப்பதனால் குடிநீரும், கொலைநீராகவிட்டது. எதிர்காலத்தில், தங்கத்தைவிட அதிகவிலைகொடுத்து வாங்கவேண்டிய பொருளாக குடிநீர் மாற்றப்படுவதையும், குடிநீருக்கான போராட்டமாகவே இருக்ககூடிய நிலையையும் தவிர்க்க முடியாது.
குடிநீருக்காக போராட்டத்தினை தற்போதும் மக்கள் நடாத்த ஆரம்பித்திருக்கின்றமை போன்று, சுவாசிப்பதற்கான ஒட்சிசனையும் சிலிண்டரில் அடைத்து சுவாசிக்க வேண்டிய நிலையையும் எம்பின்னால் வரும் சந்ததிகள் அனுபவிக்ககூடும் என்று எனக்கு புலப்படுகின்றது. என்கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து கம்பீரமான சத்தத்துடன் எழுந்து நடந்தார் வல்லிபுரம்.