மட்டக்களப்பு மாவட்டத்தில் 2018ல் 7771.63 மில்லியன் நிதியில் 9457 அபிவிருத்தித் திட்டங்கள்

2018ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 7771.63 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 11 செயற்திட்டங்களின் கீழ் 9457 அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, 6528 திட்டங்கள் 4609.19 மில்லியன் செலவில் நிறைவு பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மா.உதயகுமார் தெரிவித்தார்.

திங்கட்கிழமை(25) மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் 2019ஆம் ஆண்டுக்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வரவேற்புரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டுக்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.சிறிநேசன், இராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, அலிசாகிர் மௌலானா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

மாவட்ட செயலகத்தினால் 2165.13 மில்லியன் செலவில் 4631 திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இணை அமைச்சுக்களின் 2173.70 மில்லியன் நிதியில் 3170 அபிவிருத்தித்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. விசேட திட்டங்களின் கீழ் 1034.08 மில்லியன் நிதியில் 43 அபிவிருத்தித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண சபையின் 911.81 மில்லியன் ரூபாவில் 448 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதே போன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் மாவட்ட அபிவிருத்திக்கான திட்டத்தின் ஊடாக 580 திட்டங்களுக்காக 436.99 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்திய வீட்டுத்திட்டத்தன் 2ம் கட்டம் மற்றுமு; 3 ம் கட்டங்களில் 401 வீடுகள் 220.55 மில்லியன் நிதியில் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் 184 திட்டங்களுக்காக 829.59 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டள்ளது.

இந்தத் திட்டங்களை உரிய காலத்தில் நிறைவுறுத்தி பொது மக்களுக்கு உதவிய இணைத்தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய மாகாண அரச உத்தியோகத்தர்கள், சர்வதேச, உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 2019ஆம் ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், மாவட்டத்திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதேச செயலாளர்கள், பிரதி, உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், திணைக்களத்தலைவர்கள், அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.