அமைச்சர் மனோகணேசனுக்கு எழுதிய பகிரங்க மடலுக்கு அமைச்சரின் பதில்

காணாமல் போனோர் அலுவலகம் என்ற இந்த நிறுவனம் என் அமைச்சின் கீழ் இருந்தாலும், இந்த நிறுவனம் நேரடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்டுப்பாட்டின் கீழேயே உள்ளது.

இந்த நிறுவன சட்டம் பாராளுமன்றத்தில் ஆக்கம் பெற்ற போதே, சட்ட மூலத்தை சமர்பித்த அமைச்சர் மங்கள சமரவீர ஜனாதிபதிக்கு முழு அதிகாரம் வழங்கப்படும் விதத்திலேயே சட்டமூலத்தை சமர்பித்தார். அப்படி இல்லாவிட்டால் சட்ட மூலத்திற்கு ஆதரவு தர முடியாது என ஸ்ரீலசுக நிபந்தனை விதித்து இருந்தது.

காணாமல் போனோர் அலுவலகத்தை எப்பாடு பட்டாவது உருவாக்கி விட வேண்டும் என்பதால் நாம் அதற்கு இணங்கினோம்.

மேலும் இந்த நிறுவனம் இந்த வருடம் ஜனவரி மாதம், அதாவது கடந்த மாத புதிய அமைச்சரவை மாற்றத்தின் போதே எனது அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.

கடந்த வருடம் நடுப்பகுதியில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போதும், இந்த நிறுவனத்தை எனது அமைச்சின் கீழ் கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டு இருந்தது. அதை அறிந்த நான் அதை ஏற்க மறுத்து விட்டேன். இந்த வருடம் எனக்கு அறிவிக்காமலேயே இதை எனது அமைச்சின் கீழ் கொண்டு வந்து விட்டார்கள்.

இன்றைய ஜனாபதி-பிரதமர் முரண்பாட்டு அரசியல் சூழல் காரணமாக இது பற்றி விரிவாக அரசுக்குள் கலந்துரையாட முடியாமல் உள்ளது.

செயலமர்வில் காட்டப்பட்டதாக நீங்கள் சொன்ன காணொளி பற்றி எனக்கு இதுவரை தெரியாது. தெரியப்படுத்தியமைக்கு நன்றி. இது பற்றி நான் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்.

அமைச்சர்

Mano Ganesan