காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பு கிழக்கில் கர்த்தாலுக்கு அழைப்பு

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை சபையில் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் இக்காலப்பகுதியில் ஏதிர்வரும் 20ம் திகதி மார்ச் 2019 அன்று இலங்கை மனித உரிமை விடயம் தொடர்பாக ஆராயப்படவுள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கக்கூடாது எனகோரியும் சர்வதேசத்தின் நேரடித்தலையீட்டினைக்கோரியும் கவனயீர்ப்பு பேரணி ஒன்றிணை 19ம் திகதி மார்ச் மாதம் 2019 அன்று மட்டக்களப்பு கல்லடிப்பாலத்திலிருந்து காந்தி பூங்காவரை மேற்கொள்ளவுள்ளோம் என கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பு தெரிவிக்கிறது.

அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பிலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஏற்பாட்டாளர்களில் ஒருவரும் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான அமலராஜன் அமலநாயகி தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,

இலங்கையில் நடைபெற்ற யுத்தமானது முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் யுத்த காலத்திலும் பின்னரும் இடம்பெற்ற கைதுகள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், நில ஆக்கிரமிப்பு, அரசியல் கைதிகள் விவகாரம், ஊடகவியலாளர்கள் தாக்கப்படுதல், இனப்படுகொலைகள் போன்றவற்றிற்கு நீதி கிடைக்கவில்லை.

மாறாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நிகழ்ந்தவற்றை மறக்குமாறு கூறுவதுடன் கண்துடைப்பு ஆணைக்குழுக்களை நிறுவி சர்வதேசத்திடமிருந்து தப்பிபிழைக்கும் யுத்தியை மேற்கொள்வதுடன் நல்லிணக்கப்போர்வையில் சிங்கள பௌத்தமயமாக்கலை மேற்கொள்வதற்கு ஆதரவாக உள்ளார்.

இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் யுத்த குற்றம் தொடர்பாக படையினரை விசாரணை செய்வதற்கு அனுமதிக்க மாட்டேன் என்கின்றார். ஆயினும் காhணமல் போனோருக்கான அலுவலகத்தை  உருவாக்கி சர்வதேசத்தையும் பாதிக்கப்பட்ட மக்களையும் ஏமாற்றிவருகின்றார்.

இறுதி யுத்தத்தின் போது ஐக்கியநாடுகள் சபையின் செயற்பாடுகள் திருப்த்தியாக அமையவில்லை என அறிக்கைகள் தெரிவிக்கின்றன அதற்கான முழுப்பொறுப்பினையும் முன்னாள் ஐக்கியநாடுகள் சபை செயலாளர் பான்கீமூன் ஏற்றுக்கொண்டார்.

அதேவேளை சிங்கள பௌத்தவாத அரசினால் எமக்கான தீர்வினை நீதியினை வழங்கமுடியாது என்பதனை சாதாரண மக்களாகிய நாம் புரிந்து கொண்டுள்ளோம் ஆயினும் ஐக்கியநாடுகள் சபையும் சர்வதேச நாடுகளும் அதனை புரிந்து கொள்ளவில்லை அல்லது புரிந்து கொள்ளாதவை போல் செயற்படுகின்றன.

மகிந்த காலத்தில் மட்டுமல்ல இன்றும் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான பட்டியல் வெளியிடப்படவில்லை, மரணச்சான்றிதழ் பற்றியும் நஸ்ட ஈடுவழங்குவது பற்றியும் மட்டும் கூறுவதுடன் நிதி வழங்கல் தொடர்பாக மௌனம் சாதிக்கின்றனர்.

மேலும் குற்றவாளிகளுக்கு எதிராக நீதி வேண்டி குரல் கொடுப்பவர்கள் அரசாங்கத்தின் அல்லது பெரும்பான்மையினத்தின் எதிரிகளாக விளம்பரப்படுத்ப்படுகின்றனர்.

