மட்டு. மேற்கில் மூடுவிழா காணப்போகும் பாடசாலைகள்?

—-         படுவான் பாலகன் —-

‘அனுபவமே வாழ்க்கை, அவ்வாழ்க்கையின் பெரும்பகுதி பட்டறிவே. அவற்றுள்ளும் சிறுபகுதி படிப்பறிவு. உலகத்தினையே கைக்குள் அடக்கி என்ன நடைபெறுகின்றதென நொடியில் பார்க்கும்,கேட்கும் நவீன காலத்தில் இருந்து கொண்டும், ஆரம்ப கல்வியினை பெற்றுக்கொள்ள முடியாமல், ஆசிரியர் இன்றி தவிக்கின்ற பிரதேசமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப்பிரதேசம் மாறியுள்ளமை வேதனையிலும், வேதனை தரும் விடயமே’ என புளுகுணாவை குளத்துக்கட்டில் நின்று கொண்டு கனகசபையும் கதிர்காமத்தம்பியும் பேசிக்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள படுவான்கரைப்பகுதி மக்கள், அடிப்படை வசதிகளைக் கூட இன்னமும் பெற்றுக்கொள்ளமுடியாமல் இருக்கின்றனர். இதற்காகத்தான் இன்றுவரை போராடிக்கொண்டிருக்கின்றனர். இவர்களது போராட்டங்களுக்கான தீர்வுகள் பலவருடங்களை கடந்தும் இன்னமும் கிடைத்தபாடில்லை. இந்நிலையில்தான் கல்வியைப் பெறுவதற்குக் கூட போராட வேண்டியவர்களாக அவர்கள் உள்ளனர். கடந்த வாரம் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வெற்றிடம் தொடர்பில் கட்டுரை வெளியாகியிருந்தது. அக்கட்டுரையை தழுவியதாகவே கதிராமத்தம்பியினதும், கனகசபையினதும் பேச்சுக்களும் அமைந்திருந்தன.

ஆரம்பப்பிரிவிற்கான ஆசிரியர் வெற்றிடங்கள் இப்பிரதேசத்தில் 65க்கும் மேல் உள்ளன. ஆனாபோதிலும்,மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பப்பிரிவிற்கான ஆசிரியர்கள் போதிய அளவுக்கு இருப்பதாக பேசிக்கொள்கின்றனர். அவ்வாறெனின் எங்கோ ஒரு வலயத்தில் ஆசிரியர்கள் மிதமிஞ்சி இருக்கின்றனர். அவ்வாறானவர்களை இப்பிரதேசத்திற்கு நியமிப்பதன் மூலமாக இப்பிரதேசத்து மாணவர்களின் கல்வி சீராக்கப்படும். அதற்கு மாறாக இன்றுவரை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலிருந்து இடமாற்றம் பெற்று செல்கின்றனரே தவிர இப்பிரதேசத்திற்கு இடமாற்றம் பெற்று எவரும் வருவதாகத் தெரியவில்லை என்பதனை அறிக்கூடியதாகவிருப்பதாக கூறும் கனகசபை. ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக பாடசாலைகள் சிலவற்றினை மூடவேண்டிய நிலையேற்பட்டிருப்பதாக கவலையுடன் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள கிராமமாக கச்சக்கொடிசுவாமிமலை கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள மாணவர்கள் கல்வி கற்பதற்கென ஆரம்பப்பிரிவு பாடசாலையொன்று கச்சக்கொடிசுவாமிமலையில் அமைந்துள்ளது. இப்பாடசாலையில் தரம்1தொடக்கம் தரம் 5 வரையான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இங்கு மூன்று ஆசிரியர்களும் ஒரு அதிபரும் கடமையாற்றியிருந்த நிலையில்,அண்மையில் நடைபெற்ற இடமாற்றத்தின் மூலமாக இரு ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர். இதனால் தற்போது ஒரு ஆசிரியர், அதிபர் ஆகிய இருவருடன் மாத்திரமே இப்பாடசாலை இயங்கி வருகின்றது. ஒருநாளில் அதிபர் வலயத்தில் அல்லது கோட்டத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ சமுகமளித்தால் அல்லது விடுமுறை எடுத்தால் அப்பாடசாலை ஒரு ஆசிரியருடன் மாத்திரமே இயங்கும். அதேநேரம் அதேநாளில் அவ்வாசிரியர் விடுமுறை எடுத்தால் பாடசாலையும் அன்றைய நாளில் விடுமுறை நாளாகும். இதன்காரணமாக கச்சக்கொடிசுவாமிமலை பாடசாலை அரசாங்கத்தால் வழங்கப்படும் விடுமுறை நாட்களைவிட இன்னும் பல விடுமுறைகளை பெற்றுக்கொள்ளப்போகின்றமையே உண்மையென வதங்கிய முகத்துடன் கனகசபை கதிராமத்தம்பியைப் பார்த்துக் கூறினான்.

இதுபோல மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறையின் காரணமாக உள்ள சில பாடசாலைகளை மூடவேண்டிய துர்ப்பாக்கியத்துடன் இருப்பதாக கனகசபையிடம்,கதிராமதம்பியும் கூறினான். குளுவினமடு விநாயகர் வித்தியாலயம், மரப்பாலம் அரசினர் தமிழ்கலவன் பாடசாலை,வெலிக்காகண்டி விபுலானந்தா வித்தியாலயம், பாலர்சேனை கலாசூரி விநாயகமூர்த்தி வித்தியாலயம், தளவாய் சுவாமி அஜராத்மானந்தாஜீ வித்தியாலயம்,கரவெட்டியாறு விஜித்தா வித்தியாலயம்,இருநூறுவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை போன்ற பாடசாலைகள் ஒரு அல்லது இரு ஆசிரியர்களுடன் மாத்திரமே இயங்கி வருகின்றன. இந்நிலை இப்பாடசாலைகள் மூடுவிழாவினை சந்திப்பதற்கான அறிகுறிகளே. இவ்வாறு இப்பாடசாலைகள் மூடப்பட்டால் பல மாணவர்கள் கல்வியினை இழப்பர் என்பதே யாதார்த்தம் எனக்கூறிய கனகசபை, இடமாற்றங்கள் செய்து ஆசிரியர்களை பெற்றுக்கொள்வது கடினமாக எண்ணினால்,மாவட்டத்தில் எத்தனையோ பட்டதாரிகள் வேலையின்றி, ஆசிரியர் போட்டிப்பரீட்சையிலும் சித்தியடைந்து மனவிரக்தியுடன் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர். இவர்களுக்கு நியமனங்களை வழங்கி இவ்வாறான ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய முடியும். இதற்கான நடவடிக்கைகளாவது செய்து மட்டக்களப்பு மேற்கு மாணவர்களின் கல்விக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரம்சேர்க்க வேண்டும் எனக்கூறிய கனகசபை குளக்கட்டில் இருந்து இறங்கி துவிச்சக்கரவண்டியில் தனது பயணத்தினை கிழக்கு நோக்கி  ஆரம்பித்தான்.