பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைப் பாதணிகள் வழங்கல்

புது வருடத்தை முன்னிட்டு மட்டுப்படுத்தப்பட்ட கிழக்கு மாகாண பெண்கள் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தில் அங்கம் வகிக்கும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைப் பாதணிகள் அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரின் வேண்டுகோளுக்கிணங்க சிறுவர்களுக்கான அவசர உதவி சர்வதேச நிறுவனத்தின் அனுசரணையுடன் இப்பாதணிகள் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.
இதன்போது மாவட்ட செலயக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அ.சுதர்சன், சிறுவர்களுக்கான அவசர உதவி சர்வதேச நிறுவனத்தின் தேசியப் பணிப்பாளர் வி.தர்சன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
கல்லடி விவேகானந்தா வித்தியாலயம், சிவானந்தா வித்தியாலயம், வாழைச்சேனை இந்துக்கல்லூரி, பட்டிருப்பு மகா வித்தியாலயம், எருவில் கண்ணகி வித்தியாலயம், கல்லடி வேலூரி சக்தி வித்தியாலயம், புதுக்குடியிருப்பு கலைமகள் வித்தியாலயம் உள்ளிட்ட பல பாடசாலைகளில் பயிலும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.