காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகளின கண்ணீருக்கு முடிவு என்ன என்ற வாசகத்துடன் வலிந்து காணப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்பு போராட்டமொன்றினை திங்கட்கிழமை (04) முன்னெடுத்துள்ளனர்.

நாடு 71வது சுதந்திர தினத்தினை கொண்டாடிக்கொண்டிருக்கின்ற இந்நாளினை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கறுப்பு தினமாக பிரகடணப்படுத்தி கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 40வது கூட்ட தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாரம் கொடுகாமல் சர்வதேசம் நேரடியாக தலையீடு செய்து எமது பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும்.

மன்னாரிலே மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டும் அவற்றை மூடி மறைப்பதற்கான வேலைகள் நடைபெறுகின்றன இது தொடர்பான விரிவான விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும்.

நெடுங்காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டவேண்டும் தமிழர் தாயகத்தில் பாதுகாப்புத் தரப்பினால் முகாம் அமைகப்பட்டு ஊயர்பாதுகாப்பு வலயங்கள் என பிரகடணப்படுத்தப்பட்டுள்ள எமது உறவுகளின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அரசு வெளியிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வடக்கு கிழக்கு வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கிழக்கு மண்ணிலிருந்து உறவுகளை தொலைத்த தாய், தந்தை, சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் பங்கேற்றனர்.

கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் ஒன்றுகூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வாயினை கறுப்பு துணியால் கட்டி தமத கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தி  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐநாவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் காணாமல் போனோர்க்கான அலுவலகத்தை நிராகரிக்கின்றோம், இலங்கை அரசே எமது அன்புக்குரியவர்கள் எங்கே?, ஐநாவே பதில் கூறு, புதைத்தது யார்? புதைக்கப்பட்டது யார்? சோந்த மண்ணில் புதைகுழியா எந்த மண்ணில் நாம் வாழ்வது, உறவுகளை மீட்டெடுப்போம் உண்மைக்காய் குரல்கொடுப்போம். சுதந்திரம் இல்லை வாழ்வில் தந்திரவாதிகள் இருக்கும்வரை எம் வலிகள் ஆறாது, நிலம் தருவர் வீடு தருவார் கண்கட்டி கூட்டி சென்றவர் வருவார் என்று காத்திருந்து உயிர்போயிற்று, சாந்த நாட்டிற்குள் அகதி வாழ்கை இதுவா சுதந்திரம், போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.