திட்டமிட்ட குடியேற்றங்கள், தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று சின்னங்கள் தொல்லியல் துறையால் ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்படுதல், ஊடகவியலாளர்கள் தாக்கப்படுதல் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் போன்றன இன்றும் தொடர்கின்றது. இவை இன அழிப்பு செயற்பாடுகள் என்றே ஐக்கியநாடுகள் சபையின் இனவழிப்பு தொடர்பான வரைவிலக்கணம் கூறுகின்றது.

இதன் விளைவுகள் மீண்டும் ஐக்கியநாடுகள் சபை சர்வதேசத்தின் முன் மீண்டும் தலைகுனிந்து நிற்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதுடன் ஐக்கியநாடுகள் சபையின் நடுநிலை தன்மை தொடர்பாக சந்தேகத்தினை ஏற்படுத்தும்.

அதே நேரம் பயங்கரவாத தடை சட்டத்திற்கு (PTA) மாற்றாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் (CTA) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்கள் பயங்கரவாத தடை சட்டத்தை விட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பயங்கரமானதாக உள்ளது. இச்சட்டமானது இனவழிப்பு செயற்பாடுகளையும் வன்கடத்தலையும் சட்டபூர்வமாகி அரச பயங்கரவாதத்திற்கு ஆதரவாக இருக்கும் என்பது சட்டவல்லுனர்களின் ஆணித்தரமான கருத்தாகும்.

சர்வதேச நாடுகளுக்கு நல்லிணக்க செயற்பாடுகளில் ஈடுபடுவதாக காட்டிக்கொள்ளும் அரசாங்கமானது வன்கடத்தலில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதுடன் இனவழிப்பு செயற்பாடுகளுக்கு துணைபோகின்றது. எனவே இதனை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப அங்கத்தவாகள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு பேரணியையும் கதவடைப்பு போராட்டத்தையும் மக்கள் ஆதரவுடன் முன்னெடுக்க உள்ளோம்.

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை சபையில் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் இக்காலப்பகுதியில் ஏதிர்வரும் 20ம் திகதி மார்ச் 2019 அன்று இலங்கை மனித உரிமை விடயம் தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கக்கூடாது எனகோரியும் சர்வதேசத்தின் நேரடித்தலையீட்டினைக்கோரியும் கவனயீர்ப்பு பேரணி ஒன்றிணை 19ம் திகதி மார்ச் மாதம் 2019 அன்று மட்டக்களப்பு கல்லடிப்பாலத்திலிருந்து காந்தி பூங்காவரை மேற்கொள்ளவுள்ளோம்.

இப்பேரணியில் பல்கலைக்கழக மாணவர்கள் (வந்தாரமூலை, தென் கிழக்கு, திருகோணமலை வளாகம்), விபுலானந்தா இசை நடனக்கல்லூரி, தொழில் நுட்ப கல்லூரி, பாடசாலை மாணவர்கள், தமிழாசிரியர் சங்கத்தினர், அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம், அரச மற்றும் தனியார் போக்குவரத்து சங்கங்கள், ஆட்டோ சங்கங்கள், ஊடக சங்கங்கள், சமய தலைவர்கள், இளைஞர் கழகங்கள், விளையாட்டு கழகங்கள், சகல கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் மகளீர் அல்லது மாதர் சங்கத்தினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பதுடன் வர்த்தக சங்கத்தினர் தமது கடைகளை மூடியும் அரச மற்றும் தனியார் போக்குவரத்து சங்கத்தினர் தமது போக்குவரத்து சேவைகளை நிறுத்தியுமுமு; பூரண கர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று தெரிவித்தார்கள்.

இவ் ஊடக சந்திப்பில் இப் போராட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தின் ஏற்பாட்டாளர்களான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அமலராஜன் அமலநாயகி,
அம்பாறை மாவட்ட இணைப்பாளர் தம்பிராசா செலவராணி, திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் செல்வராஜா சரோஜாதேவி ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும் வெளியிட்டனர்.