எமது கட்சியை பற்றி பிழை கூறுவதையிட்டு ஒருவகையில் பெருமையடைகின்றோம்.அரியம்

எமது கட்சியை பற்றி பிழை கூறுவதையிட்டு ஒருவகையில் பெருமையடைகின்றோம் காரணம் காய்த்த மரத்தைப்பார்த்துதான் அனைவரும் கல்லையோ, பொல்லையோ நீட்டுவார்கள் என மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு திருப்பழுகாமம் இந்துகலா மன்றத்தின் நாற்பதாவது ஆண்டு நிறைவும், இந்துகலாமன்ற அறநெறி பாடசாலையின் பொங்கல் விழாவும் அறநெறி பாடசாலை கட்டிட திறப்பு விழாவும் அதன் தலைவர் ஜீவரெட்ணம் தலைமையில் நடைபெற்றத இந் நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
தமிழராகிய நாங்கள் எப்பொழுதும் அற நெறியுடன் சேர்ந்து வாழவேண்டும் அப்பொழுதுதான் எமது பண்பாட்டையும் அதனுடன் கூடிய கலாசார ஒழுங்க விழுமியங்களை நாங்கள் தக்கவைத்துக் கொண்டு சிறந்த பிரஜையாக மிளிரமுடியும். இந்த நாட்டிலே தமிழருக்கு என்று தனித்துவமான பண்பாடு காணப்படுகின்றது. அது தற்காலத்திலே அரிகிவருகின்ற நிலையினை நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அதனை நாங்கள் வெறுமனே விட்டுவிட முடியாது. அதனை பாதுகாத்து எதிர்கால சந்ததிக்கு கையளிப்பது எமது தலையாய கடமையாகும்.
அந்த வகையிலே திருப்பழுகாமம் இந்துகலா மன்றமானது இவ்வாறன அறநெறிக்கல்வியினை மாணவர் மத்தியிலே புகுத்தி  தமது கிராமத்திற்கான பண்பாட்டினை அழியவிடாது பாதுகாத்து கல்வியில், ஒழுக்கத்தில், பண்பாட்டில், பொருளாதாரத்தில், தமிழ்பற்றில்; இன்றுவரை நிமிர்ந்து நிற்கின்றமைக்கு இதுவே காரணமாகும் இட்மன்றத்தின் செயற்பாட்டிற்கு எனது பாராட்டுக்கள்.
தற்பொழுது எதற்கு எடுத்தாலும் எமது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பிழை கூறுவதில்தான் கவனமாக இருக்கின்றனர். நியாயமான காரணங்களை வைத்து பிழை கூறினால் நாங்கள் அதனை ஏற்றுக் கொள்வோம். ஆனால் பொய்யான காரணங்களை முன்னிறுத்தி விமர்சனங்களை மேற்கொள்வதனை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
  உதாரணமாக அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதன் பின்னார் கிழக்கு மாகாண அரசதிணைக்களங்களின் தலைவர்களாக முஸ்லிங்கள் மாத்திரம் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் இதற்கு காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் எனவும் கூறிவருகின்றனர்.
 உண்மையில் அவ்வாறில்லை 2008 ஆம் அண்டு சந்திரகாந்தன் முதலமைச்சாராக இருந்த காலத்தில் இருந்து ஹிஸ்புல்லா ஆளுநராக வந்த காலம் தொடக்கம் இது இடம்பெற்று வருகின்றது. இந் நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது கிழக்கு மாகாண ஆட்சியில் இரண்டுவருடங்கள் மாத்திரமே இருந்தது. இந்த காலகட்டத்தில் எந்தவிதமான முஸ்லிம் அதிகாரிகளும்; நியமிக்கப்படவில்லை இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
எமது கட்சியை பற்றி பிழைகூறுவதையிட்டு ஒருவகையில் பெருமையடைகின்றோம் காரணம் காய்த்த மரத்தைப்பார்த்துதான் அனைவரும் கல்லையோ, பொல்லையோ நீட்டுவார்கள்  அவ்வாறுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்களுக்கு எதோ நன்மையான பணிகளை மேற்கொண்டு  வருகின்றது  இதனால்தான்தான் எமது கட்சியை பார்த்து விரல் நீட்டுகின்றனர். வேலை செய்யாமல் இருந்தால் இவ்வாறான விமர்சனங்கள் எம்மை நோக்கி எழுவதற்கு சந்தர்ப்பமில்லை. இதனால் நாங்கள் ஒன்றை உணர்கின்றோம் உண்மையில் சர்வதேச ரீதியில்,தேசிய ரீதியில் மாவட்ட ரீதியில்,பிரதேச ரீதியில் எமது கட்சிதான் முன்னணியில் இருக்கின்றது என்பது இவ்வாறான பொய்யான விமர்சனங்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. என அவர் இதன்போது தெரிவித்தார்…..பழுகாமம் நிருபர்