மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை படுகொலையின் 32வது ஆண்டு நினைவு தின நிகழ்வு நாளை(28) திங்கட்கிழமை பி.ப.02மணிக்கு மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுதூபி வளாகத்தில் நடைபெறவுள்ளதாக மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளரும், பிரதேச தமிழரசு கட்சியின் தலைவருமான சி.புஸ்பலிங்கம் தெரிவித்தார்.
கடந்த 1987ம் ஆண்டு முதலைக்குடா இறால்வளர்ப்பில் வேலைசெய்த மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலையில் முனைக்காடு, முதலைக்குடா, மகிழடித்தீவு, பண்டாரியாவெளி, படையாண்டவெளி, கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவு, அம்பிளாந்துறை, கற்சேனை, பட்டிப்பளை, தாந்தாமலை ஆகிய பகுதிகளைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அகப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நினைவு தினத்தினை இப்பகுதி மக்கள் வருடாந்தம் அனுஸ்டித்து வருகின்றனர்.
இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிப்பளை கிளையினரால் நடாத்தப்படவுள்ள நினைவு தின நிகழ்வில், நினைவு சுடர்கள் ஏற்றுதல், மலரஞ்சலி வணக்கம் தெரிவித்தல், அகவணக்கம் செலுத்துதல், நினைவு உரைகள், “மறைந்தாலும் மறையாது” என்ற சிறப்பு கவியரங்கம் போன்ற நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
இந்நினைவு நிகழ்வில், கொக்கட்டிச்சோலை படுகொலையில் உயிர்நீத்த உறவுகளின் உறவுகளும் தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்புனர்கள், கிழக்கு மகாணசபை முன்னாள் உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாநகர முதல்வர், பிரதி முதல்வர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள், உறுப்பினர்கள், மற்றும் பிரதேச இலங்கை தமிழரசு கட்சி கிளைகளின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக மண்முனை தென்மேற்கு பிரதேச இலங்கை தமிழரசு கட்சி கிளையின் தலைவர் குறிப்பிட்டார்.