மட்டக்களப்பில் மூன்று பிரதேச மக்கள் சுத்தமான குடிநீரைப் பெறுவதில் பின்தங்கி உள்ளனர்.

0
732

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, கிரான் போன்ற பிரதேசங்களில் உள்ள மக்கள் சுத்தமான குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கொல்லநுலை, குளுவினமடு, தேவிலாமுனை ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(23) புதன்கிழமை கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் நடைபெற்ற போதே இதனைக்குறிப்பிட்டார்.

மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

உன்னிச்சைக்குளத்திலிருந்து குழாய்மூலமாக கொண்டுவரப்படுகின்ற குடிநீரே இம்மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. மொத்தமாக நான்கு இலட்சம் ரூபாய் செலவில் இக்குடிநீர் வழங்கி வைக்கப்பட்டது. இதற்கான செலவில் மூன்று இலட்சம் ரூபாய் பணத்தினை இராமகிருஸ்ணமிசன் அமைப்பினரும், ஒரு இலட்சம் ரூபாய் பணத்தினை குளுவினமடு மக்களும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாவட்ட அரசாங்க அதிபர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இப்பிரதேசத்திலே இருந்து கிடைக்கப்பெறுகின்ற குடிநீரை நகரத்தில் இருக்கின்றவர்கள் பாவிக்கின்றனர். ஆனால் இந்தப்பிரதேசத்தில் இருப்பவர்களுக்கு அவ்வாய்ப்பு இல்லாமல் இருந்தமையை அறிவோம். அவ்வாறான பிரதேசங்களில் சிறுபகுதியினர் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதனையிட்டு மகிழ்கின்றேன். இதற்காக இராமகிருஸ்ணமிசன் வழங்கியிருக்கின்ற நற்பணிக்கு, நல்ல முயற்சிக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இப்பிரதேசத்திலே உள்ள கொல்லநுலை, தேவிலாமுனை, குளுவினமடு ஆகிய மூன்று கிராமங்கள் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக நன்மை பெறுகின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயம்.

மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் அடிப்படை தேவைகள் வழங்கப்படாதிருக்கின்றன. இதன் காரணமாக வறுமை, கல்வியிலே பின்தங்கியிருக்கின்ற நிலைமை உருவாகியுள்ளது. இவற்றினை சாதகமாக பயன்படுத்தி பல்வேறான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. இவற்றினைத் தவிர்ப்பதற்கு அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமாகின்றது. இதற்காக நிலைத்திருக்க வேண்டிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியும் உள்ளது. அரசாங்கம், நிறுவனங்கள், மக்கள் இணைந்து செய்கின்ற செயற்பாடுகள் நிலைத்திருக்கும் செயற்பாடுகளாக அமையும். அதேவேளை மிகச்சிறப்பான செயற்பாடுகள் செய்யப்பட வேண்டுமாகவிருந்தால் அடிப்படையில் இருந்தே செய்யப்பட வேண்டும். மத்திய அரசினை மாத்திரம் நம்பியிருக்காமல் உள்ளுராட்சி மன்றங்கள் ஊடாக மிககாத்திரமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். என்றார்.